18 February 2014 5:38 am
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த , முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையைக் குறைக்கக்கோரி இந்தியக் குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பித்திருந்த கருணை மனு மீது முடிவெடுக்க இந்திய அரசு காலதாமதம் செய்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலைக் காரணம் காட்டி,இந்த தண்டனையைக் குறைக்க சமீபத்தில் மனு செய்திருந்தனர். இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் வீரப்பன் கூட்டாளிகள் வழக்கில் கருணைமனு மீது முடிவெடுக்க ஏற்பட்ட தாமதம், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையைக் குறைக்க ஒரு முகாந்திரமாகக் கருதலாம் என்று கூறி அவர்களுக்கு வழங்கபட்டிருந்த மரண தண்டனையைக் குறைத்த்து. இதே போல இன்று இந்த ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மனுவையும் விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட வழக்கில்,முருகன், சாந்தன், பேரறிவாளன், மற்றும் முருகனின் மனைவி நளினி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நளினி தரப்பில் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவை பரிசீலித்த பிறகு நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மரண தண்டனையை எதிர்நோக்கி வேலூர் சிறையில் காத்திருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுக்களை பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 15 பேர்களுக்கு, அவர்களது கருணை மனு மீது அரசு முடிவெடுக்க கால தாமதம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கபட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்திருந்தது. இதையடுத்து, ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்று மனு போடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், அவர்களுக்காக வழக்கறிஞர்கள் ராம் ஜேத்மலானி மற்றும் யோக்முக் சௌத்ரி ஆகியோர் வாதாடினார்கள். இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அப்போது தனது வாதங்களை முன்வைத்த அரசு வழக்குரைஞர், வாகன்வதி, ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இது போன்ற கருணை மனுக்கள் மீதான வழக்குகளில் முடிவினை எடுக்க காலதாமதம் ஏற்பட்டதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது, ஆனால் இந்த வழக்கில் இறுதி முடிவினை எடுக்க தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்திற்கு மத்திய அரசால் விளக்கம் அளிக்க இயலும் என்பதால் மரண தண்டனையை ரத்து செய்ய கோருவதை ஏற்க முடியாது என்றார். மேலும் அப்போது மற்ற வழக்குகள் போல் இல்லாமல் இது தேசத்திற்கு துரோகம் விளைவிக்க கூடிய பயங்கரவாத செயல் என்பதாலும் இந்த கோரிக்கையை ஏற்கக்கூடாது என்றார் அவர். இதனையடுத்து இந்த வழக்கிற்கான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போது வெளியிடப்பட்ட்து. தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, 432, 433 ஏ சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரினார். மேலும் பேசிய அவர் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும், இன்று வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு இந்தியாவிலும் விரைவில் மரண தண்டனை ஒழிக்கப்படும் என்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். இன்று நீதித்துறை வரலாற்றின் பொன்நாள் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.