5 July 2013 7:02 pm
உத்தரகாண்டில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல ஆயிரம் பேர் பலியாயினர். இதேபோன்று பெரிய அணைகளில் விரிசல் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உத்தரகாண்ட் போல நிலைமை விபரீதமாகிவிடும். இதை தடுக்க முன்னெச்சரிக்கையாக பெரிய அணைகளில் அவசர கால நடவடிக்கை திட்டத்தை மாநில அரசுகள் தயாரித்திருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் மெத்தனமாக செயல்படுவதால், 4,500க்கும் மேற்பட்ட பெரிய அணைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் உள்ளன.
நாடு முழுவதும் 29 மாநிலங்களில் 4,728 பெரிய அணைகள் உள்ளன. இந்த அணைகளை வலுப்படுத்துமாறும் அவசரகால நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்துமாறும் மத்திய நீர்வளக் கமிஷன் கடந்த 2006ம் ஆண்டில் மாநிலங்களுக்கு நெறிமுறைகளை அனுப்பியது.
ஆனால், 2011ம் ஆண்டு செப்டம்பர் வரை 192 அணைகளில் அவசரகால நடவடிக்கை திட்டத்தை 8 மாநிலங்கள் மட்டுமே தயாரித்தன. மீதியுள்ள 4,536 பெரிய அணைகள் அவசரகால நடவடிக்கை திட்டம் தயாரிக்கப்படாமல் உள்ளன. இந்த தகவலை நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.