16 February 2016 9:54 pm
1970 ஆம் ஆண்டு எகிப்து அதிபர் கமால் அப்தேல் நாசருக்கு பின் எகிப்தின் அதிபராகப் பதவியேற்ற அன்வர் அல் சதாத்தை எகிப்தில் மற்றொரு தலைவராக எண்ணினார்களே யொழிய இவர் ஒரு அமைதித் தூதராக பரிணமிப்பார் என மக்கள் கருதவில்லை. ஆனால் நாசருக்கு ஆதரவாக அதிகார மையங்களாகத் திகழ்ந்த அதிகாரிகள் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை இவருடைய எதிரிகள் இவரை நாசருக்குப் பின்னர் வந்துள்ள ஒரு சராசரி மனிதனாகவே எடை போட்டிருந்தனர். மிகவும் பிரபலமான, படைத்திறன் கொண்ட எகிப்து அதிபரான சதாத் அரேபியர்களுக்கு ஆதரவாக இசுரேலை எதிர்த்துப் போராடுவார் என அனைவரும் நம்பினர். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறுநாள் போரில் சிரியா, ஜோர்டான் நாடுகளின் பல பகுதிகளை கைப்பற்றியது போன்று எகிப்து நாட்டின் சினாய் பகுதியினையும் இசுரேல் ஆக்கிரமித்து அனைத்து நாடுகளையும் தலை குனிய வைத்தது. ஆனால் அந்த இசுரேலை எதிர்த்து மிக வலிமையுடன் போராடுவார் என்று எண்ணியதற்கு மாறாக சதாத் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதித் தீர்வுக்கான திட்டத்தை வழிமொழிந்தார். 1973 இல் நடந்த அக்டோபர் போரில் இசுரேலை துரத்தி பின் வாங்க வைத்தவர். சிரியா ஒருபுறமும் எகிப்து ஒருபுறமும் இசுரேல் நாட்டை எதிர்த்துப் போராடித் தோற்கடித்ததன் மூலம் அரபு நாடுகளின் தனிப்பெரும் தலைவராக உயர்ந்தவர் சதாத். ஆனால் இவ்வளவு விரைவாக ஒரு அமைதித் தீர்வை ஆதரிக்கும் ஒரு நல்ல மனிதராக மாறுவார் என்பது உலகம் எதிர்பார்த்திராத ஒன்றாகும். அமெரிக்காவின் ஆதரவோடு போராடுகிற இசுரேலை இனி போரில் தோற்கடிப்பது கடினம் என்று உணர்ந்து அரபு நாட்டுப் பகுதிகளில் அமைதி தவழ நாம் உழைக்க வேண்டும் என நம்பினார். எகிப்து நாட்டின் சினாய் பகுதியும் திரும்பக் கிடைத்தது. பாலத்தீன மக்களின் சிக்கலுக்கு முழுமையான தீர்வு எட்டப்பட வில்லையெனினும் இவர் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று. அரபு நாடுகள் சதாத் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து அவரை வெறுத்து ஒதுக்கின. உள்நாட்டில் குழப்பங்கள் நிகழ்ந்தன. அதை அவர் அடக்க முற்பட்டாலும் இயலவில்லை. எகிப்திய இராணுவ அதிகாரிகளும் இவருக்கு எதிராக மாறினர். எகிப்து – இசுரேல் உடன்படிக்கை ஓர் அமைதியை உலகில் ஏற்படுத்தியிருந்தாலும் 1981 ஆம் ஆண்டு அவருடைய இராணுவ வீரர் ஒருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்ட அன்வர் அல் சதாத் சகாப்தம் முடிவுற்றது. அகிம்சைப் போருக்கு உலகம் தருகின்ற பரிசு எதுவாயினும் அன்வர் அல் சதாத் ஆற்றிய உரை உலகில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்றாகும்.- ஆசிரியர்நாங்கள் விரும்புவது உங்களுடனான நிலையான அமைதி வாழ்வையே! எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் கருணையும் உங்கள் மீது பரவட்டும்; அனைவரிடமும் அமைதி பெருகட்டும். இம்மண்ணில் (இந்நாட்டிற்கு) நான் இன்று வந்திருப்பது அமைதியை நிலைநாட்டவும் புதிய வாழ்வை வடிவமைக்கவும்தான். இறைவனால் படைக்கபெற்ற இம்மண்ணில் வாழும் இசுலாமியர்கள், கிறித்தவர்கள், யூதர்கள் ஆகிய நாம் அனைவரும் அவரவர் இறைவனைத் தொழுது வருகிறோம். அன்பு, உண்மை, தூய்மை மற்றும் அமைதியையுமே அனைத்து கடவுள்களும் போதிக்கின்றன; அறிவுறுத்துகின்றன. நான் எகிப்திய மக்கள் சபை முன்பு சில முடிவுகளை அறிவித்திருந்தேன். அதைக் கேட்டு அனைவரும் வியப்படைந்திருப்பீர்கள். அவர்களை நான் குறை சொல்ல மாட்டேன். சிலர் ஆக்ரோசமான ஆச்சரியத்தோடு, இவை உலக மக்களின் கருத்தைக் கவருவதற்கான வார்த்தை ஜாலங்கள் கலந்த உரை என நம்பியிருப்பீர்கள். சிலர் அதனை புதிய போர் நடவடிக்கைக்கான உத்தி என கருதியிருப்பீர்கள். நான் உங்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் எகிப்திய மக்கள் சபையிலிருந்து வீடு திரும்பும் நேரத்தில் அதிபர் மாளிகையிலுள்ள மெய்க்காப்பாளர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு கவலை தோய்ந்த குரலில் ஒன்றைக் கேட்டார். அதிபர் அவர்களே இசுரேல் அரசு தங்களை அவர்கள் நாட்டிற்கு அழைத்தால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்" என்று கேட்டார். நான் அமைதியாக பதில் சொன்னேன், அவர்களுடைய அழைப்பை உடனே ஏற்றுக் கொள்வேன் என்று. என் மனதில் பொங்கியெழும் உண்மைகளையெல்லாம் இசுரேல் மக்களின் ஒரு பிரதிநிதியாக, நாடாளுமன்ற உறுப்பினராக உரையாற்றுவதற்கு இவ்வுலகின் எம்மூலையிலும், அது ஜெருசலேமாக இருந்தாலும் கூட அங்கே சென்று, அம்மக்களின் முன்பாக, இறைவனின் முன்பாக கடமையுணர்வுடன் எடுத்துக் கூற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். போரில் நாம் இழக்கும் எந்தவொரு உயிரும் அது அரேபியரின் உயிராக இருந்தாலும் சரி, இசுரேலியரின் உயிராக இருந்தாலும் சரி, நாம் இழப்பது ஒரு மனித உயிரையே. விதவைகளாக்கப்படும் அவர்களது மனைவி, ஓர் அரேபிய பெண்ணாகவோ அல்லது இசுரேலியப் பெண்ணாகவோ இருந்தாலும் சரி, அவளும் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ உரிமைபெற்ற ஒரு மனித உயிர்தான். இதனால் தன் பெற்றோரின் பாசத்தை இழந்து வாடும் ஓர் அரேபிய மண்ணில் அல்லது இசுரேலிய மண்ணில் பிறந்த அப்பாவிக் குழந்தையும் நம்முடையவர்கள்தான். நேர்மையான முறையில் நிரந்தரமான அமைதியை நாம் எவ்வாறு அடைவது? இத்தகைய முக்கியமான கேள்விக்கு பதிலளிக்கும் போது நாம் அனைவரும் வெளிப்படையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். முதல் உண்மை: நாம் யாரும் மற்றவர்களுடைய துன்பத்தில் இன்பம் காண முடியாது. இரண்டாவது உண்மை: நான் எப்போதும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவன் அல்லன்; நான் என்றைக்குமே இரு கொள்கைகளைக் கடைபிடித்தவன் அல்ல; எனக்கு எப்போதுமே ஒரே கொள்கை, ஒரே பேச்சு, ஒரே மொழி, ஒரே முகம்தான்.மூன்றாவது உண்மை: நேரடியாக பேசுவதும் நேரடியாக மோதுவதும்தான் நம் தெளிவான இலக்கை அடைவதற்கான வெற்றிப் பாதையாக அமையும்.நான்காவது உண்மை: ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு மதிப்பளித்து நேர்மையான மற்றும் நிரந்தரமான அமைதிக்கு வழி காண்பதே தற்போதைய உலக நியதியாகும்.ஐந்தாவது உண்மை: நேர்மையான முறையில் நிலையான அமைதியை பெறுவதையே அரபு நாடு மிக முதன்மையான கொள்கையாகக் கொண்டுள்ளது. இவற்றை எவ்வித தயக்கமும் பலவீன மனப்பான்மையுடனும் முன்னெடுக்கவில்லை. ஆனால் இது அமைதியை நிலைநாட்டுவதற்கான ஆற்றலும் திறமையும் கொண்டுள்ளது. உண்மையில் நான் உங்களுக்கு ஒன்றை எச்சரிக்கவும் விரும்புகிறேன்; அது உங்கள் மனதில் ஓடும் எண்ணங்களுக்கு எதிரான எச்சரிக்கையாக இருக்கலாம். எனினும் சிலவற்றை வெளிப்படையாகக் கூற வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். முதலில் நான் இங்கு வந்திருப்பது எகிப்திற்கும் இசுரேலுக்கும் இடையிலான ஒரு தனிப்பட்ட ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக அல்ல. அது எகிப்திய