16 May 2016 11:48 am
ரஷ்யாவில் விளையாட்டுத் துறையில் இடம்பெற்ற ஊக்க மருந்து மோசடிகளுக்காக அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார்.ஊக்க மருந்து பயன்பாடு மோசடி காரணமாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தடை விதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.பிரிட்டனிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள விட்டாலி முக்டோ, மிக மோசமான தவறுகள் நடைபெற்றுள்ளன என்றும் இந்த மோசடிகள் ரஷ்யாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.ஆனால் இதில் ரஷ்ய அரசுக்கு பங்கிருந்தது என்று கூறப்படுவதை அவர் ஏற்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சோச்சியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அரசு ஆதரவுடன் ஏமாற்று வேலைகள் நடைபெற்றன என்று ரஷ்யாவின் ஊக்க மருந்து பயன்பாட்டை கண்காணிப்பதற்கான அமைப்பின் முன்னாள் தலைவர் கிரிகோய்ரி ரோட்சென்கோவ் இரு வாரங்களூக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.ரஷ்யத் தடகள வீரர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை அடுத்த மாதம் மறுபரிசீலனை செய்யப்படும் என பன்னாட்டு தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.