7 December 2015 10:24 am
யெமென் நாட்டின் தென் பகுதி நகரான ஏடெனின் ஆளுநர் ஜாஃபர் மொஹம்மத் சாத் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டிருக்கிறார். அந்த குண்டுவெடிப்பில் அவரது பாதுகாவலர்கள் பலரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த குண்டுவெடிப்பை தாங்களே நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பு உரிமை கோரியுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் ஷியா ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஏடென் நகரில் இருந்து வெளியேற்றிய யெமென் அரசு ஆதரவு படைகளின் முக்கியத் தலைவராக ஜாஃபர் மொஹம்மத் சாத் விளங்கினார். அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் யெமென் அதிபர் அப்த்ராபு மன்சூர் ஹாதி ஏடெனை நாட்டின் தற்காலிகத் தலைநகராக அறிவித்திருந்தார். யெமெனின் வடபகுதியில் வலுவாக இருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நாட்டின் அதிகாரப்பூர்வத் தலைநகர் சானா உள்ளிட்ட நாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளனர்.