பெற்றோர்களே! உங்கள் குழந்தை மண் சாப்பிடுகிறதா? - தமிழ் இலெமுரியா

16 February 2017 1:40 pm

குழந்தைகள் மண் போன்ற பல வேண்டாத பொருட்களை  தின்கிறார்கள் என்றால் அது  குழந்தைகளின் குற்றமன்று. அது ஒரு நோய் என்பதுதான் உண்மை. பிகா (pica) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதுண்டு. இது ஒரு மாறுபட்ட வளர்ச்சி நோய் (Development disorder).  இது குழந்தைகள் ‘சாப்பிடத் தகாத பொருட்களை சாப்பிடுவது’ என்று சொல்லலாம். ஆம்! செங்கல், மண், குங்குமம், விபூதி, பலகையில் எழுதும் குச்சி  போன்றவற்றை குழந்தைகள் சாப்பிடுவது ஒரு நோய். குழந்தைகள் வாயில் விரல் போட்டு சப்புவது ஒரு வளர்ச்சி நிலை! குழந்தை எல்லாவற்றையும் வாயில் வைப்பதும், 9, 10 மாதங்களில் எந்தச் சின்னப் பொருளையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்வதும் இந்தக் கற்றலுக்காகத்தான்! இது மிகவும் நுண்ணிய ஒரு வளர்ச்சிக் கோட்பாடு. பல் முளைக்கும் பருவத்தில் வாயிலும் ஈறுகளிலும் ஒரு குறுகுறுப்பு உணர்வு ஏற்படும். ஏதாவது மெல்ல வேண்டும், கடிக்க வேண்டும் போல குழந்தை உணரும்! எது சாப்பிடும் பொருள் எது சாப்பிடக் கூடாத பொருள் என்று தெரியாத வயதல்லவா! அதனால்தான் எதை எடுத்தாலும் கடிக்கும்! குழந்தை வளரவளர இந்த செய்கை மாறிவிடும். ஒன்றரை- & இரண்டு வயதிற்குப் பிறகும் குழந்தை கல், மண், என்று கண்டதை சாப்பிட்டால், அதை ஒரு நோயாகவே கருத வேண்டும். குழந்தைகள் ஏன் இப்படி செய்கின்றனர்? இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எனினும் மன ரீதியான காரணங்கள் தான் முக்கியமானவை. பெற்றோர்களிடையே சண்டை சச்சரவு, சிதைந்த குடும்ப உறவுகள், பெற்றோரிடமிருந்தும் பாசமான உறவுகளிடமிருந்தும் பிரிக்கப்பட்டு வளர்த்தல், பாதுகாப்பு உணர்ச்சி இல்லாத சூழ்நிலை, குழந்தைகளுக்கு சரியான கவனிப்பு மேற்பார்வை இல்லாத நிலை, பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடாதிருப்பது, எல்லாவற்றுக்கும் மேலாக  தாய் குழந்தையை விட்டு வேலைக்கு செல்லுதல். சமுகப் பொருளாதாரக் காரணங்களான ஏழ்மை, உணவுப் பற்றாக்குறை, வீட்டில் இடப் பற்றாக்குறை இவற்றால் கூட குழந்தைகள் கல், மண் சாப்பிடலாம். இன்னும்  சில நோய்கள் வழியாகவும்  நிகழலாம். அவற்றில்  சத்துணவு குறைபாடு, இரத்த சோகை, இரும்புச் சத்து குறைபாடு, துத்தநாகக் குறைபாடு, குடல் புழுக்கள் நோய் போன்றவையாகும். உடம்பில் ஏற்படும் இரும்புச்சத்து மற்றும் துத்தநாகக் குறைபாடு நாக்கில் மாறுபட்ட ருசியை ஏற்படுத்துவதால், கல், மண் போன்ற ஈரமான குளுமையான பொருட்களை சாப்பிடத் தோன்றும். கர்ப்ப