13 September 2014 12:26 am
வடமாகாண சபையின் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற பொதுமக்கள், தமது கட்டுப்பாட்டில் இருந்து விலகிச் சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்களை அங்கு செல்லவிடாமல் இராணுவத்தினரும், அவர்களைச் சார்ந்தோரும் தடுப்பதற்கு முயற்சிப்பதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேசுவரன் குற்றம் சுமத்தியிருக்கின்றார். இதில் அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வருவதாக இணையதள செய்திகளின் மூலம் அறிந்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் கிருட்டிணபுரம் பகுதியில் முழங்காவில் மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில், வியாழனன்று கோழிக்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே வடமாகாண முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தின் மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சரின் நிதியுதவியில் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. அங்கு உரையாற்றிய அவர் இராணுவத்தைச் சேர்ந்தோர் தமது நிகழ்வில் வந்து புகைப்படங்கள் எடுப்பது தங்களைப் பாதுகாப்பதற்காகவா அல்லது வேறு காரணத்திற்காகவா என்பது தமக்குத் தெரியாது என்றும், இராணுவத்தினர் தங்களையும் பொதுமக்களையும் புகைப்படங்கள் எடுப்பதாகவும், தங்களைப் பாதுகாப்பதற்காகவா அல்லது பொதுமக்களைப் பயமுறுத்துவதற்காகவா அவ்வாறு அவர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்து தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் சிங்களத்தில் குறிப்பிட்டார். எங்களுக்கு இராணுவத்தினரிடம் இருந்தே பாதுகாப்பு தேவையாக இருக்கின்றது. வேறு யாரிடமிருந்தும் மக்களுக்குப் பாதுகாப்பு அவசியமில்லை என்றும், எனவே அத்தகைய நடவடிக்கைகளை அவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சிங்களத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதைத் தெரியாதவர்களும் தெரிந்து கொள்வதற்காக, புகைப்படங்கள் எடுப்பவர்களின் படங்களை, பத்திரிகைகளில் போடுவதற்காக, புகைப்படம் எடுத்துத் தருமாறு தான் இளைஞர் யுவதிகளிடம் கேட்டிருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுரேஸ்பிரேமச்சந்திரன், மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாணசபை உறுப்பினர் அரியரத்தினம் மற்றும் மாகாண சபை அதிகாரிகள் மகளிர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.