மும்பையில் ஒரு மனித அவலம் - தமிழ் இலெமுரியா

23 September 2015 10:24 am

இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் பணியாற்றும் சுமார் 30,000 துப்புரவுப் பணியாளர்கள் மிகவும் அவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். மும்பையில் சுமார் 30,000 பேர் நகரின் துப்புரவுப் பணியில் உள்ளூர் நிர்வாகத்தினரால் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தத் துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவரும் தலித்துகள். அவர்கள் நகரின் தெருக்களைச் சுத்தம் செய்து குப்பை கூளங்களை அள்ளுவார்கள்.சாக்கடைகளைச் சுத்தம் செய்வார்கள். குப்பைகளைக் கொட்டும் இடங்களிலும் பணியாற்றுவார்கள். இந்தத் தொழிலாளர்கள் அடிக்கடி ஆழமான சாக்கடைகளில் இறங்கி பணியாற்றும் நிலை உள்ளது. சுமார் ஒரு மணி நேரம் உள்ளிருந்து வேலை செய்தபிறகு வெளியே வரும் அவர்களுக்கு உடல் குளிரால் நடுங்கும். இப்பணிக்கு சிறப்புத் திறமைகள் ஏதும் தேவையில்லை. நரகத்துக்குள் இறங்கும் அளவுக்கு உடலிலும், உள்ளத்திலும் உறுதி இருந்தால் போதுமானது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள பர்மார், கனமான கட்டைத் துடைப்பம் ஒன்றால், இந்தப் பாலத்தை சுத்தம் செய்கிறார். சிதறியுள்ள இலைகளை விரைவாக அவர் கூட்டி சுத்தம்செய்ய வேண்டியுள்ளது. இல்லையென்றால் காற்றில் அவை மீண்டும் பரவும். சிறிய அளவிலான குப்பையை அகற்ற அவர் 30 முதல் 40 முறை துடைப்பத்தால் பெருக்க வேண்டியுள்ளது. இந்தப் பணியாளர்கள் அள்ளும் குப்பைகளில் இறந்த பிராணிகளின் உடல்கள், மிச்சமான உணவுகள், எஃகு கம்பிகள், மருத்துவமனைக் கழிவுகள், உடைந்த கண்ணாடிகள் போன்ற பல பொருட்கள் அடங்கும். ஏன், உடைந்துபோன பிளேடுகளும் இருக்கும். குப்பைகள் அள்ளுவது என்பது முதுகை முறிக்கும் ஒரு பணி. அதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களும் காலத்தின் தேவைக்கு ஒவ்வாதவை. நீண்டகாலமாக ஜாதவ் இந்தப் பணியைச் செய்துவந்தாலும், அது குறித்துப் பேசுவதை அவர் விரும்புவதில்லை. அவர் உடலிலும் ஏராளமான வடுக்கள். மும்பை நகரின் கிழக்கு மற்றும் மேற்கு புறத்தில் குப்பைகளைக் கொட்டும் ஐந்து மையங்களுள்ளன. அங்கு எப்போதும் குப்பைகள் மலைபோலக் குவிந்திருக்கும். ஆனால் அங்கு வேலைசெய்யும் பணியாளர்களுக்கு எந்த வசதிகளும் இல்லை. இந்த வேலையில் இருக்கும் ஒரேயொரு சலுகை என்பது, அரசால் அளிக்கப்படும் சிறிய வீடு ஒன்று. அதையும் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். குடும்பங்கள் தமக்குள் எல்லையை வகுத்துக்கொள்ள வேண்டும். இந்த பணியில் ஈடுபடுபவர்களின் மனைவியர் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்படுகிறார்கள். கணவர்கள் மிகச் சொற்ப அளவுக்கே ஊதியத்தை தம்மிடம் அளிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இதனால் குடும்பங்களில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி