45 நாள் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர் - தமிழ் இலெமுரியா

31 May 2013 5:46 pm

Fisherman

காரைக்கால் : மீன்பிடி தடைக்காலம் முடிந்ததை அடுத்து நாகை, காரைக்கால், பூம்புகார் விசைப்படகு மீனவர்கள் 40 ஆயிரத்து 500 பேர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஏப்ரல் 15 முதல் மே 30ம் தேதி வரை கடலில் மீன்களின் இனப்பெருக்க காலம். இதனால் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள், இந்த 45 நாட்களும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தாண்டு மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த 350 விசைப்படகுகளை கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்கள், நாகை மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 50 விசைப்படகுகளை கொண்டு மீன்பிடிக்கும் மீனவர்கள் என 8 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்கள் படகு, வலை மற்றும் மீன்பிடி சாதனங்களை சீரமைத்து வந்தனர். இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்ததால் காரைக்காலில் இருந்து 8 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர்.

நாகை: இதேபோல் நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 3,700 விசைப்படகுகளில் 30 ஆயிரம் மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தடைக் காலத்துக்கு பின் கடலுக்கு செல்வதால், அதிகளவில் மீன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல துவங்கி இருப்பதால் ஜூன் முதல் வாரம் தொடங்கி கடல் மீன் விற்பனை மீண்டும் சூடு பிடிக்கும் என்று மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

பூம்புகார்: நாகை மாவட்டம் பூம்புகார், வானகிரி, புதுக்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 2,500 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். குட்டியாண்டவர் கோயிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்ட பின் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தூத்துக்குடி: தடை காலத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 280 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மீனவர்கள் தங்கள் படகுகளில் உள்ள பழுதுகளை சரிபார்க்கும் பணிகளையும், பெயின்ட் அடித்தல், வலை களை சரிபார்த்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் விசைப்படகுகள் கடலுக்கு புறப்பட்டு சென்றன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. இன்று முதல் மீன்கள் வரத்து அதிகரித்து மீன்களின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி