15 October 2013 12:54 am
மத்தியபிரதேச மாநிலம் ததியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் துர்காதேவி கோவிலில் நேற்று முன் தினம் நவராத்திரி விழா நடந்தது. அதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிந்து நதி பாலத்தின் வழியாக நடந்து சென்றனர். அவர்கள் தரிசனத்துக்காக பாலத்தின் மீது காத்து இருந்தனர். அப்போது திடீர் என்று நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் நெரிசல் மேலும் அதிகரித்தது. இதில் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்தும், நெரிசலில் சிக்கியும் 115 பேர் பலியானார்கள். பாலம் உடைந்து விட்டதாக வதந்தி பரவியதன் காரணமாகவே இந்த நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 2 மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு தலா ரூ.1½ லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவ்கான் உத்தரவிட்டுள்ளார். மத்தியபிரதேச சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த சோக சம்பவம் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட முதலமைச்சருக்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. இதனால் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மட்டும் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். 115 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, தலைமையமைச்சர் மன்மோகன் சிங், காங்கிரசு தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து அனுதாப செய்தி வெளியிட்டுள்ளனர். 115 பேர் பலியானதற்கு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் போர்க் கொடி உயர்த்தி உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடியே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியது. இதற்கிடையே 115 பேர் பலியான சம்பவம் நடந்த ததியா மாவட்ட கலெக்டர் சங்கேத் பாண்ட்வே, போலீஸ் சூப்பிரண்டு, சோலங்கி, துணை கலெக்டர் மஹிப் தேஜஸ்வி, போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோரை மத்திய பிரதேச அரசு இடைக்கால பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அனுமதியுடன் மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுதவிர விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த அதிகாரிகளும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மொத்தம் 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.