கொள்கையும் அல்ல. இரண்டாவதாக, போர் மூண்டுள்ள இந்நெருக்கடி காலத்தில் அனைத்து சிக்கல்களையும் தள்ளிப் போடவும் இந்நெருக்கடி நிலைக்கேற்ப பெயரளவில் ஓர் அரைகுறை அமைதியைத் தேடியும் நான் இங்கு வரவில்லை. இனியும் ஓர் அரேபியரோ அல்லது இசுரேலியரோ ஒரு சொட்டு இரத்தம் கூட இம்மண்ணில் சிந்தக் கூடாது எனும் நோக்கில் நேர்மையான முறையில் ஒரு நிலையான அமைதியைத் தேடி வந்துள்ளேன். தற்போது நான் மேற்கூறிய முக்கியமான கேள்விக்கு பதில் கூற விரும்புகிறேன். நேர்மையான முறையில் நிலையான அமைதியை நாம் எவ்வாறு அடைவது? பல்லாண்டு கால கோபதாபங்கள், பழிவாங்கும் எண்ணம், நீண்ட கால போர் ஆகியவை நம்மிடையே இருந்தாலும் கூட, இதற்கான பதில் (அமைதியை அடைவது) மிகவும் கடினமானதோ அல்லது சாத்தியமாகாததோ அல்ல என்பது என் கருத்து. உண்மையில் நீங்கள் உலகின் இந்தப் பகுதியில் எங்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறீர்கள். நீங்கள் எங்களுடன் முழு பாதுகாப்புடன் வாழ உங்களை நாங்கள் வரவேற்கிறோம். இது ஒரு மிகப் பெரிய வரலாற்று திருப்புமுனையாகும். இது தீர்க்கமான வரலாற்று மாற்றங்களின் அடையாளங்களுள் ஒன்று. நாங்கள் உங்களை ஒதுக்கியிருக்கிறோம். அதற்கு நம்மிடையே காரணங்களும் கோரிக்கைகளும் இருந்தன. ஆம்! உங்களை இசுரேலியர் என முத்திரைக் குத்தியுள்ளோம் உண்மைதான். பன்னாட்டு மாநாடுகளிலும் அமைப்புகளிலும் நம் நாட்டின் சார்பாக கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் அருகருகே அமர்ந்திருக்கும் போதிலும் ஒரு மரியாதை நிமித்தமாகக் கூட வாழ்த்துகளைப் பரிமாற்றிக் (வணக்கம் தெரிவித்துக்) கொண்டதில்லை என்பதும் உண்மைதான். இதுதான் தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது. நம் இரு குழுக்களும் சமரசப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு கூட ஒரு இடைத்தரகரை (நடுவரை) நியமித்து வந்துள்ளோம். உண்மைதான் இதுவும் நடந்தது. இன்று நான் இந்த உலகிற்கு ஒரு தீர்மானத்தை அறிவிக்கின்றேன். நேர்மையான முறையில் நிரந்தர அமைதியில் உங்களுடன் இணைந்து வாழ நாங்கள் சம்மதிக்கிறோம். நாங்கள் உங்களை படைகளாலும் ஏவுகணைகளாலும் சுற்றி வளைப்பதையோ அல்லது நீங்கள் எங்களை நாசம் விளைவிக்கும் படைகளால் சுற்றி வளைப்பதையோ விரும்பவில்லை. நான் பலமுறை கூறியபடி, உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இசுரேல் நாடானது செய்து முடிக்கப்பட்ட நாடாக மாறியிருக்கிறது. இத்தகைய இசுரேலின் முழு பாதுகாப்பையும் இரு வல்லரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. நாங்கள் உண்மையான, பரிசுத்தமான அமைதியை விரும்புவதைப் போல உங்களையும் எங்களுடன் இணைத்து முழு பாதுகாப்புடன், உண்மையான அமைதியுடன் வாழ உங்களை வரவேற்கிறோம். நான் மூன்று வெவ்வேறு மதத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கும் இந்த அமைதியின் உறைவிடமான ஜெருசலேமிற்கு ஏற்கனவே வந்திருக்கிறேன். இது எந்த நாட்டின் பகுதியாக இருந்தாலும் சரி, அனைத்து நம்பிக்கை கொண்ட மக்களும் வந்து செல்லும் நகரமாக இருக்க வேண்டும். 