11 January 2015 6:31 pm
இலங்கைத் தீவின் கண் பலவாயிர யாண்டுகளாகச் சிங்களமும், செந்தமிழும் வீட்டு மொழியும் நாட்டு மொழியுமாக வழங்கி ஆட்சி மொழியாகவும் திகழ்ந்துள்ளன. அவ்விரு மொழியாளரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று பன்னெடுங்காலம் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். வேற்று மொழியாளர் ஆட்சியிலும் வேற்றுமையின்றி வாழ்ந்தனர். நாட்டுரிமை பெற்று நலமுடன் வாழ்ந்து வரும் நாட்டாட்சிக் காலத்தில் இக்கொடுமை நிகழ்வது நினைக்கவும், சொல்லவும், அடக்கவும் ஒண்ணா நெருப்புப் போன்று இருக்கின்றது. இரு மொழியாளர்களும் விழுக்காட்டு முறையில் முறையே மூன்று பங்கும் இரண்டு பங்குமாகக் காணப்படுகின்றனர். அம்முறையில் மிகச் சிறுபான்மையின்றி ஏறத்தாழ ஒத்த பெரும்பான்மையராகக் காணப்படும் தமிழ் மொழியினையும் தமிழ் மக்களையும் புறக்கணிப்பதை நடுநிலையாளர் எவரும் ஏற்கார். ஆட்சியாளர் வருமுன்னர்க் காக்கும் வன்மையுடையராக இருத்தல் வேண்டும். இலங்கை ஆட்சியாளர் அம்முறையைக் கைக்கொள்ளத் தவறிவிட்டனரெனத் தெரிகின்றது. இலங்கை நல்வாழ்வுக்குப் பன்னெடுங்காலமாகத் தொழில் புரிந்து இலங்கையினையே தம் வாழிடமாகவும் தாங்கள் இலங்கைக் குடியுரிமையாளரெனவும் முற்றும் நம்பி வாழ்ந்து வந்து இந்தியக் குடியுரிமையையும் இழந்து இன்னலுறும் இலங்கை இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் செம்மையான நீதிமுறை வழங்கவில்லையென்றும் தெரிகிறது. இக்குறையினை முறை வழங்கும் அங்குள்ள உயர் மன்றங்களே எடுத்துக் கழறியிருக்கின்றன. இலங்கை முதலமைச்சர் பண்டாரநாயகா, தமிழ் மக்கள் தங்கள் மொழிக்கும் இனத்திற்கும் முறையான உரிய பாதுகாப்புகளையே கோருகின்றனர் என்னும் மெய்மையினை ஒப்புக் கொண்டு கடந்த சூலைத் திங்களில் ஓர் உடன்பாடு அவர்களுடன் செய்து கொண்டனரெனவும் தெரிகின்றது. அதன்படி தமிழர் பெரும்பாலார் வாழும் வட கிழக்குப் பகுதிகளில் தமிழ் ஆட்சி மொழியாவதுடன் அப்பகுதிகளுக்கு முழு நாட்டுரிமை யாட்சியையும் வழங்கியிருத்தல் வேண்டும். ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை முதலமைச்சர் திடீரென்று ஒருதலை கோடி மறுத்துவிட்டனர். அதற்கு காரணம் சிங்கள வெறியர்களின் வற்புறுத்துதலேயாகும். ஆட்சித் துறையிலுள்ளார் இத்தகைய செவ்விகளில் மிக்க விழிப்புடனிருந்து அஞ்சா நெஞ்சினராய் நடுநிலை வழாது வடுவஞ்சி வாய்மொழிந்து முறை புரிதல் வேண்டும். இச்சிறு புறக்கணிப்பால் நேர்ந்த பெருங்கேடு எந்த வகையாலும் ஈடு செய்ய வொண்ணாத பேரிழப்பாயிற்று. தமிழர் கட்சியினருக்கு வேறு வழியின்றி ஆகசுடுத் திங்களில் உண்மை மேற்கோடல் (சத்தியாகிரகம்) என்னும் அறப்போர் துவங்கினர். அதன் விளைவாகவே இத்தனை கொடுமைகளும் நிகழலாயின. கலகக்காரர்களின் கொடுமையால் உயிருக்கஞ்சி