8 April 2016 11:38 am
புகழ்பெற்ற நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அடங்கிய நூலின் முதல் பதிப்பின் பிரதி ஒன்று தற்போது கிடைத்துள்ளது. ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்று அழைக்கப்படும் இந்தப் பதிப்பின் பிரதி மிக அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது இதன் ஒரு பிரதி ஸ்காட்லாந்தில் ஐல் ஆஃப் ப்யூட் என்ற தீவில் உள்ள மவுண்ட் ஸ்டூவர்ட் ஹவுஸ் என்ற வீட்டில் இருந்து கிடைத்துள்ளது. இந்த நூல் 1623ல் அச்சிடப்பட்டது. இது உண்மையிலேயே 17ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டது என்பதை உறுதிசெய்துள்ள கல்வியாளர்கள் இது மிக முக்கியமான கண்டுபிடிப்பு எனத் தெரிவித்துள்ளனர். ஃபர்ஸ்ட் ஃபோலியோ பதிப்பில் தற்போது 230 பிரதிகள் இருப்பதாக கருதப்படுகிறது. ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் வசம் இருந்த பிரதி 2003ஆம் ஆண்டில் 3.5 மில்லியன் பவுண்டுகளுக்கு விலைபோனது. ஆட்டுத் தோலில் பவுண்ட் செய்யப்பட்ட இந்தப் புத்தகம், மவுண்ட் ஸ்டூவர்ட் ஹவுஸில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். ஷேக்ஸ்ஃபியரின் 400வது நினைவு தினம் நெருங்கும் நிலையில், இந்தப் பிரதி கிடைத்துள்ளது ஷேக்ஸ்பியர் மீது ஆர்வம் உடையவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷேக்ஸ்பியர் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அச்சிடப்பட்ட இந்த ஃபர்ஸ்ட் ஃபோலியோவில், 36 நாடகங்கள் தொகுக்கப்பட்டிருந்தன. இதில் இடம்பெற்றிருந்த 18 நாடகங்கள் அதற்கு முன்பாக அச்சில் வந்திருக்கவில்லை. இந்தப் பதிப்பு வெளிவந்திராவிட்டால், ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற படைப்புகளான மேக்பெத், ட்வெல்ஃப்த் நைட், ஜூலியஸ் சீஸர், ஆஸ் யு லைக் இட், தி டெம்பெஸ்ட் போன்ற நாடகங்களின் பிரதி கிடைத்திருக்காது. இந்தப் புத்தகத்தில்தான் மார்டின் ட்ரோஸவுட் வரைந்த அனைவருக்கும் பரிச்சயமான ஷேக்ஸ்பியரின் உருவப்படம் இடம்பெற்றிருந்தது. இந்தப் பதிப்பு எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டது என்பது தெளிவில்லாமல் இருக்கிறது என்கிறார் இந்தப் பதிப்பு குறித்த புத்தகம் ஒன்றை எழுதியிருக்கும் பேராசிரியர் ஸ்மித். சிலர் 750 பிரதிகள் அச்சிடப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இவற்றில் 230 பிரதிகள் தற்போதும் எஞ்சியிருப்பதாகக் கருதப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஃப்ரான்சில் இருக்கும் செயிண்ட் ஒமரில் உள்ள நூலகம் ஒன்றில் ஒரு பிரதி கிடைத்தது. தற்போது கிடைத்திருக்கும் பிரதி, இத்தனை ஆண்டுகாலமாக யார் யாரிடம் இருந்தது என்பது முழுமையாகத் தெரியவில்லை. 18ஆம் நூற்றாண்டில் இலக்கிய ஆசிரியர் ஒருவரிடம் இருந்த இந்தப் பிரதி, 1896வாக்கில் ப்யூட் நூலக சேகரிப்பில் இடம்பெற்றது. 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும் அமெரிக்க ரயில்வே முதலாளிகள், முதலீட்டாளர்கள் ஆகியோர் இந்த அரிய பிரதிகளை வாங்கினர்.