மகிந்த ராஜபக்சே சொல்வதும் செய்வதும் வெவ்வேறாக உள்ளது!- யாழ் முதலமைச்சர் விக்னேசுவரன் - தமிழ் இலெமுரியா

4 December 2013 12:27 am

இலங்கை அதிபர் ராஜபக்சே சொல்லில் ஒரு முகத்தையும் செயலில் இன்னொரு முகத்தையும் காட்டி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேசுவரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாரென்றும் கேட்டதெல்லாம் கொடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறி வருகின்ற நிலையில் இங்கு நடப்பது வேறாகவே உள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சரின் யாழிலுள்ள அலுவலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த முதலமைச்சர் விக்னேசுவரன் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ஒத்துழைப்பதாகத் தான் கூறி வருகின்றார். ஆகவே அவ்வாறான ஒத்துழைப்புக்களை எமக்கு வழங்குவதில் ஜனாதிபதியுடன் எமக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால் நடைமுறையில் நாங்கள் பார்ப்பது அதற்கு முரணாகத் தான் இருக்கின்றது. உதாரணமாக இங்கு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலப் பகுதியில் நான் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன். அதாவது வடக்கில் நடைபெறுவது மகிந்த ராஜபக்சே சிந்தனையா அல்லது மகிந்த ஹத்துருசிங்க சிந்தனையா எனக் கேட்டேன். இந்த நிலையே மீண்டும் இங்கிருக்கின்றது. ஆதனால் அதே கேள்வியை மீண்டும் கேட்கின்றேன். இதேபோன்று கடந்த வாரம் ஜனாதிபதியினை சந்தித்திருந்த நார்வே நாட்டின் தூதுவரிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படத் தயாரென்றும் அதற்கான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். ஆனால் இங்கு நடைபெறுவது வேறு. இதன் காரணத்தினால் நாங்கள் பரீசிலிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அல்லது இது சம்பந்தமாக ஜனாதிபதிக்கு எடுத்தியம்ப வேண்டி இருக்கின்றது. ஆகவே இத்தகைய விடயங்கள் மற்றும்  இங்குள்ள நிலைமைகள் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி