25 November 2015 10:33 am
காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் பல முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான ஏ.எஸ். பொன்னம்மாள் நேற்று 24-11-2015 மதுரையில் காலமானார். அவருக்கு வயது 88. இந்திய தேசிய காங்கிரஸின் சார்பில் 1957லிருந்து 67வரை இருமுறை சோழவந்தான் தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்கு பொன்னம்மாள் தேர்வுசெய்யப்பட்டார். பிறகு 1980ல் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பிறகு காங்கிரசின் சார்பில் பழனி தனித்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 89, 91 ஆகிய ஆண்டுகளில் நிலக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். திண்டுக்கல் மாவட்டம் அழகம்பட்டியைச் சேர்ந்த பொன்னம்மாள், சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். முதலில் வத்தலகுண்டுவிலிருக்கும் தனியார் மருத்துவமனையிலும் பிறகு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று 24-11-2015 அவர் காலமானார். இரண்டு முறை தற்காலிக சட்டப் பேரவைத் தலைவராக இருந்த ஏ.எஸ். பொன்னம்மாள், காங்கிரஸ் கட்சியிலிருந்து மூப்பனார் பிரிந்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியைத் துவக்கியபோது அதில் இணைந்தார். மூப்பனார் மறைவுக்குப் பிறகு மீண்டும் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.