காலத்தில் மகளிர் இந்த பழக்கத்துக்கு ஆளாவதும் நாக்கில் ஏற்படும் இந்த மாறுபட்ட ருசியால்தானே! இன்றைய காலக் குழந்தைகள் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சாப்பிடக்கூடாத பொருட்களை சாப்பிடுவதாக கண்டறியப் பட்டுள்ளது. அதிலும் ஏராளமானக் குழந்தைகள் சுவற்றில் உள்ள சுண்ணாம்பு, காரை, சிலேட்டுக் குச்சி, மணல், சுண்ணாம்புக் கட்டி (சாக்பீஸ்) போன்றவைகளை நிறையவே சாப்பிடுகின்றனர். இதனால்  ஏற்படும்  நோய்களும்  அதன்  பாதிப்புகளும்  ஏராளம். வயிற்றில்  கிருமித் தொற்று, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், குடல்  புழுக்களால்  பசியின்மை, இரத்த சோகை முதலான நோய்கள் உண்டாக்குகிறது.  அத்துடன் மனநலனும்  பாதிக்கப்படலாம்.  இனி இதற்கு என்ன தீர்வு என்பதை அறிந்துக்கொள்ளலாம்.  குழந்தையைத்  தண்டிக்க முயற்சிக்காதீர். இது அடித்து திருத்த வேண்டிய பழக்கம்  அல்ல! அடிப்பதால், தண்டனைகள்  தருவதால்  இந்த நோய்  அதிகமாகும்  வாய்ப்பே உள்ளது. அடிக்கு பயந்து குழந்தை மறைவில்  சென்று தின்னும்! ஏமாற்றும்! தின்னவில்லை என்று பொய் சொல்லும்  பழக்கம்  ஏற்படும். அடி வாங்குவதால்  பெற்றோர் மீது வெறுப்பு அதிகமாகி மன உளைச்சலுடன்  இன்னும்  அதிகமாக  மண்  சாப்பிடத் துவங்கும். இது  நல்லதல்ல! குழந்தையை அன்புடன்  அணுகி, அதனிடம் தகுந்த அக்கறை காட்டி, குழந்தையுடன்  பெற்றோர்  அதிக நேரம்  செலவழிக்க வேண்டும். இப்படித்  தின்பதால்  என்னென்ன  தீமைகள்  என்று குழந்தையின் வயதுக்கு ஏற்ப புரிய வைக்க வேண்டும்; குழந்தைக்கு நல்ல மாறுதல்  ஏற்பட வழி வகுத்துக்  கொடுக்க  வேண்டும். நல்ல விளையாட்டுகளில்  ஈடுபட வைக்கலாம். கதை பாட்டு சொல்ல வைத்து கவனத்தை திருப்ப முயற்சிக்கலாம். அதன் பின் இந்தப்பழக்கம் குறைந்து, வருகிறதா என்று  நிதானமாக மேற்பார்வை பார்க்க வேண்டும். ஆசிரியரின்  உதவியையும் சக  குழந்தைகளின்  உதவியையும்  பெறலாம். குழந்தைகளுக்கு  குடல்  பூச்சி மருந்தினை ஆறு மாதத்திற்கு  ஒருமுறை  கொடுக்க வேண்டும். மேலும்  மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். குழந்தைக்கு சத்துக்  குறைபாடு நோய்கள், சோகை போன்றவை இருந்தால்  அவற்றிற்கு  தகுந்த சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். குழந்தைக்கு உணவு ஊட்டுவதில்  மருத்துவரின்  அறிவுரையை  பெற்று அதனைக்  கடைபிடிக்க வேண்டும். குழந்தை வளர்ப்பில் ஈடுபாடு, அக்கறை, கவனம்  செலுத்தி குழந்தைக்கு தரும்  அன்பும் அரவணைப்பும்தான்  இதனை தடுக்க முடியும்.- மருத்துவர் ந.கங்கா

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி