21 August 2013 1:54 am
மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராளியான நரேந்திர தபோல்கர் இன்று புனேவில் சுட்டுக் கொல்லப்பட்டார். மகாராட்டிர அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்கிற அமைப்பை நிறுவி, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடி வந்த சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர் தாபோல்கர். இன்று காலை புனே நகரில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை ஓம்கேசுவர் கோவில் அருகே ஒருவர் சுட்டுவிட்டுத் தப்பி விட்டார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். டாக்டரான இவர் 1983ம் ஆண்டு முதல் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பகுத்தறிவுவாதியாவார். மாந்தீகர்கள், மதவாதிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தார். மதுவிலக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் சேமிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார். ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது டொடர் போராட்டத்தின் விளைவாகவே மூட நம்பிக்கை ஒழிப்பு மசோதாவை கொண்டு வர அரசு சம்மதித்து, விரைவில் அம்மசோதா கொண்டு வரப்படும் எனச் சமீபத்தில் உறுதியளித்தது. இந்நிலையில் 69 வயது நிறம்பிய அவர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.