21 June 2014 2:37 am
மோடி அரசு அறிவித்திருக்கும் ரயில் கட்டண உயர்வுக்கு காரண கர்த்தாவான முன்னாள் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே மக்கள் நலன் விரும்பி போல புது வியாக்யானம் ஒன்றை சொல்லியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு பயணிகள் ரயில் கட்டணம் மற்றும் சரக்கு ரயில் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அப்போதைய காங்கிரஸ் அரசு திட்டமிட்டிருந்த கட்டண உயர்வைத்தான் தற்போது மத்திய அரசு அப்படியே அறிவித்திருக்கிறது. அப்போது காங்கிரஸ் அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தவர்தான் மல்லிகார்ஜூன கார்கே. தற்போதைய ரயில் கட்டண உயர்வு குறித்து கார்கே கூறியிருப்பதாவது: நான் ரயில்வே அமைச்சராக இருந்த போதுதான் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் லோக்சபா தேர்தல் நடைபெற்றதால் நாங்கள் புதிய அரசு முடிவு செய்யட்டும் என்று அமல்படுத்தாமல் விட்டுவிட்டோம். புதிய அரசு திடீரென கட்டண உயர்வை இப்போது அறிவித்துள்ளது. இப்படியெல்லாம் திடீரென கட்டண உயர்வை அறிவிக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் விவாதித்து, உறுப்பினர்கள் கருத்தை கேட்டு அதன் பின்னர் கட்டண உயர்வை அமல்படுத்தியிருக்கலாம். இவ்வாறு ‘புதிய வியாக்யான’த்தை முன்வைக்கிறார் கட்டண உயர்வுக்கு காரணமான மல்லிகார்ஜூன கார்கே.