11 September 2016 6:30 pm
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு நீர் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது. ஆனால் அதிகாரிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசன தேவைக்காக உச்சந்தீ மன்ற உத்தரவின்பேரில் கர்நாடக அணைகளில் இருந்து மொத்தம் 16 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகம் காவிரி ஆற்றில் திறந்து விட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்தநிலையில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக ஒகேனக்கல்லுக்கு நேற்று அதிகாலை வந்து சேர்ந்தது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.ஒகேனேக்கல் அருவிகளில் வெள்ளம் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, பிரதான மெயின் அருவி, ஐந்தருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.மேட்டூர் அணை கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக கடந்த 8ம் தேதி நள்ளிரவு மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. அணைக்கு நேற்றுமுன்தினம் வினாடிக்கு 7 ஆயிரத்து 905 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து அன்று மாலை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்தது.அணை நீர்மட்டம் உயர்வு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை பிலிகுண்டுவில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் 76.74 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 78 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து நேற்று காலையில் 15 ஆயிரத்து 70 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,250 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போதைய நிலையில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நாள் ஒன்றுக்கு ஒரு அடி உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தொடர்ந்து 15 ஆயிரம் கனஅடி நீர் அணைக்கு வரும் பட்சத்தில் நீர்மட்டம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கணக்கிட்டு பார்க்கும் போது, அணையின் நீர்மட்டம் 10 நாட்களுக்கு பிறகு சுமார் 86 அடியை எட்டும் வாய்ப்பு இருக்கிறது.பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு எப்போது? இந்தநிலையில் தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடையுமானால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மேட்டூர் அணை நீர் இருப்பு குறைவாக இருந்ததால், நடப்பாண்டு ஜூன், 12ம் தேதி சாகுபடிக்கு நீர் திறக்கவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில், இரண்டு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதித்தது.