14 January 2017 8:06 pm
இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் 205 புதிய விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்புக் கொண்டுள்ளது. இவைகளின் மதிப்பு சுமார் 22 பில்லியன் டாலர்கள் ஆகும்.இந்தியாவிலே நான்காவது பெரிய விமான நிறுவனமாக ஸ்பைஸ் ஜெட் விளங்குகிறது. 2014 ஆம் ஆண்டின் இறுதியில், செலுத்தப்படாத எரிபொருள் கட்டணங்கள் காரணமாக விமான நிலையத்திலே விமானங்கள் முடங்கியதைத் தொடர்ந்து, அதன் எதிர்காலம் குறித்து சந்தேகங்கள் எழுந்தன.2020 ஆம் ஆண்டில் உலகிலே மூன்றாவது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இந்தியா இருக்கும் என்ற வகையில், போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அந்த நாடு முக்கியத்துவம் பெறுகிறது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் உள்நாட்டு விமானங்களில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 16 % உயர்ந்துள்ளது.பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மட்டுமின்றி குறைந்த எரிபொருள் விலை காரணமாக நாட்டின் பல முக்கிய விமான நிறுவனங்களும் லாபம் ஈட்டியுள்ளன. 2018 ஆம் ஆண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு முதல் போயிங் மேக்ஸ் 737 விமானம் அனுப்பி வைக்கப்படும் என்று போயிங் தெரிவித்துள்ளது.ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு இது ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் என்று கூறிய அந்நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங், ’’இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்படுத்தப்படும் மிகப் பெரிய ஒப்பந்தங்களில் ஒன்று இது என்றும், இந்தியாவில் போயிங் நிறுவனம் பெற்றிருக்கும் மிகப்பெரிய ஒப்பந்தம் என்றும் கருத்து கூறியுள்ளார்.