25 November 2015 10:38 am
மலேரியாவை தடுக்கும் மரபணுக்களை கொசுக்களின் மரபணு தொகுதிக்குள் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செலுத்தியுள்ளனர். இதன்மூலம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களுக்கு பிறந்த கொசுக்களும், மலேரியாவை தடுக்கும் அதே மரபணுக்களை கொண்டிருப்பது கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. இந்த யுத்தியின் மூலம் பெருமளவு கொசுக்களை உருவாக்கி, மனிதர்களுக்கு மலேரியா பரவாமல் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. இனிவரும் காலங்களில் மலேரியாவை முற்றாக இல்லாது ஒழிக்கலாம் என்பதற்கான சாத்தியம் ஒன்று இருப்பதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மலேரியாவை தடுக்கும் மரபணுக்களை கொசுக்களின் டிஎன் ஏ வில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய முறையின் மூலமே இது சாத்தியம் என அதனை உருவாக்கிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காலிஃபோனியா ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த புதிய வகை தொழில்நுட்பத்துடன் கூடிய கண்டுபிடிப்பு ஆட்கொல்லி நோயான மலேரியாவை ஒழிப்பதற்கான ஒரு புதிய அறிவியல் சாதனை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வு கூடத்தில் இந்த பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் அடுத்த கட்டமாக களத்தில் தமது திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கூறுகின்றனர். மரபணு திருத்தியமைக்கப்பட்ட கொசுக்களின் சந்ததியிலும் 100 வீதம் மாற்றியமைக்கப்பட்ட மரபணு உள்ளமை பிரமிக்கச் செய்வதாக ஆய்வாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்த ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் அந்தோனி ஜேம்ஸ் இந்த ஆய்வு எதிர்காலத்தில் நல்ல பலனைக் கொடுக்கும் என்றார். இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள மரபணுவை கொசுக்களில் செலுத்தும் போது அவை மலேரியா ஒட்டுண்ணிகளை செயலிழக்க செய்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாற்றியமைக்கப்பட்ட மரபணுக்கள் மூலம் பிறக்கும் கொசுக்கள் கடித்தால் மலேரியா நோயின் தாக்கம் ஏற்படாது என ஆய்வாளர்கள் ஆழ்ந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். உலக மக்கள் தொகையில் 50 வீதம் வரையானோர் மலேரியா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகும் அச்சம் உள்ளது. மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து கொடுக்கப்பட்டாலும் இந்த நோய்த்தாக்கத்தால் ஆண்டொன்றிற்கு 580 000 பேர்வரை பலியாகின்றனர்.