மன அழுத்தத்தை குறைப்பது எப்படி? - தமிழ் இலெமுரியா

17 November 2016 6:40 pm

இன்று மனித உயிர்களின் அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக இருப்பது மன அழுத்தமே!. ஓரளவு மன அழுத்தம் நமக்குத் தேவைப்பட்டாலும் எப்போதும் மன அழுத்தத்திலேயே உழன்று கொண்டு இருப்பது நமது உடல்நலத்திற்கு உலை வைக்கும். மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை அதிகமாக உண்பது, புகைபிடிப்பது, எந்த வேலையும் செய்யாது சோம்பேறித் தனமாக இருப்பது போன்றவற்றைக் கடைபிடிப்பது நல்லதல்ல. அமைதியாகவும் ஆசுவாசமாகவும் இருக்கப் பழகிக் கொள்வது வாழ்க்கையை ரசிக்க உங்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய இதயத்திற்கும் நல்லது. மன அழுத்தத்தைக் குறைக்கப் பல வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இப்போது நாம் பார்க்கலாம். முதலில், உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டு பண்ணும் விடயங்களைப் பட்டியலிடுங்கள். அப்படிப்பட்டச் சூழல்களைக் கண்டுபிடித்து வைத்துக் கொள்வதே முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பதற்கு சமம். அப்படிப்பட்டச் சூழல்களில் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயலுங்கள்.உங்களுடைய சிக்கல்களை மனம் விட்டுப் பகிர்ந்து கொள்ளக் கூடிய உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிக்கலைப் பிறரிடம் பகிர்ந்து கொண்டாலே பாதிச் சுமை குறைந்துவிடும் என்ற கூற்றை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.தியானம், யோகா, பிரணாயாமம், மசாஜ் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் உத்திகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.அடிக்கடி உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அது ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே இருந்தால் கூடப் பரவாயில்லை. தொடர்ந்து ஒரே வேலையையே செய்து கொண்டிருக்காதீர்கள். உங்களுக்குப் பிடித்த வேறு ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள். மனதைத் திசை திருப்பி ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.சுறுசுறுப்பாக நடத்தல், மிதிவண்டியில் பயணித்தல், விளையாட்டுகளில் ஈடுபடுதல் போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.ஒரே நேரத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள். வேலைகளின் முன்னுரிமைக்கு ஏற்றவாறு அவற்றை வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் கடைசி நேரத்தில் செய்வதற்கு பதிலாக முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.மன அழுத்தம் கட்டுக்கடங்காமல் போய்விட்டால் தகுந்த மருத்துவரிடம் செல்லுங்கள். எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் உன்னதமாகச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியாதீர்கள். உங்களால் மாற்ற முடியாத விடயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் கோபத்தை உங்களுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்ளாதீர்கள்.சமயங்களில் ‘முடியாது’ என்று சொல்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள்.உங்களுடைய உணர்ச்சிகள் உங்களை வெற்றி கொள்ள அனுமதிக்காதீர்கள். அவற்றை உங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ளுங்கள்.ஒருபோதும் பிறரோடு போட்டியிடாதீர்கள். அவர்களை வாழ்த்துங்கள்.எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள். மன அழுத்தத்திற்கு அது சிறந்த மருந்து.தள்ளிப் போடுதலும் மன அழுத்தமும் ஒன்றாகப் பயணிப்பவை.உங்களிடமும் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.உங்கள் வாழ்வில் கற்பனையான தடைகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.பிறரையும் உங்களையும் மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.உங்களை ஒரு மென்மையான மனிதராகவும் பொறுமைசாலியாகவும் ஆக்கிக் கொள்ள முயலுங்கள். – குமாரசாமி, நவிமும்பை

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி