18 May 2014 5:37 am
உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் காற்றை அசுத்தப்படுத்தக் கூடிய உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய கழிவுகள் உற்பத்தியாகின்றன. இதில் அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு ஐந்தரை இலட்சம் பேர் காற்று அசுத்தமாவதால் ஏற்படும் நோய்களால் இறந்து போகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் சுமார் 3.35 இலட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயினால் இறக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் காற்று மாசுபடுவதுதான். உலகிலுள்ள மனிதர்கள் எந்த நோயால் அதிகமாக இறக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு COPD என்று சொல்லக்கூடிய நாள்பட்ட நுரையீரல் பாதைத் தடுப்பு நோய்" (Cronic Obstructive Pulmonary Disease) பதினாறாவது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்த நோய் நான்காவது இடத்துக்கு வந்து விட்டது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சற்றொப்ப 3, 000 கேலன் (ஒரு கேலன் என்பது சுமார் 3.88லிட்டர் ஆகும்) காற்றைச் சுவாசிக்கிறான். இதில் சுமார் 142 கேலன் சுத்தமான ஆக்சிஜன் (உயிர்காற்று) வாயுதான் அவன் உடலுக்கு கிடைக்கிறது. மீதமுள்ளதெல்லாம் சுத்தமற்ற காற்றுதான். இந்த நிலை தொடர்ந்தால் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எல்லா மருத்துவமனைகளிலும் நுரையீரல் பாதிப்பு நோயாளிகள்தான் அதிகமாக இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. காற்று மாசு இயற்கையாக எரிமலை வெடித்துச் சிதறுதல் மூலமாகவும் ஏற்படுகிறது. ஏறத்தாழ 500 எரிமலைகள் உலகில் உயிரோடு இருக்கின்றன. இதில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 எரிமலைகள் வெடித்துச் சிதறி நச்சு வாயுக்களையும், சாம்பலையும் கக்கிக்கொண்டு இருக்கின்றனவாம். இந்த நச்சு வாயுக்களும் சாம்பலும் எரிமலை வெடிக்கும் போது வெளியாகிக் காற்றில் கலக்கின்றன. பூமியிலிருந்து சுமார் 16 முதல் 32 கிலோ மீட்டர் உயரத்துக்கு எரிமலைகள் வெடித்துச் சிதறி மேற்கூறிய மாசுப் பொருட்களை வானத்தில் பரப்பி விடுகின்றன. இப்படிப்பட்ட எரிமலைகளுக்குப் பக்கத்தில் சுமார் 50 கோடி மக்கள் வாழ்கிறார்களாம். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. புகையிலை புகைப்பவர்களை விடப் பக்கத்தில் நின்று கொண்டு அவர்கள் விடும் புகையை சுவாசித்துக் கொண்டிருப்பவர்களுக்குப் பாதிப்பு அதிகம் உண்டு. நீங்கள் வெளிவிடும் புகையிலை புகை இந்த நாட்டு மக்களுக்கே கெடுதல் செய்கிறது என்பதை புகையிலை விரும்பிகள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்க ஒருவர் மட்டும் புகையிலை புகைக்கவில்லையே? உலகம் முழுவதும் 150 கோடி பேர் புகையிலை வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இத்தனை கோடி பேரும் விடும் புகை, காற்றை அசுத்தப்படுத்துமா? படுத்தாதா? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நீங்களும் உங்க குடும்பத்தினரும் கூட இந்த அசுத்தக் காற்றைத்தான் சுவாசிக்கிறீர்கள் அல்லவா? இது கெடுதிதானே! ஆகவே தயவு செய்து இன்றோடு புகையிலையை நிறுத்திவிடுங்கள். இதுவரை புகைத்தது போதும். நாம் வசிக்கும் இடத்தைச் சுற்றி புகையிலை பிடித்தால் கர்ப்பிணிப் பெண்களின் கருவில் குழந்தை உருவாவதையும் தொந்தரவு செய்யும். நாம் இறை வழிபாடு செய்யப் பயன்படுத்தும் கற்பூரம் எரியும் போது கார்பன் துகள்களையும், கார்பன் படிமங்களையும் அதிகமாக உண்டு பண்ணுகிறது. இவை காற்றில் கலந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். அதனாலேயே இப்பொழுதெல்லாம் கோயில்களில் கற்பூரத்திற்குப் பதிலாக எண்ணெய் அல்லது நெய்யைத் தீபம் ஏற்றப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அதையே நாம் தொடர்ந்து பயன்படுத்தலாமே. சுத்தமான காற்று கிடைப்பது என்பது மிக மிக கடினமாக இருக்கிறது. இந்த நிலையில் சுத்தமான ஆக்சிஜனுக்கு எங்கே போவது? என்ற கவலையைப் போக்க "ஆக்சிஜன் பார்லர்" என்ற கடைகளை வெளிநாடுகளில் திறந்திருக்கிறார்கள். இந்தியாவிலும் இருக்கிறது. சுத்தமான ஆக்சிஜனைச் சுவாசித்து, உடலில் தெம்பை ஏற்றிக் கொள்ள இந்தக் கடைகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த கடைகளில் அதிக விழுக்காடு சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். நம் நாட்டில் இது இன்னும் பிரபலமாகவில்லை. நாம் காற்றை அசுத்தப்படுத்தாமல் இருந்தாலே இந்தக் கடைகளெல்லாம் தேவையில்லை. அது சரி… நாம் காற்றை அசுத்தப்படுத்தாமல் இருப்பது எப்படி?நெகிழி(பிளாஸ்டிக்)களினால் தயாரிக்கப்பட்ட எந்தப் பொருளும் மண்ணுக்குள் மக்காது. எரித்துதான் ஆக வேண்டும். எரித்தால் நச்சுப்புகை வரும். ஆகவே நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதைக் குறையுங்கள்.மண்ணில் மக்கிப் போகக்கூடிய எல்லாப் பொருட்களையும் கொளுத்துவதற்குப் பதிலாகப் புதைத்து விடுங்கள். வீடு, குளியலறை முதலியவற்றை கழுவ அதிக ஆற்றல் வாய்ந்த "சுத்தம் செய்யும்" (கிளினீங்) பொருள்களை பயன்படுத்தாதீர்கள்."எரிவாயு" மூலம் இயங்கும் இயந்திரங்களுக்குப் பதிலாக மின்சாரம் மூலம் இயங்கும் இயந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்துங்கள்.வாகனம் ஓட்டும் போது அடிக்கடி வேகத்தைக் கூட்டிக் குறைத்து ஓட்டாதீர்கள். மிதமான வேகத்தில் செல்லுங்கள்.புகைப் பிடிப்பதை நிறுத்துங்கள்.உங்களது வாகனத்தில் அதிக புகை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். நம் தலைமுறைகள் நீண்ட காலத்துக்கு நிலைத்து உயிர் வாழ மாசற்றக் காற்று மிக மிக முக்கியம். அதற்கு இந்தத் தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் உதவி புரிய வேண்டும்.- டாக்டர் ச.அமுத குமார்"