போதைக் கும்பல் தலைவர் தப்பிய வழக்கில் மெக்ஸிகோவில் பலர் கைது - தமிழ் இலெமுரியா

21 September 2015 10:18 am

மாபெரும் போதைக்கும்பல் தலைவனான யொவாகின் கஸ்மன் மெக்ஸிக்கோவின் சிறைச்சாலை ஒன்றிலிருந்து கடந்த ஜூலை மாதம் தப்பிச்சென்ற சம்பவத்தில் தொடர்புடைய 13 பேரை அந்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். மத்திய சிறைச்சாலைகளின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கஸ்மன் தப்பிச்சென்ற அல்ட்டிபிளானோ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் முன்னாள் இயக்குனர் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டவர்களில் அடங்குவர். கஸ்மன் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்திலில் குளியலறைக்குக் கீழே அமைக்கப்பட்டிருந்த 1.5 கி.மீ. நீள சுரங்கம் வழியாக ஜூலை மாதத்தில் கஸ்மன் தப்பிச் சென்றார். கஸ்மன் இப்படி ஒரு உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து தப்பிச்செல்வது இது இரண்டாவது முறையாகும். கஸ்மனுக்குச் சொந்தமான சினோலோ குழுதான் மெக்ஸிகோவிலிருந்து பெருமளவில் போதைப்பொருட்களை அமெரிக்காவுக்குக் கடத்துகிறது. மெக்ஸிகோவின் ரகசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் இருவர், சிறைக் கட்டுப்பாட்டு அறையின் ஊழியர்கள் இருவர் உள்பட 7 பேர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். கஸ்மன் தப்பிச்சென்றது தெரிந்த பிறகும், எச்சரிக்கை மணியை ஒலிக்கசெய்யவில்லை என்று அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 1993ல் குவாதமாலாவில் முதன்முதலாகக் கைதுசெய்யப்பட்ட கஸ்மன் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு, சலவைக்கு துணிகளை எடுத்துச்செல்லும் ஒரு கூடையில் ஒளிந்துகொண்டு தப்பினார். அதன் பிறகு 13 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்த அவர், 2014ல் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். அமெரிக்க அதிகாரிகளின் ரகசிய கண்காணிப்பும் இதற்கு உதவியது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி