இனிப்பும் இழப்பும் - தமிழ் இலெமுரியா

15 October 2016 6:35 pm

விரும்புகின்றவற்றுக்கு நாம் அடிமை. விலக்குகின்றவை நமக்கு அடிமை. அவரவர் வாழ்வு அவரவர் கையில். யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்கிற பார் போற்றும் வரியை வழங்கிய கணியன் பூங்குன்றனார், தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று எச்சரித்துள்ளார். அடிமைப்படுவது என்பது ஆக்கப் பூர்வமானது அல்ல. இதை உணர்ந்து உணவு முறையை வரையறைப் படுத்துவது நலம். ஒருமுறை சுவை கண்டுவிட்டால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் என்பதை "ருசி கண்ட பூனை" என்று ஒப்பிட்டனர். மனநிறைவைத் தடுக்கும் சுவைத் தூண்டல், இன்னும் வேண்டும் வேண்டும் என்று தேடித் திரியத் தூண்டும். இரண்டு கால்களும் இணைந்து நடக்கும் செயலைச் செய்கின்றன. பார்வைக்கு இரண்டு கண்கள்; சுவாசத்துக்கு இரண்டு துவாரங்கள்; கேட்பதற்கு இரண்டு காதுகள்; செயலாற்றலுக்கு இரண்டு கைகள். மூடி எதுவுமின்றி வெளியே தெரியும் இந்த உறுப்புகளெல்லாம் இரண்டாக இணைந்து ஒரே ஒரு செயலைச் செய்கின்றன. ஆனால், முப்பத்திரண்டு பற்களையும் இரண்டு உதடுகளையும் காவலாகக் கொண்டு எச்சில் ஊறும் வாய்க்குள்ளே சிறை வைக்கப்பட்டிருக்கும் நாக்கு மட்டும் எண்ணிக்கையில் ஒன்றானாலும் சுவையுணர்தல், பேச்சு என்கிற இரண்டு செயல்களைச் செய்கிறது. அடக்கத்தில் சிறந்தது நாவடக்கம். புகை பகையாவதைப் போல், சுவையுணர்வும் எல்லை மீறச் செய்து அடிமைப் படுத்துவதும் ஆழ்ந்து வேதனைப்படுத்தும் துயருக்குள்ளாக்குவதும் கண் கூடாகும். வெள்ளைச் சீனி விளைவிக்கும் துயரங்களில் சிலவற்றைச் சிந்திக்கலாம். செயற்கை முறை இனிப்பு வகைகளும் வெள்ளைச் சீனியும் மூளையை மிக மோசமாகப் பாதிப்பதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. "போதை மருந்துக்கு அடிமையானவரை விடுவிப்பதற்கான சிகிச்சை முறை போன்று, சீனியின் சுவைக்கு அடிமையானவரை விடுவிப்பதற்குக் கையாளப்பட வேண்டும்" என்று ஆசுதிரேலியாவிலுள்ள குயீன்சுலாந்து தொழில் நுட்பக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர், செலினா பார்ட்லெட் (Selena Bartlet) உறுதிப்படுத்துகிறார். அளவு மீறிய சீனிப் பயன்பாடு உடல் எடை கூடுவதற்கான நேரடிக் காரணம் என்று நிரூபணமாகியுள்ளது. புகையிலை, கொகைகன், மார்பைன் உட்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் போது, மூளையின் உல்லாசம் உருவாக்கும் மையங்களைக் கட்டுப்படுத்தும் டோபொமின் சுரக்கும் அளவு குறைந்தால் நினைவாற்றல் குறையும். சீனி என்பது தீமை தருவதில் புகையிலைக்கு அடுத்தது. இது ஒரு கார்பன் கரிப் பொருள் எனப்படுகிறது. நிகோட்டின் போன்ற தீயது. கொஞ்சங் கொஞ்சமாக நின்று கொல்லும் நஞ்சு வெள்ளைச் சீனி. ஊரறிந்த ‘கால்சியத் திருடன்’. உடலிலுள்ள கால்சியம் சத்தை உறிஞ்சுகிறது. கொகைன் என்கிற போதைப் பொருளைக் காட்டிலும் எட்டு மடங்கு போதைப்படுத்தும் கொடூரமானது. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் சுவை எனும் பெயரில் வரும் குளிர்பானங்களிலும் உச்சக்கட்டச் சீனிச்சுவை கலந்துள்ளது. சீனிப் பயன்பாட்டால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு வேண்டும். தேநீரில் சீனி சேர்ப்பதை 2015 ஆம் ஆண்டில் துருக்கி நாடு தடை செய்துள்ளது. ஜான் ராபின்சு எழுதிய "நன்றாக வாழ்வோம் ஒரு நூறு வருடம்" நூலில் "வயதானவர்கள் என்கிற சொல்லாடல் இல்லை. நீள் ஆயுளுக்கான உணவு முறையில் உப்பும் சர்க்கரையும் இடம் பெறவில்லை எனச் சுட்டுகிறது. இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடிப் போலியான இனிப்புச் சுவைக்கு அடிமையானால், வாழ்க்கை கசந்து விடும். உலகிலேயே கொழுத்தவர்கள் மிகுந்துள்ள, பசிபிக் பகுதியிலுள்ள மிகச் சிறிய சமோவா (SAMOA) எனும் நாடு, 1984 ஆம் ஆண்டிலேயே இனிப்பு ஏற்படுத்தும் இழப்புகளை உணர்ந்து, இனிப்புப் பானங்களுக்கு வரி விதித்து அவற்றை கட்டுப்படுத்த தொடங்கி விட்டது. உடல் பருமனை எதிர்கொள்ளும் வகையில், ஊறு விளைவிக்கும் குப்பை உணவுகள், இனிப்புப் பண்டங்களுக்கு மெக்சிகோ நாடு வரிவிதித்து அவ்வகை உணவுகளின் பரவலைத் தடுக்க முனைந்து விட்டது. சீனி விளைவிக்கும் துயரம் பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில், சீனியில் உருவாக்கப்பட்ட சிற்பங்களை தேக்கரண்டி சிக்கல்கள் (teaspoon Troubles) எனக் குறிப்பிட்டு இலண்டன் பாராளுமன்ற முகப்புகளில் நிறுவப்பட்டுள்ளன.  சீனியின் மூலப் பயிரான கரும்புப் பயிர் நிலத்தடி நீரை உறிஞ்சிப் பாழக்குகிறது. வெள்ளைச் சீனி உடல் நலத்தை உறிஞ்சிப் பாழாக்குகிறது. ஆண்டுக்கு முப்பது மில்லியன் டன் சர்க்கரையை உற்பத்தி செய்து உலகில் இரண்டாம் நிலை வகிக்கும் இந்தியா, தனது நில வளத்தையும் மக்களது மன வளத்தையும் பறி கொடுப்பதை அறியாமல் உள்ளது. இந்திய மருத்துவர் சங்கத்தின் மூத்த துணைத் தலைவர் மருத்துவர் கே.கே.அகர்வால், தம்மிடம் வரும் நோயாளிகளை மைதா, வெள்ளை அரிசி, வெள்ளைச் சீனி எனும் மூன்றைக் குறித்தும் எச்சரித்து வருகிறார். கொழுப்புச் சத்து மிகுந்த உணவுக்கும் சீனி தொடர்பான தொழிலுக்கும் எதிராகப் போராடி வரும் மருத்துவர் ஆசிர்மல்ஃகோத்ரா, சரிவிகித உணவில் சீனிக்கு எவ்விதப் பங்கும் இல்லை; அதில் எந்தச் சத்தும் இல்லை; அது ஒரு புகையிலைப் பொருள் போன்றது; புகையிலை உண்டாக்குவதைப் போன்ற கேட்டினைச் சீனி விளைவிக்கும் என்றெல்லாம் அதிர்ச்சித் தகவல்கள் தருகிறார். சீனி குறைந்த உணவு, பத்து நாட்களில் குழந்தைகளின் உடல் நலத்தைச் சீர் செய்கிறது என்கிறார் இராபர்ட் லுசுடிக் என்கிற கலிஃபோர்னியா நாட்டு மருத்துவர். "இந்த மக்கள் கேட்கக் கூடாதவற்றைக் கேட்டுத் தொலைத்தனர்; நம்பக் கூடாதவற்றை நம்பித் தொலைத்தனர்; பின்பற்றக் கூடாதவற்றைப் பின்பற்றித் தொலைத்தனர்; இவர்களின் பேதமையை எப்படி மாற்றுவது?" என்று பாரதியார் அங்கலாய்த்தார். வண்ணப் பொருட்களின் ஈர்ப்புக்குப் பலியாகித் தம்மை மறந்து நுகர்ச்சியின் உச்சத்தில் வெறியாட்டங் கொள்ளும் இனம் கொஞ்சங் கொஞ்சமாக விழிப்புணர்வு பெற்று வருகிறது. மனிதநேயம் தோய்ந்த வணிகத்தின் திருக்கரங்கள் மக்கள் நலனைத் தூக்கி நிறுத்தும். புத்தர் சொன்னது போல் ஞானத்தின் வெளிச்சத்திலும் புனிதத்தின் வழிகாட்டலிலும் வாழ்ந்தால் இருள் நீங்கும். எந்த ஒன்றும் அனுபவிப்பதால் அடங்குவதில்லை. நெருப்புக்கு நெய் ஊற்றுவது போல் அது வீரியம் பெற்று எரிந்து, அனுபவிக்கும் ஆசை வளரும். ஏமாற்றப்படுவதன் மறு பெயர்தான் மகிழ்ச்சி.  "நல்ல செய்தி சொன்ன வாய்க்குச் சர்க்கரை கொடுக்க வேண்டும்" என்பர். ‘இனிய கனவுகள்’, ‘இனிய இரவுகள்’ என்றெல்லாம் வாழ்த்துவர். இனிப்பால் ஏற்படும் இழப்புகள் எண்ணத்தில் கொள்ளப்படும் போது, பழமொழிகள் பொய்த்து வரும் காலமாகத் தோன்றுகிறது. இன்ப நுகர்வுத் தவிர்ப்பு வாழ்வுதான் விடுதலை தரும். "பிறப்பது ஒன்று; இறப்பது ஒன்று; முறையுடன் வாழ்ந்து சிறப்பது நன்று" என்பதை முன்நிறுத்தி வரையறை வகுத்து வாழ்வது நலம். சொல் வீச்சிலும் சுவையுணர்தலிலும் நாக்குப் பிறழாமல் வாழ்வது இன்றைய தேவை. நோய்களால் ஏற்படும் சூழல் சிதைவுகளையும் பொருளாதாரச் சிக்கல்களையும் தவிர்க்கலாம். மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு  (குறள்: 945)உடன்பாடு கொண்டவற்றை ஏற்று, உள்ளத்தை தூய்மையாக்கி உடல் நலம் காத்து வளருவோம்! இனிப்பைத் துறப்போம்! இழப்பைத் தவிர்ப்போம்!. – ந.முத்தையா, மதுரை"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி