15 September 2015 5:31 pm
நமது உடல் பல்வேறு குறிப்புகள் மூலம் பல தகவல்களை நமக்கு தெரிவிகின்றது. நம் முன்னோர்கள் உடலின் இத்தகைய குறிப்புகளை நுணுக்கமாக கவனித்து உணர்ந்து, அதற்கு ஏதுவான செயல்களைச் செய்து தங்கள் உடல் நலத்தை நீண்ட காலம் பேணிக்காத்து வந்தனர். அவ்வாறான உடலின் சில முக்கிய குறிப்புகளையும் அவற்றை சரியாக கையாளும் வழி முறைகளையும் காணலாம். இதில் முதலாவதாக உடலின் இயல்பான குறிப்புகளை பற்றி காண்போம்.1.பசிபசி என்ற குறிப்பின் மூலம் உடல் நமக்கு உணர்த்தும் செய்தி, உணவை எதிர் கொண்டு, அதனை முழுமையாக சீரணம் செய்வதற்கு உடல் தயாராக உள்ளது என்பதாகும். இந்த நிலையில் தான் அனைத்து செரிமான உறுப்புகளும், சுவை மொட்டுகளும் சிறப்பாக இயங்கும். இப்பொழுது விழுங்கப்படும் உணவு முழுமையாக செரிக்கப்பட்டு, உணவிலுள்ள சத்துக்கள் முழுமையும் இரத்தத்தில் கலக்கும். இதனை நன்கறிந்த நம் முன்னோர்கள் நன்கு பசியெடுத்தபின் உண்ணும் வழக்கத்தை கடைபிடித்தனர். இதனால் நல்ல ஆரோக்கியம் பெற்று வாழ்ந்தனர்.2.தாகம்உடலில் நீர்ச்சத்து குறையும் போது உடலில் தாகம் ஏற்படும். அப்பொழுது கட்டாயம், தேவையான நீர் அருந்த வேண்டும். தேவையில்லாமல் அதிக நீர் அருந்துவதை தவிர்ப்பது நலம்.3.தூக்கம்தினமும் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்திற்காக செலவிட வேண்டும். அதுவும் முன்னிரவில் தூங்கத் தொடங்கி அதிகாலையில் எழுதல் நலம். இந்த நேரத்தில் உடல் அதன் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும். எனவே இவ்வாறான தூக்க முறையை ஒழுங்கு படுத்தினால் உடல் நலம் மேம்பாடு அடையும்.4.ஓய்வுநீண்ட நேரம் உடலுக்கு வேலை கொடுத்தால் உடலின் ஆற்றல் குறைந்து, களைப்பு ஏற்படும். இதன் மூலம் உடல் சிறிது நேரம் ஓய்வு கேட்கின்றது. ஓய்வுக்கு பின் உடல் புத்துணர்ச்சியுடன் இயங்க ஆரம்பிக்கும். மேலும், உடல் நோய்வாய்ப் பட்டிருக்கும் நிலையில் கண்டிப்பாக ஓய்வு அவசியம். இதன் மூலம் உடலின் மொத்த ஆற்றலும் நோயை சரி செய்வதற்கு திருப்பி விடப்பட்டு, விரைவில் உடல் நலம் பெறும். ஆனால் இன்றைய அவசர உலகில் மேற்சொன்ன உடலின் நான்கு குறிப்புகளையும், உரிய நேரத்தில் நாம் சரியாக உணர்வதில்லை. உணர்ந்தாலும் அதற்கு ஏதுவான செயல்களைச் செய்வதில்லை. இதனால் இன்று நாம் பல நோய்களுக்கு ஆளாகின்றோம். இது தவிர அவ்வப்போதான சில செயல்கள் மூலமாகவும் உடல் சில குறிப்புகளை தெரிவிக்கின்றது. அதனைக் கீழே காணலாம்.1.தும்மல்சில நேரங்களில் ஏதாவது உடலுக்கு ஒவ்வாத பொருள், மூச்சுக்காற்றின் மூலமாக சுவாச மண்டலத்திற்குள் சென்று விடும். இதனை வெளியேற்ற நுரையீரல் எடுக்கும் எதிர் நடவடிக்கையே தும்மல் ஆகும். எனவே இயல்பாக ஏற்படும் தும்மல்களை நாம் அனுமதிக்க வேண்டும். மாறாக அடக்கக் கூடாது.2.சளிநம் உடலில் நோய்க்கிருமிகள் நுழைந்து விட்டால், நம் உடல் அதனை கோழை போன்ற உடலில் சுரக்கும் திரவங்களால் சூழ்ந்து கொண்டு, திரட்டி வெளியேற்றுகின்றது. இதுவே மூக்கு மற்றும் தொண்டைகளில் உருவாகும் சளிகளுக்கு காரணம் ஆகும். இதனையும் நாம் வெளியேற்ற வேண்டும்.3.இருமல்இவ்வாறாக உருவான சளியை வெளியேற்ற உடல் கையாளும் இன்னொரு வழிமுறை இருமல் ஆகும். இதனையும் அடக்கக் கூடாது.4.விக்கல்சில நேரம் உண்ணும்போது. உணவோடு அதிகளவு காற்றும் வயிற்றுக்குள் சென்று விடும். இதனால் வயிற்றில் ஒரு காற்றடைப்பு ஏற்பட்டு அதன் இயக்கம் பாதிக்கப்படும். இதனை சரி செய்ய உடல் மேற்கொள்ளும் எதிர் நடவடிக்கையே விக்கல் ஆகும். இதன் மூலம் அடைபட்ட காற்று வாயின் மூலம் ஒருவித விசையுடன் வெளித்தள்ளப்படும். இதனையும் அடக்கக் கூடாது. இதனை தவிர்க்க, சாப்பிடும்போது உணவின் மீது கவனம் வைத்து, வாயை மூடி, உமிழ் நீருடன் உணவு நன்கு கலக்குமாறு சுவைத்து, மென்று உணவை விழுங்க வேண்டும்.5.புரையேற்றம்உணவுப் பாதையும், சுவாசப் பாதையும் தொண்டையில் ஒன்றையொன்று குறுக்காக கடந்து செல்கின்றன. ஆகவே நம்மால் ஒரே சமயத்தில் சுவாசிக்கவும், உணவை விழுங்கவும் முடியாது. இரண்டில் ஒரு வேலையைத்தான் ஒரு நேரத்தில் செய்ய முடியும். இத்தகைய நிலையில் சில சமயம் உணவுத் துகள்கள் சுவாச பாதையில் நுழைந்து விடும். இதனை வெளியேற்ற உடல், இருமலை தோற்றுவிக்கும். அவ்வாறு நாம் இருமும் போது உணவுத் துகள்கள் வாய்க்கும், மூக்கிற்கும் இடையிலான சுவாசபாதையில் சிக்கிக்கொள்ளும். இதுவே புரையேறுதல் எனப்படும். சாப்பிடும்போது, உணவின் மீதான கவனத்தை விடுத்து பேசுவது, தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது போன்ற செயல்கள் இதற்கு காரணமாக அமைகின்றன. எனவே புரையேற்றத்தை தவிர்க்க உணவின் மீதான கவனம் மிக அவசியம் ஆகும்.6.குறட்டைசுவாசப்பாதையில் காற்று சென்று வருவதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், தூங்கும் போது சத்தம் வரும். இதுவே குறட்டை ஆகும். இதனை உணர்ந்து தொடர்புடைய சிக்கலைச் சரிசெய்ய முயல வேண்டும்.7.கொட்டாவிஉடலில் உயிர்வாயு (ஆக்ஸிஜன்) அளவு குறையும் போது உடல், உள்ளிருந்து அதிகளவு அசுத்த காற்றை வாயின் மூலம் வெளியேற்றும். இதுவே கொட்டாவி ஆகும். இதனைத் தொடர்ந்து அதிகளவு சுத்தமான காற்று உள்ளிழுக்கப்படும். ஆகவே கொட்டாவியையும் அடக்கக் கூடாது.8.ஏப்பம்உண்ணும் போது மற்றும் பிற காரணங்களால் வயிற்றில் சேரும் அதிகப்படியான காற்றை வெளியேற்றும் நிகழ்வே ஏப்பம் ஆகும். அடுத்து கழிவுகள் வெளியேற்றுவது தொடர்பான உடலின் சில குறிப்புகளைக் காணலாம்.1.வாந்திவயிற்றால் செரிக்க முடியாத அல்லது நஞ்சாக மாறிய அல்லது நோய்த்தொற்று நிறைந்த உணவை வாய்வழியாக வெளியேற்றும் உடலின் செயலே வாந்தி ஆகும். எனவே இதனை அடக்க முயற்சிக்கக் கூடாது. வெளியேற அனுமதிக்க வேண்டும். இதற்குத் தீர்வாக வாந்தி உண்டாவதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.2.வயிற்றுப்போக்குகுடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நஞ்சுகள் மற்றும் கழிவுகளை மலவாய் வழியாக வெளியேற்றும் உடலின் செயலே வயிற்றுப்போக்கு ஆகும். இதனையும் அடக்கக் கூடாது. வெளியேற அனுமதிக்க வேண்டும். பதிலாக வயிற்றுப்போக்கின் காரணத்தை கண்டறிந்து அதனை போக்க முயலவேண்டும்.3.காய்ச்சல்உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளை, உடல் தன் வெப்பநிலையை அதிகரித்து அழிக்கும் செயலே காய்ச்சல் ஆகும். இந்த நிலையில் உடல் தன் அனைத்து ஆற்றலையும் உடலின் வெப்ப நிலையை உயர்த்துவதற்கே பயன்படுத்தும். எனவே அந்நிலையில் செரிமான உறுப்புகள் சரிவர இயங்காது. இதன் காரணம் கருதியே நாக்கில் கசப்பு ஏற்படும். ஆகவே காய்ச்சலின் போது எளிமையான மற்றும் குறைவான உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும்.4.வியர்வைபொதுவாக உடலின் பெரும்பாலான கழிவுகள் மலம் மற்றும் சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படும். இவை தவிர உடல் செல்களில் ஏற்படும் கழிவுகளை வெளியேற்றும் உடலின் செயலே வியர்வை ஆகும். வியர்வையை நாம் அனுமதிக்க வேண்டும். அதிகமாக குளிர்சாதனம் பயன்படுத்துபவர்களுக்கு வியர்வை மூலமாக நடைபெறும் கழிவகற்றம் தடைபடுகின்றது. ஆகவே இயன்றவரை ஏசி பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். தலைக்கு சாயம் பூசும்போது, அது தலையின் மேற்த் தோலில் பட்டு படிந்து விட்டால் பிறகு அந்த தோலில் கழிவகற்றம் தடைபடும். ஆகவே இதனையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.5.புளித்த ஏப்பம்வயிற்றில் அஜீரணம் ஏற்படும்போது தேவையற்ற வாயு உருவாகும். இதனை உடல் வாய்வழியாக வெளியேற்றும் நிகழ்வே புளித்த ஏப்பம் என அறியப்படுகின்றது. இதனையும் நாம் வெளியேற அனுமதிக்க வேண்டும்.6.மல வாயு வெளியேற்றம்குடலில் செரிமானம் ஒழுங்காக நடைபெறாத போது அங்கு தேவையற்ற வாயு சேர்கின்றது. அதனை உடல் வெளியேற்றும் நிகழ்வே மலவாயு வெளியேற்றம் (குசு விடுதல்) ஆகும். இதனை அடக்கக் கூடாது. அடுத்து, நோய்களை வெளிக்காட்டும் உடலின் குறிப்புகளை பற்றி காண்போம்.1. நாடி: கையில் நாடி நடையை பார்த்து உடலில் ஏற்படும் பல நோய்களைக் கணிக்கலாம்.2. ஸ்பரிசம்: உடலை தொட்டுப் பார்த்து உடல் சூடு போன்றவற்றை கொண்டு காய்ச்சல் போன்றவற்றை உணரமுடியும்.3. கண்கள்: கண்ணின் இமைகளை சற்று விலக்கி பார்த்து இரத்த சோகை, பித்தம் தொடர்புடைய நோய்களை கண்டறிய முடியும்.4. நாக்கு: வாயில் புண் இருந்தால், வயிற்றிலும் புண் இருக்கும் என்பார்கள். இவை தவிர 5. குரல் 6. தோலின் நிறம் 7. மலம் 8. சிறுநீர் ஆகியவற்றைக் கொண்டும் தொடர்புடைய நோய்களை அறிய முடியும்.இவ்வாறாக, முன்னோர்கள் வழியில் நாமும், நம் உடலின் குறிப்புகளை சரியாக அறிந்து தக்க வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் பலநோய்களிலிருந்து நம்மைக் காத்து நலமுடன் வாழலாம்.- தீ. கார்த்திக்