10 November 2013 11:20 pm
பொதுநல மாநாட்டில் இந்திய தலைமையமைச்சர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும் என தி.மு.க தலைவர் கருணாநிதி எச்சரித்திருக்கிறார். நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுவில், இலங்கையில் நடைபெறும் பொதுநல மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ”தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அவ்வாறு செய்தால் அதற்கான விலையை காங்கிரஸ் கொடுக்கவேண்டியிருக்கும்” என்றார். ‘இந்தியாவைச் சேர்ந்த துரும்பும் போகக்கூடாது’ வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்கலாமா எனக் கேட்டபோது அவர் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றால், இந்தியாவைச் சார்ந்த துரும்பு கூட இந்த மாநாட்டிற்குச் செல்லக் கூடாது என்று தான் பொருள் என்றார். சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினைக்காக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அதனை ஆதரித்தார்கள். ஆனால் இப்படியொரு முடிவா எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது அவர் வினை விதைத்தவர்கள், வினை அறுப்பார்கள் என்றார். மத்திய அரசிற்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்திருக்கிறார். இதனிடையே புதுடில்லியில் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பிரதமரை நேரில் சந்தித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வு என வலியுறுத்தியதாகவும், மன்மோகன் சிங்கும் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்புவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.