3 August 2013 11:59 am
இந்தியாவில் பல்-முத்திரை சில்லறை வர்த்தகத்தில் (multi-brand retail) அன்னிய நேரடி முதலீட்டு தொடர்பான சட்டவிதிகளை அரசாங்கம் இலகுபடுத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஈர்க்கும் முயற்சியாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மொத்த கொள்வனவு, உட்கட்டுமான முதலீடுகள் மற்றும் முதலீட்டுக்கான நகரங்கள் தெரிவு உள்ளிட்ட விடயங்களைக் கட்டுப்படுத்துகின்ற விதிகளே இந்தப் புதிய அறிவிப்பின் மூலம் தளர்த்தப்படுகின்றன.
அரசாங்கத்தின் இந்த முடிவு இந்தியா எங்கிலும் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தது. பழைய விதிகளின்படி, வெளிநாட்டு நிறுவனங்கள் சிறியளவான இந்திய நிறுவனங்களிடமிருந்து 30 சதவீத பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.
ஆனால், அந்த கட்டாய விதியை நீக்கவில்லை என்று கூறியுள்ள அரசாங்கம், வெளிநாட்டு நிறுவனங்கள் அந்த இலக்கை அடைய 5 ஆண்டுகால அவகாசம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
அதேபோல, 10 லட்சத்துக்கு குறைவான சனத்தொகை கொண்ட நகரங்களில் உலகளாவிய பெரும் நிறுவனங்கள் கடை திறக்க இருந்த தடையும் இப்போது தளர்த்தப்பட்டுவிட்டது.