26 June 2014 4:31 am
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் மராத்தா சமூகத்தினரும், சிறுபான்மையினத்தவரான முஸ்லிம்களும் தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வந்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு அக்டோபரில் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமானால், மராத்தா மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதல்வர் பிருத்விராஜ் சவானுக்கு கடும் நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை சவான் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில், மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதமும், முஸ்லிம்களுக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.