14 April 2014 5:51 am
உலகில் பிறந்து விட்ட மனிதர்கள், வளர்ந்துவிட்ட மனிதர்கள், வாழ்நாளில் எதற்காவது யாருக்காவது பயன்பட வேண்டும். நம் மனைவி, மக்களுக்குப் பயன்பட வேண்டும். நம்மைப் பெற்றவருக்குப் பயன்படும் படி வாழ வேண்டும் அல்லது உலகிற்குப் பயன்படும்படி வாழ வேண்டும். எதற்கும் பயன் இல்லாமல், யாருக்கும் உதவிகரமாக இல்லாமல், வாழ்வது வாழ்வாகுமா? அது வாழ்வாகாது. நானும் வாழ்கிறேன் என்று வாழ்வது வாழ்வல்ல; மரத்தில் இருந்து உதிரும் சருகுகள் கூட சிலவற்றிற்காகப் பயன்படுகிறது. மனிதன் மட்டும் பயன்படாமல் வாழ்ந்தால், அவன் மனிதனாகக் கூடப் பெயரெடுக்க முடியாது. எந்த மனிதனுக்கும் சிறு வயதிலேயே அது போன்ற குறிக்கோள்கள், இலட்சியங்கள் மனத்தில் விளைய வேண்டும். விளைந்து கனிய வேண்டும். வளர்ந்து விட்ட மனிதர்கள் மனத்தில் அது குடியேறாது. அலட்சியம்தான் குடியேறும். சோம்பலும், சோர்வுதான் அந்த மனிதர்கள் மனத்தில் காட்டுச் செடிகளாக வளர்ந்து விடும். பிறகு அந்தச் செடிகளுக்கு மத்தியில் அவன் திண்டாட வேண்டியதுதான். பாதை தெரியாமல் விழிக்கும் அந்த மனிதர்களைப் பார்வை தெரியாதவர்கள் என்றுதான் நாம் சொல்லத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட மனிதர்கள் நம் கண்முன் ஏராளமாக இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் எரிய முடியாத வாழைத் தண்டுகள்; மலை ஏற முடியாத யானைக் கூட்டங்கள். இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்கும் போது இவர்களும் மனிதர்களா? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இன்று உலகில் நாம் பயன்படுத்தும் பொருள்கள், சாதனங்களை கண்டுபிடித்த மனிதர்கள் எல்லாரும் இளைஞர்கள்தாம். உலகில் உழைப்பால் உயர்ந்தார்கள்தாம். வானொலியைக் கண்டுபிடித்த போது மார்க் கோனிக்கு வயது 22.தொலைப்பேசியைக் கண்டுபிடித்த போது அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு பேசும் டெலிபோனைக் கண்டுபிடித்த எடிசன், எரியும் பல்பைக் கண்டுபிடித்த போது வயது 30.உலகப் புகழ்பெற்ற பல முக்கிய நாடகங்களை எழுதிய போது சேக்ஸ்பியருக்கு வயது 30. உலகம் உருண்டை என்று கலீலியோ கண்டுபிடித்த போது அவருக்கு வயது 25. உலகின் கண்களை விரிவடையச் செய்து சொற்பொழிவுகளை நிகழ்த்திய விவேகானந்தருக்கு வயது 35.கல்லூரி மாணவராக இருந்து, ஆனந்த் விகடன், கல்கி போன்ற இதழ்களுக்குக் கதை எழுதிய போது அறிஞர் அண்ணாவுக்கு வயது 26.சினிமாவுக்கு கதை வசனம் எழுதிய போது கலைஞர் மு.கருணாநிதிக்கு வயது 23.சக்கரவர்த்தினி" பத்திரிக்கை ஆசிரியராகப் பொறுப்பேற்ற போது மகாகவி பாரதியாருக்கு வயது 22.பகுத்தறிவுப் பாடல்களை திரைப்படத்தில் எழுதிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு வயது 19.இந்திய தேசத்தின் விடுதலைக்குப் போராடி உயிர் நீத்த பகத்சிங்குக்கு அப்போது வயது 24.கராத்தே, குங்ஃபூ ஆகிய கலைகளில் உலக்ப் புகழ் பெற்ற புருஸ் லீ யின் வாழ்நாள் 33 ஆண்டுகள்.கொலைக் கருவியை சிலுவையாய் மாற்றிய இயேசு நாதர் வாழ்ந்த காலங்கள் 31 ஆண்டுகள் மட்டுமே.மாவீரன் அலெக்சாண்டர் ஆட்சி பீடம் ஏரிய போது வயது 19. இப்படி ஏராளம் உண்டு. இளைஞராக இருந்து சாதனை செய்ய விரும்பி ஓய்வில்லாமல் உழைத்து, இரவு பகல் பாராமல், உணவு இல்லாமல், உறக்கம் இல்லாமல் இலட்சியம் ஒன்றே குறியாய் வாழ்ந்து சாதனை செய்தவர்கள்தாம் இவர்கள்."