நலிந்து போன நல்லவைகள் - தமிழ் இலெமுரியா

15 July 2014 3:57 am

இன்ப நிகழ்வாக இருந்தாலும் சரி. துன்ப நிகழ்வாக இருந்தாலும் சரி, நல்ல விளக்கு ஏற்றி வைத்து சடங்கு செய்வது நாடு முழுதும் கடைப்பிடிக்கும் அறிவார்ந்த பண்பாடு. பகலாக இருந்தாலும் பகலொளிபோல மின்னொளி இருந்தாலும் சரி. இரவாக இருந்தாலும் சரி, சின்னஞ்சிறு நல்ல விளக்கு ஒன்றாகிலும் ஏற்றி வைக்கத் தவறுவதில்லை. நாலுபேர் கூடும் இடத்தில் நல்ல விளக்கு ஏற்ற வேண்டும் என்பது, சமுதாயச் சுற்றுச் சூழல் நலன் காக்கும் அறிவியல் நுட்பம்.  நல்ல விளக்கு என்பது ஏற்றி வைக்கும் லட்சுமி விளக்கு என்பதல்ல. அதில் ஊற்றப்படும் நல்லெண்ணையால் ஏற்பட்ட பெயர். நல்லெண்ணையின் ஆவி நாம் சுவாசிக்க வேண்டும். கரியமில வாயுவை அப்புறப்படுத்தி, ஆக்சிஜனை நிரம்பச் செய்யக்கூடியது. அதற்காகத்தான் பகல் நேரத்திலும், மாடத்தில் நல்ல விளக்கு எறிந்து கொண்டிருக்கும். இந்த ஆவி நுரையீரல், மூச்சுக்குழல், அத்தனையையும் தூய்மை செய்வதுடன், திடகாத்திரம் கொடுக்கக்கூடியது. குத்து விளக்கின் மூலம் நல்லெண்ணெய் ஆவி பரவ விட்ட நிலை திரிந்து, மின்சார பல்புகள் மின்னிக் கொண்டிருக்கும் திரிபு நிலைக்குச் சென்று விட்டதே. பயன்படுத்தும் எண்ணெயே, சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், பனை எண்ணெய், என்ன எண்ணெய் என்று சொல்ல முடியாத சுத்திகரிப்பு எண்ணெய். ஏதோ, எதற்காகவோ, விளக்கு என்று ஒன்று எரிந்தால் சரி என்கிற கோமாளித்தனத்திற்கு இறக்கப்பட்டு விட்டது. ‘‘பகலில் படுத்து எழ பலா இருக்கு’’ என்பது நம் நாட்டு பழமொழி. முக்கனிகளில் ஒன்று பலா. பலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதன் சுவைக்காக என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். பலாவின் ஆவி நரம்பு மண்டலத்தை, தூய்மைப் படுத்தி தூண்டி விடக்கூடியது. பலா பழம் சிறு பிள்ளையிலிருந்து சேர்த்து வருபவர்களுக்கு, நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம் போன்ற நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படாது. பலா சாப்பிட்ட மறுநாள் கழிப்பறை செல்லும்போது, கழிக்கப்பட்ட கழிவு கூட பலாவாசம் அடிக்கும். திடக்கழிவின் நாற்றத்தையே வாசனையாக மாற்றக்கூடியது என்றால், பலாப்பழ ஆவி உடலின் தசை நார்களை எப்படி மாற்ற வல்லது என்று உய்த்துணர வேண்டும். பலா கொழுந்து, கால்நடைகளின் நோய்களுக்கு அரும்பெரும் மருந்து. அசாதாரண காயலாக இருந்தாலும் சரி, கசப்பு நோய் போன்று, வாயிலிலும், கால்களிலும், புண் ஏற்பட்டு, பால் குறைவு ஏற்பட்டு, முழு உடலே நோய் தொற்றில் சிரமப்பட்டாலும் சரி, மடிநோயில் பால் திரிந்து போதல், வீக்கம் வலி ஏற்பட்டு பால் உற்பத்தியே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டாலும் சரி, மற்றபடி காரணம் தெரியாத பல்வேறு காயலால் தாக்கப்பட்டிருந்தாலும், பலா கொழுந்து, இலை, கொடுத்தோமேயானால், நிலைமை சரியாகிவிடும். பொதுவாகவே பலா இலை ஆடுமாடுகளுக்கு அவ்வப்போது கொடுத்து வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். மனிதருக்கும் அப்படித்தான். எல்லாவற்றையும் விட பலா ஒரு ஆண்மைப் பெருக்கி.  தமிழர்களின் விருந்தோம்பலில் பலா சேர்க்கப்பட்டதின் நோக்கமே இது தான்! மனிதன் குடும்ப இன்பத்தில் முழுமை அடைந்து வாழ வேண்டும். இதற்காகத்தான் வெற்றிலையும் சேர்த்து வந்தார்கள். தமிழர்களின் வாழ்வில் எல்லா நிகழ்ச்சிகளிலும் வெற்றிலைப் பாக்கு பயன்பாடு என்பது மாற்ற முடியாத சம்பிரதாயமாக இருக்கிறது. விருந்தினரை அழைப்பதே வெற்றிலை பாக்கு வைத்து தான். வெற்றிலை பாக்கு என்பது மகிழ்ச்சிப் பெருக்கின் அறிகுறி. குடும்ப இன்பத்தில் முழுமை பெறச் செய்யக்கூடியது. மக்கட்செல்வம் குறைவுபடாமல் கொடுக்கக்கூடியது. ஆணுக்கும் பெண்ணுக்கும் முழுமையான அளவில் இன்பம் அளிக்கக் கூடியது. அத்துடன், செரிமான சக்தியை அதிகரித்தல், அமில உணவை, காரநிலைக்குச் சரிப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல் என்பன பக்கவாட்டில் உள்ள சிறுசிறு பயன்பாடுகள். நரம்பு மண்டல தூண்டல் என்பதும், முழு அளவான இல்லற இன்பம் என்பதும் தான். முதலில் கவனிக்க வேண்டிய பலா பலன்கள். இன்னும் கிராமங்களில் வெற்றிலை பயன்பாடு குறையவே இல்லை. நாகரிகம் அடைந்துவிட்டதாகக் கருதும் மனிதன், வெற்றிலையை துறந்து விட்டதுடன், தன் முழு ஆண்மையையும் குறைந்து போக விட்டு விட்டானே! வருந்த வேண்டும்.   ஆண்மை பாதுகாப்பிற்கு வெற்றிலை போன்றே ஆலம் விழுது, அரசங்கொழுந்து, மாங்கொழுந்து முக்கியமான இடம் பெறுகிறது. அவ்வப்போது மாங்கொழுந்து, தென்னம்பூக்கள் மென்று வருபவர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையும், உயிரோட்டமும் சிறப்பாக இருப்பதாக முன்னோர்களின் நம்பிக்கை, உண்மையே!மா இலை, தென்னங்குருத்து தோரணங்கட்டி சுற்றுச்சூழலில் அதன் ஆவி நிறைந்திருக்கச் செய்யும் பழக்கம் நம்மிடம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனையும் நெகிழியாகக் (பிளாஸ்டிக்காக) கட்டுகிறோம். நாம் எவ்வளவு பெரிய புத்திசாலிகள்!? தொழிற்சாலைகள் நிரம்பியுள்ள பகுதியில் அதன் புகை வெளிப்பாடு ஆண்மையை குறைத்து வருகிறது என்பதான ஆய்வு முடிவும் உண்டு. எல்லாவற்றையும் விட, சூரிய ஒளி ஆண்மையை பெருக்கும் ஆணித்தரமான சக்தி. சூரிய ஒளியில் வேலை செய்பவர்களின் உடல் திடகாத்திரம் என்றென்றும் நிரந்தரமாக இருக்கக் காண்கிறோம். சூரிய ஒளியே உடலில் படாமல் பாதுகாத்துக் கொள்ளும் நாகரிகம் (!) வளர்த்துக் கொண்டு விட்டோம். ஆம் தானே! அதிலும் பருத்தி இல்லாமல், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட சட்டைகள், சூரிய ஒளியை உள்ளே விட மறுப்பதால் ஆண்மை குறைவு ஏற்படுத்துகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.