17 December 2014 11:59 am
பாகிஸ்தானில் பள்ளி மாணவர்களை சுட்டுக்கொன்ற மிருகவெறி பிடித்த தாலிபான்கள் இந்த மண்ணில் நடமாட தகுதியற்றவர்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இருதயத்தில் இரத்தத்தை உறையச் செய்யும் படுபயங்கரமான கொடூரச் சம்பவம் பாகிஸ்தானில் நடைபெற்றுள்ளது. பெஷாவரில் இராணுவத்தினர் நடத்தும் பள்ளிக்கூடத்தில் நேற்று (16.12.2014) காலை 10.30 மணி அளவில், தலிபான்கள் பாகிஸ்தான் இராணுவச் சீருடையில் பள்ளியின் வகுப்பறைகளுக்குள் நுழைந்து, தானியங்கித் துப்பாக்கிகளால் மாணவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். இதில், 140 மாணவர்களும், 9 ஆசிரியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு ஆசிரியை உயிரோடு எரிக்கப்பட்டுள்ளார். அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சுகள் நடுநடுங்கியவாறு மேஜைகளுக்குள் பதுங்கியபோதும் அவர்களை கண்மண் தெரியாமல் சுட்டுக் கொலை செய்துள்ளனர். அந்த நேரத்தில் சின்னஞ் சிறுசுகள் எப்படி எல்லாம் பயந்து துடித்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்யும்போதே நமது மனம் நடுங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொலைவெறி தலிபான்களின் மிரட்டலையும், எச்சரிக்கையையும் மீறி பள்ளி மாணவி மலாலா யூசுப் சாய், "மாணவிகள் பள்ளி சென்று கல்வி கற்க வேண்டும்" என்று பிரச்சாரம் செய்து வந்ததால் தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர். நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்தும் அதிசயமாக உயிர் தப்பினாள் மலாலா. இந்தக் கோரப்படுகொலைகள் நடந்ததால் கண்ணீரில் கதறும் அப்பிள்ளைகளின் பெற்றோர் மிகுந்த வீரத்துடன், "நாங்கள் அஞ்சமாட்டோம்; எங்கள் பிள்ளைகளை – புதல்வியரை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவோம்" என்று சபதம் பூண்ட செய்தி மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்தக் கொலைவெறி தலிபான்கள் மனித சமுதாயத்தில் நடமாட தகுதியற்றவர்கள்; வேருடன் களையப்பட வேண்டியவர்கள். இரத்த வெள்ளத்தில் மாண்டுபோன பெஷாவர் பள்ளி மாணவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.