1967 ஆம் ஆண்டு நடந்த சண்டையின் போது கைப்பற்றப்பட்ட அரேபிய பகுதிகள் அனைத்திலிருந்தும் படைகள் வெளியேற வேண்டும். இதற்காக யாரும் வாதாடத் தேவையில்லை. அரேபியாவின் இத்தகைய பகுதிகளை நீங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நிலையில், நேர்மையான முறையில் நிரந்தர அமைதி குறித்தும் அரேபியர்களும் இசுரேலியர்களும் இவ்வுலகின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் முழு பாதுகாப்புடன் அமைதியாக வாழ்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பேசுவதில் அர்த்தமில்லாததாகிவிடும். இந்த முழு சிக்கலின் மையப்புள்ளியே பாலஸ்தீன சிக்கல்தான் என்பதை யாரும் மறக்க முடியாது. பாலஸ்தீன மக்களின் உரிமையை இன்று எவரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ இயலாது. அமைதியை பாதுகாக்கவும் அடைவதற்கும் பாலஸ்தீன மக்களின் உரிமையை அங்கீகரிக்கும் எந்தவொரு இசுரேலியரின் குரலையும் நான் வரவேற்கிறேன். அன்பார்ந்த கணவான்களே தாய்மார்களே, நாம் பாலஸ்தீன மக்களின் உரிமை, அவர்கள் நாட்டிற்கு திரும்பும் உரிமை, அரச உரிமை ஆகியவற்றை அங்கீகரிக்கத் தவறினால் பயன் ஏதும் விளைந்து விடாது. இதை அரேபியர்களாகிய நாங்கள் ஏற்கனவே உங்களாலும் இசுரேல் விரிவாக்கத்தின் தாக்கத்தாலும் அனுபவித்திருக்கிறோம். இதன் காரணமாக அடுத்தடுத்து போர் ஏற்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போனது. இதற்கு தற்போது முடிவு ஏற்பட்டுள்ளது. பேரழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நாம் இன்று இங்கு கூடியிருக்கும் நல் வாய்ப்பை பயன்படுத்தி, அரேபியரும் இசுரேலியரும் இணைந்து நேர்மையான முறையில் நிலையான அமைதியை நிலைநாட்டுவோம். அன்வர் அல்-சதாத் எகிப்து நாட்டில் ஓர் ஏழைக் குடும்பத்தில் 13 குழந்தைகளில் ஒருவராக 1918 ஆம் ஆண்டு திசம்பர் 25 ஆம் நாள் பிறந்தவர் அன்வர் அல்-சதாத் ஆவார். எகிப்து நாட்டின் மூன்றாவது அதிபரான இவர் 15-10-1971 லிருந்து அவர் சுட்டுக் கொல்லப்பட்ட 6-10-1981 வரை தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்தவராவார். எகிப்து நாட்டின் வரலாற்றில் பெரிதும் பேசப்படும் கமால் அப்தேல் நாசர் ஆட்சியில் துணைத் தலைவராக தொடர்ந்து பணியாற்றியவர். 1938 இல் இராணுவ பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்று எகிப்து இராணுவத்தில் பணியாற்றியவர். 1940 மற்றும் 1942 களில் ஜெர்மனிய அதிகாரிகளுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியவர் என்ற குற்றத்திற்காக கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்றவர். 1945 ஆம் ஆண்டு எகிப்து நாசரின் இராணுவ அதிகாரிகள் குழுவில் இணைந்து பணியாற்றி அதிபர் பாரூக்கை அதிகாரத்திலிருந்து நீக்கத் துணை புரிந்தவர். 1970 களில் எகிப்து நாட்டின நாசருக்குக் கீழ் துணை அதிபராக உயர்ந்தார். நாசரின் மறைவுக்குப் பின்னர் எகிப்து நாட்டின் அதிபராக பதவி ஏற்றார். அவருடைய ஆட்சி காலத்தில் மேற்கு நாடுகளுடனான தொடர்புகளை வலுப்படுத்தி 1972 இல் ஆயிரக்கணக்கான உருசிய அறிவுரையாளர்களை நீக்கினார். 1973 இல் சிரியாவுடன் அக்டோபர் போரைத்(யோம் கிப்பூர்) தொடுத்தார். பல்வேறு சரிவுகள் இருந்த போதிலும் தொடக்கத்தில் பெற்ற வெற்றிகள் மூலம் அவரது ஆளுமைத் திறனை உயர்த்திக் கொண்டார். 1977இல் அரபு நாடுகள்- இசுரேல் உடனான அமைதி முயற்சியை முன்னெடுத்தமைக்காக, 1978 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப் பட்டது. எனினும் 1979 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எகிப்து – இசுரேல் உடன்படிக்கை இவரை அரபு நாடுகள் குழுவிலிருந்து ஒதுக்கி வைத்திட காரணமாகியது. 1981 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் நாள் எகிப்து நாட்டு இராணுவ அணிவகுப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.- சு.குமணராசன்"