3 August 2013 5:56 pm
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது ஐக்கிய நாடுகள் சபை பொதுமக்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து தவறியமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஜோன் எலியேசனின் அறிக்கையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் தொடர்ந்து படித்து வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
பான்கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி இதனை தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இது தொடர்பாக பான் கீ மூனின் கருத்தை அறிய ஒருமாத காலம் செல்லும் என்று நெசர்க்கி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஐக்கிய நாடுகளின் பொறுப்பு தவறியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலான அறிக்கை அண்மையில் பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவர் இதனை படித்து வருகிறார் என்று நெசர்க்கி குறிப்பிட்டார்.
கொழும்பின் புறநகர் வெலிவேரியவில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்திய ஒருவரை கொன்றமை தொடர்பிலும் நெசர்க்கியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நெசர்க்கி, தற்போதைக்கு சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட முடியாது என்று குறிப்பிட்டார்.
இதேவேளை அமெரிக்காவின் வலியுறுத்தலையும் மீறி பொதுநலவாய நாடுகளின் அமர்வின் போது இன்னர் சிட்டி பிரஸுக்கு அனுமதி வழங்கப்படாது என்ற செய்தி குறித்து நெசர்க்கியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த நெசர்க்கி, பான் கீ மூனை பொறுத்தவரை அனைத்து ஊடகங்களுக்கு செய்தி சேகரிப்புக்கான உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருப்பதாக குறிப்பிட்டார்.