26 July 2014 1:31 am
பம்பாய்த் திருக்குறள் பேரவை, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம், தமிழ் மறை மன்றம் ஆகியவற்றின் நிறுவனரும் மும்பையின் மூத்த பத்திரிகையாளருமான பெரியார் பெருந்தொண்டர் சீர்வரிசை சண்முகராசன் (வயது 81) 23.07.2014 அன்று அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார். இவர் தமிழ் இலெமூரியா மாத இதழின் முதன்மையாசிரியர் திரு.சு.குமணராசனின் மாமனார்ஆவார். திரு. சீர்வரிசை சண்முகராசன் நெல்லை மாவட்டம் இராமானுசப்புதூரில் பிறந்தவர். இலங்கைத் தலைநகர் கொழும்பில் வளர்ந்து, பின் மும்பையில் 60 ஆண்டுகளுக்கு முன்பே குடியமர்ந்தவர். மும்பையில் இளமைக் காலம் முதலே குறள் நெறிப் பணியும் தமிழ் இலக்கியப் பணியும் ஆற்றி வந்தார். பம்பாய் திருவள்ளுவர் மன்றம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து பணியாற்றியவர் , திருக்குறள் பேரவை என்ற அமைப்பின் மூலம் தொடர் சொற்பொழிவுகள் நடத்தி பல இளம் பேச்சாளர்களை மும்பையில் உருவாக்கியவர். மும்பைத் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து 2000 ஆம் ஆண்டில் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தைத் தொடங்கியவர். திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரான இவர் திராவிட இயக்கத் தலைவர்கள் பலரிடமும் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். மும்பையின் பல தமிழ் இதழ்களில் பணியாற்றியதோடு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக இருந்தவர். சீர்வரிசை" என்னும் மாத இதழை மிகச் சிறப்பாக நடத்தியவர். அதனாலேயே சீர்வரிசை சண்முகராசன் அன்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். மும்பையின் மூத்த எழுத்தாளர். மும்பை இதழ்கள் மட்டுமல்லாமல் தாயகத் தமிழிதழ்கள் பலவும் இவருடைய படைப்புகளை சுமந்து வந்துள்ளன. ‘நிகழ்வுகள் சிந்தனைகள்’, ‘அன்பின் சுவடுகள்"" உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தமது இறுதி காலம் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். மும்பை எழுத்தாளர் கவிஞர் புதிய மாதவியின் நெருங்கிய உறவினரும் ஆவார். மறைந்த சீர்வரிசை சண்முகராசன் அவர்களின் துணைவியார் திருமதி தவமணி ஆவார். பாவை, நங்கை என்ற இரு பெண் மகவுகளையும், வள்ளிமணாளன், இராகுல் கார்க்கி என்ற இரு ஆண் மகவுகளையும் பெற்றவராவார். .அவருடைய மூத்த மகள் பாவை சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து விட்டார். மும்பைப் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மும்பையின் மூத்தத் தமிழ்ச் சான்றோர்களுக்கான விருதினை பெற்றவர்களுள் திரு. சீர்வரிசை சண்முகராசனும் ஒருவர். தமிழய்யா கல்விக் கழகத்தின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றவர் மும்பைத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் உருவாகவும் வளரவும் பங்காற்றியவர். திரு. சீர்வரிசை சண்முகராசன் அவர்களின் இழப்பு அவருடைய உறவினருக்கும் நண்பர்களுக்கும் மட்டுமல்லாமல் மும்பை தமிழ் அன்பர்களுக்கும் மும்பைத் தமிழ் எழுத்துலகிற்கும், திராவிட இயக்கத்திற்கும் பேரிழப்பாகும்.மும்பை சீர்வரிசை சண்முகநாதன் அய்யா மறைவு ! பார்க்கும் போதும், பேசும் போதும் குடும்பத்துடன் மும்பை வர வேண்டும் எனத் தொடர்ந்து அழைத்த எனது பெரு மதிப்பிற்குரியவர் ! இந்த ஆண்டு மும்பை செல்லலாம் என நாங்கள் முடிவு எடுத்திருந்தோம். ""கியூபா"" என்று எங்கள் மகளுக்குப் பெயர் வைத்ததை ஒவ்வொரு அழைப்பின் போதும் மகிழ்வோடு வரவேற்றவர். வயது ஒரு பொருட்டு அன்றி, நிகழ்வுகளில் பங்கேற்பதும், தமிழ் லெமூரியா இதழ்களில் தொடர் கட்டுரைகள் எழுதுவதுமாகத் தொடர்ந்து இயங்கி, நமக்கான பலமாக இருந்தவர். முற்போக்கு எண்ணங்களுடன் தொடர்ந்து களம் கண்டவர், அதுவும் மும்பை பெரு நகரில்! தமிழ் லெமூரியா ஆசிரியர் திருமிகு.குமணராசன் இவரின் மருமகன்ஆவார். எனினும் இருவரும் நல்ல நண்பர்களாய், சகோதரர்களாய், குறிப்பாக உற்ற தோழர்களாய் இருந்தவர்கள்.நாளொன்றில் நிறைய மரணங்களை நாம் அறிந்தாலும், சிலரது இழப்பு நம்மை வெகுவாக ரணப்படுத்துகிறது. அவர்கள் நம் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் என்பதைத் தாண்டி, சமூகத்திற்கான மனிதர்"" என்கிற அந்த அடையாளமே ! - வி.சி.வில்வம், திருச்சி. அய்யா சீர்வரிசை சண்முகராஜன் அவர்களின் மறைவு கேட்டு வேதனை அடைந்தோம். ஒரு சிறந்த வழிகாட்டியை இழந்து விட்டோம். அய்யாவின் மறைவிற்கு கருஞ்சட்டை தமிழர் இதழ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்தார்க்கும், கொள்கை வழி உறவுகளுக்கும் எங்கள் ஆறுதலையும் பகிர்ந்து கொள்கிறேன்.என்றும் தோழமையுடன் இரா. உமா துணை ஆசிரியர் கருஞ்சட்டை தமிழர் சென்னை சீர்வரிசையார்- ஒப்பிலா குடித் தொண்டர்! அன்பைக் கரைத்தூறிய குருதியும் தயையும் கொடையும் தாங்கிய வுள்ளமும் அகன்ற சிரிப்பும் விரிந்த மார்பும் பரந்த நெற்றியும் பரைசாற்று மவர் பேதமற்ற பகுத்தறிவுப் பெரியாரென்று. கள்ளங் கபடமில்லாப் பேச்சிலவர் அரவணைக்கும் பாங்கே தாய்மை! உழைக்கும் மாந்தர் வாழ்விலுயர தேடிச்செய்த நன்மையினால் தந்தை! கடவுளும் பூதமும் சாதியும் சமயமும் கயவர்களின் கற்பிதமே என்றுணர்ந்த கருஞ்சட்டைப் போராளி கொண்ட கொள்கை பிறழா வாழ்வுகண்டு தன் குடியுயரப் புரிந்த தொண்டால் இவர் தூய மானுடத்தின் விதையானார்! நீக்கமற நிறைந்தார் நெஞ்சிலெம் தமிழ்க்குடி கண்ட ஒப்பிலாத் தொண்டர்! - அழகன் கருப்பண்ணன், ஈரோடு "