மக்களவைத் தேர்தலில் காங்கிரசு அரசைத் தூக்கி எறியுங்கள்! – வைகோ - தமிழ் இலெமுரியா

17 September 2013 1:54 am

அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி விருதுநகரில் ம.தி.மு.க.வின் மாநாடு நேற்று நடைபெற்றது.. மாலையில் சிறப்புரையாற்றிய வைகோ கூறியதாவது: விருதுநகர் மண், திராவிட இயக்கத்தை வளர்த்தது. கடந்த 20 ஆண்டாக நாங்கள், பல்வேறு துன்பங்களால் அவதிப்பட்டு வருகிறோம். 2014 மக்களவைத் தேர்தல், கதவை தட்டுகிறது; நாம் இலக்கை சரியாக நிர்ணயிக்க வேண்டும். சட்டசபை தேர்தலை புறக்கணித்தோம். ஆனால், லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போகிறோம். விலகி நிற்கப் போவதில்லை. அப்படி என்றால், ம.தி.மு.க., யாரோடு கூட்டணி வைக்கப் போகிறது என, அடுத்த கேள்வி வரும். அதுகுறித்து செய்தியாளர்கள் என்னிடம் தொடர்ந்து கேட்கின்றனர். ஒருவேளை தி.மு.க.,வோடு கூட்டணியா என, யூகம் கிளம்புகிறது. மாற்றம் வேண்டும் லோக்சபா தேர்தலில் மாற்றம் வேண்டும். ஊழல் மற்றும் இனப் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் அரசை தூக்கியெறிய பொதுமக்கள் தயாராக வேண்டும். காங்கிரஸ் அரசு அல்லாத மாற்று அரசு உருவாக வேண்டும். இந்த மாற்று அரசு அமைப்பதற்காக ம.தி.மு.க.வினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். காங்கிரஸ் படுதோல்வி இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்த காரணத்திற்காக, தேர்தலில் காங்., படுதோல்வியடையும். அதனால், அக்கூட்டணியில் இருந்த நமக்கும் பாதிப்பு ஏற்படும் என்கிற எண்ணத்தில், திடீரென இலங்கை தமிழர்களை காப்பதற்காக, "டெசோ’என்ற அமைப்பை கருணாநிதி துவக்கினார். கூட்டணிக்கு, அவர்கள் வலைவீசி முயற்சிப்பதாக கூறப்படுகிறது. நாங்கள் ஒருபோதும் அக்கட்சியுடன் கூட்டணி வைக்கமாட்டோம்.  கருணாநிதியின் சித்து வேலை தி.மு.க., தலைவர் கருணாநிதி சித்துவேலைக்காரர்; அவரது அலமாரியில் பல்வேறு விளம்பரப்பலகைகள் உள்ளன; அவற்றை அடிக்கடி அவர் மாற்றிக் கொள்வார். பாம்புக்கு தலை வைப்பார்; மீனுக்கு வால் வைப்பார்; முயலை காப்பாற்றுவது போல, அதனை வேட்டையாடி வருபவனுக்கும் உதவுவார். "ஈழம்’ ஆதரவு என்பார்; திடீரென அதனை மாற்றுவார். சுயமரியாதை குறித்து மாற்றி மாற்றி பேசுவார். தன் குடும்பத்திற்காக, அண்ணாவின் கொள்கைகளை கருணாநிதி குழிதோண்டி புதைத்து விட்டார். அதிமுக உடன் கூட்டணி அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைப்பீர்களா? என அடுத்த கேள்வி எழுகிறது. அவர்களாகத்தான் கூட்டணிக்கு அழைத்தார்கள். நான், எதையும் எடுத்தேன்..கவிழ்த்தேன் என, செய்யமாட்டேன். ஆனால், மத்தியில் வாஜ்பாய் ஆட்சி பதவியேற்ற ஓராண்டில் அவர்கள் (அ.தி.மு.க.,) கவிழ்த்தனர். எழுச்சியோடு இருக்கிறோம் கடந்த சட்டசபை தேர்தலில் முதலில் 8 தொகுதிகளை தருவதாக கூறினர்; பின், அது ஏழாக குறைந்தது; கடைசியில் "ஆறு தொகுதிகள் மட்டுமே தருவோம்’ என்றனர். சட்டசபைக்குள் ம.தி.மு.க., நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவே, திட்டமிட்டு செய்ததை புரிந்து கொண்டோம்; நம்ப வைத்து கழுத்தறுத்த அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினோம். எங்களுக்கு சுயமரியாதைதான் முக்கியம்.  சட்டசபை தேர்தலை புறக்கணித்ததால், ம.தி.மு.க., காணாமல் போய்விடும் என, சிலர் நினைத்தனர். ஆனால், கட்சி எழுச்சியோடு உள்ளது; எதற்கும் கலங்காத தொண்டர்கள்தான் அதற்கு காரணம். யாருடன் கூட்டணி லோக்சபா தேர்தலில், எதிரி எந்த காயை நகர்த்துகிறார் என்பதை பார்த்து, அதற்கு ஏற்ப நாம் காய் நகர்த்துவோம். அதற்கு ஏற்ப, கூட்டணி வியூகம் இருக்கும். எதிரி சர்ப்ப வியூகம் வகுத்தால், நாங்கள் கருட வியூகம் வகுப்போம். போர் மூளப்போகிறது; பகை சூழ்ந்து விட்டது. எல்லா திசைகளில் இருந்தும் ஆயுதங்கள் பாயும். ஆனால், புடம் போட்ட தங்கமான, கூர்மையான தீட்டப்பட்ட வாளைப் போன்ற ம.தி.மு.க., எதையும் துணிவுடன் எதிர்கொன்று வெற்றி பெறும். அது சஸ்பென்ஸ் தொண்டர்களின் எண்ணப்படியே மக்களவை தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடும் என்பதால் தொண்டர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும். இதில், முதல் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களை சேர்க்க வேண்டும். யாரோடு கூட்டணி என்பது எனக்கும், எனது கட்சி தொண்டர்களுக்கும் மறைமுகமாக தெரியும். சரியான நேரம் வரும் போது அறிவிப்பை வெளியிடுவேன் டெல்லிக்குப் போவோம் லோக்சபா தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று, டெல்லிக்கு செல்வோம். அங்கு, தமிழக மக்களின் அடிப்படை, வாழ்வாதார பிரச்னைக்காக குரல் கொடுப்போம். அதற்கு, "ம.தி.மு.க.,வுக்கு வாய்ப்பு தாருங்கள்’ என தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து வேண்டுகோள் விடுக்க வேண்டும். அதற்கான பணியை, உடனே துவங்க வேண்டும் என வைகோ பேசினார். 

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி