17 November 2014 12:18 pm
`கேரளாவின் நீர்ப்பிடி பகுதிகளில் பெய்த பெருமழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டி வேகமாக உயர்ந்து வரும் நிலையில், அணையின் தண்ணீர்த் தேக்க அளவை உடனடியாக குறைக்க வேண்டுமென்று கோரி கேரள அரசு இந்திய உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், பெரியாறு அணையில் மொத்தம் இருக்கும் 13 மதகுகளில் இன்னமும் இரு மதகுகள் பழுது பார்க்கப்படவில்லை என்றும் அந்த இரண்டு மதகுகளையும் சரிசெய்யும் வரை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டாம் என்றும், இடுக்கிப் பிரதேச பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, தற்போது அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டியுள்ள நிலையில், கேரள அரசு இந்த புதிய மனுவை சனிக்கிழமையன்று தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.