15 March 2016 11:06 pm
இந்தியாவில் தேசிய மேல் முறையீட்டு நீதிமன்றம் (National Court of Appeal) அமைப்பது தொடர்பான விசாரணை நடத்த ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வை அமைக்க இந்திய உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.இந்தியாவில் தற்போது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர்பான இறுதி தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றமே அளித்து வருகிறது.இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான வசந்தகுமார் என்பவர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அந்த மனுவில், கிரிமினல், சிவில், தொழிலாளர் மற்றும் வருவாய் தொடர்பாக உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பாயங்களும் அளிக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடுகளைச் செய்வதற்கென தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டுமென அவர் கோரியிருந்தார்.அப்படிச் செய்தால், உச்ச நீதிமன்றத்தின் பணிச்சுமை குறைந்து, அரசியல் சாஸனம் தொடர்பான வழக்குகளையும் பொதுச் சட்டம் தொடர்பான வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்தால் விரைவாக விசாரிக்க முடியுமென வசந்தகுமார் தன் மனுவில் கூறியிருந்தார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, அந்த பொது நலன் மனு மீதான விசாரணைகளை மேற்கொண்டது. அப்போது இந்த முடிவை நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.முன்னதாக, வழக்கறிஞர் வசந்தகுமார் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, மத்திய சட்ட அமைச்சகத்திடம் முதலில் முறையிடும் படியும் மத்திய அரசு இவரது கருத்தைக் கேட்ட வேண்டுமெனவும் 2014 அக்டோபரில் உத்தரவிடப்பட்டது.இதையடுத்து அவர் மத்திய அரசை அணுகியபோது, மத்திய அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்தது.அரசியல் சாசனப்படி உச்ச நீதிமன்றம் தில்லியில்தான் இயங்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக முன்பிருந்தவர்கள், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை பகிர்வதையும் பிராந்திய மட்டங்களில் கிளைகளை உருவாக்குவதையும் எதிர்த்தனர் என்றும் கூறி அவரது ஆலோசனையை மத்திய அரசு நிராகரித்தது.