30 January 2016 11:19 am
லெபனானில் கைது செய்யப்பட்டிருந்த கழுகு ஒன்று விடுதலை செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்காக உளவு பார்த்தது எனும் சந்தேகத்தின் பேரில் அந்தக் கழுகு லெபனானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய அந்தக் கழுகு இஸ்ரேலிய எல்லையைக் கடந்து தெற்கு லெபனானுக்குள் பறந்தது. பின்னர் அந்தக் கழுகு அங்கு இறங்கியபோது டெல் அவிவ் பல்கலைக்கழத்தின் அடையாள அட்டை அதன் கால்களில் கட்டப்பட்டிருந்தது தெரிந்தது. அதுமட்டுமன்றி அந்தக் கழுகு இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்கான கருவி ஒன்றும் அதனுடன் பொருத்தப்பட்டிருந்தது. இருநாட்டு எல்லைப் பகுதியில் நிலைகொண்டுள்ள ஐ நா அமைதிப் படை வீரர்கள் நடத்திய சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அந்தக் கழுகு விடுவிக்கப்பட்டது என இஸ்ரேலிய வனவிலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அந்தக் கழுகு வேவுபார்க்கும் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட வரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்த பிறகு, அது தரையிறங்கிய கிராமத்து மக்களே அதை விடுவித்துவிட்டனர் என லெபனானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.