நெடுநாள் வாழ்ந்து வந்த வீடு வாசல்கள், உடைமைகள் முதலியவற்றை விட்டுவிட்டு நாலாயிரம் தமிழர்கள் வட யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்து விட்டனர். இவ்வாறே யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டாயிரம் சிங்களவர் கொழும்புக்கு வந்திருக்கின்றனர். இப்பொழுது வட கிழக்குத் தீவுப் பகுதி ஒரே குருதிக் களமாக விளங்குவது பெருவருத்தம் தருவதாகும். இனியேனும் இலங்கை ஆட்சியாளர் நேரிய முறையில் முறை வழங்கி அமைதி காப்பாராக. சிங்களவரின் வெறிச் செயலுக்குச் சிறிதும் இடங்கொடாதிருப்பாராக. நாட்டு நலமும் மாந்தர் நலமும் ஒருங்கு விரும்பும் நல்லறிவாளர் ஒற்றுமைக்கு வழிகோலிக் கடமையை நிறைவேற்றுவாராக. இந்தியப் பேரரசினரும் தமிழரின் முறையான உரிமைப் போராட்டத்திற்கு ஒழுங்கு முறைப்படி புரிய வேண்டிய உதவிகளைப் புரிவாராக. இலங்கை ஆட்சியாளர் போக்கு மேலும் கவலைக்கிடமாக கிடக்கிறது; இருசாராரையும் ஒப்ப நோக்கும் கொள்கையினைக் கைவிட்டு ஒருதலைக் கோடித் தமிழர் தலைவர்களைச் சிறை செய்வதும் வெளியில் வரவிடாது தடை பிறப்பிப்பதும் தற்காப்புக்காக ஆட்சியினர் ஆணை பெற்று வைத்துள்ள துப்பாக்கி முதலிய கருவிகளைப் பறிமுதல் செய்வதும் ஆகிய செயல்கள் கொடிய அடக்குமுறை ஆட்சியாகத் தெரிகிறது. இச்செயலால் பின் விளைவினை எண்ணிப்பாராது அறமுறை திறம்பிச் சருவாதிகாரம் எனப்படும் தானப்படியாட்சி தாண்டவமாடுகிறது எனத் தெரிய வருகிறது. ஆட்சியாளரும் தலைவர்களும் இவற்றை நன்கு எண்ணிச் செங்கோன்மையராவாராக. இந்தியப் பேரரசினைப் போன்று சென்னை மாநிலத்தரசினரும் வாய்வாளாதிருத்தல் பெரிதும் வியப்பைத் தருகின்றது. இனியேனும் முன் வந்து வேண்டுவன புரிவாராக. தமிழ்மொழி, தமிழர் என்பவர்களுடைய நலத்தை நாடும் நற்றலைவர்கள் ஆங்காங்குக் கண்டனக் கூட்டம் நிகழ்வித்துத் தமிழர்களுக்குப் பக்கத் துணை உளதெனக் காட்டுவது அவர் தம் பெருங் கடமையாகும்.- (செந்தமிழ்ச் செல்வி இதழ் - சூன் 1958)குற்றமா?இலங்கையில் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனவெறிக் கொடுமைகளின் வரலாறு மிக நெடியது என்பதை 1958 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இக்கட்டுரையின் வரிகள் படம் பிடித்து காட்டுகின்றன. இந்தச் சிக்கலில் இந்திய அரசின் மவுனமும் இலங்கை அரசிற்கு மறைமுக ஆதரவு என்பதும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டையே தோற்றுவித்துள்ளன. இன்று தமிழர்கள் பல நாடுகளில் ஏதியிகளாகச் சுற்றித் திரியும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியாளர்கள் மாறிடினும் ஈழத்தமிழர் இறையாண்மை குறித்தத் தெளிவு இன்று வரை பிறக்கவில்லை. தமிழர்களாகப் பிறந்ததே இவ்வுலகின் பார்வையில் குற்றமா?- ஆசிரியர்.