‘‘சூரியன் போகாத இடத்திற்கு மருத்துவன் போகிறான்’’ என்பது இத்தாலியப் பழமொழி. சூரிய ஒளிப்படாதவர்களுக்கு கலவி நேரங்கூட முழுமை அடைவதில்லை என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதைப்பற்றி யாரும் யாரிடம் விவாதிப்பதில்லை. இவ்வளவு தான் எல்லோருக்கும் என்பதாக நம்பி, அமைதி அடைந்து விடுகிறார்கள். குடும்ப சிக்கல் பெருகி, அன்பில்லா நிலையில் விவாகரத்து, அப்படி இப்படி என்று ஆன பிறகு, மெல்ல மெல்ல செய்தி கசிகிறதே ஒழிய, தானே முயன்று நல்லது செய்து கொள்ளும் மனம் வரவில்லை. சில ஆண் பெண் மேலாடைகளுக்கான விளம்பரத்தை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். இது 100% உண்மையான பருத்தியால் தயாரிக்கப்பட்டது. சூரிய கதிர்வீச்சை, உள்ளே அனுமதிக்கக்கூடியது என்பதாக விளம்பரங்களை காணும்போது, இதன் உட்பொருள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. பாதிக்கப்பட்டவர்களாகிலும் கவனித்துப் பொருள் புரிந்து கொள்கிறார்களா என்பது ஐயப்பாடே! தமிழர்களாகிய நாம் இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். சூரிய ஒளியில் உள்ள ஊதாநிற கதிர்வீச்சு குறிப்பாக காலை 11 முதல் மாலை 3 வரை ஓசோன் மண்டல ஓட்டையைப் பயன்படுத்தி பூமிக்கு கசிந்து வருகிறது. இந்த கதிர் வீச்சையும், மற்றபடி கிரகிக்க வேண்டியவைகளைக் கிரகித்து, வெளியில் தள்ள வேண்டியதை வெளித் தள்ளுவதற்கு நம் உடலின் தோல், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பண்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மண்ணில் நிலையாக வாழ்ந்து, அந்தந்த மண்ணுக்கேற்ற மரபு வழி கொண்டிருந்தவர்கள் தானே நாம். நம் தோல் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்குத்தக்கபடி வடிவமைத்து ஏற்றுக்கொண்ட இயற்கை நிறம் அல்லவா! இது கேவலமாகிவிட்டதா? நம் உயிர் அணு மரபு இப்படி அமைந்து வளர்ந்தது தானே! பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் நாம் இந்த இயற்கைச் சூழலுக்கு ஏற்றபடியான தோல் அமைப்பு, நிறம் கொண்டவர்களாகத்தானே இருப்போம். மண்ணையும் அதன் மாண்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  சூரிய ஒளி படமுடியாத பூகோள அமைப்பில் வாழ்பவர்கள் வெள்ளை நிறமாக இருக்கலாம். அது அவர்கள் நாட்டிற்கான மண்ணின் மரபு. நாம் ஏன் சிவந்த தோல் பற்றி ஆசைப்பட வேண்டும்? சிவப்பான மணமகன், சிவப்பான மணமகள் தேடுவதே ஆடம்பரம் நோக்கி செல்லும் பாதையே தவிர,  அறிவார்ந்த செயல் ஆகாதே! தமிழன், தமிழனாகத்தான் இருக்க வேண்டும். நாம் ஏன் அந்நியனாக மாற வேண்டும்? அப்படி மாறினால் நோய் தடுப்பு சக்தி உட்பட என்னென்னவோ இழந்து, விதவிதமான நோய்கள் வரத்தான் செய்யும். புதுப்புது நோய்கள், மருந்துக்குக் கட்டுப்படாதவைகளாக, நம் நாட்டிற்குள் நுழைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று சிந்திக்க வேண்டும்.- மருத்துவர் காசிபிச்சை

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி