15 December 2016 3:27 pm
அமெரிக்காவின் தென்கிழக்கு மூலையிலிருந்து 150கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கரிபியன் கடல், மெக்சிகோ வளைகுடா கடல், அட்லான்டிக் கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் பகுதியில்தான் கியுபா தீவு அமைந்துள்ளது. கியூபாவை தனது கொல்லைப் புறமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்தி வந்தது. கியூப மக்களின் உழைப்பை மட்டுமல்ல, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் செல்வங்களையும் அமெரிக்கா உறிஞ்சிக் கொழுத்துக் கொண்டிருந்தது. இதனை கண்டு கொதித்தெழுந்த மாபெரும் வீரர்தான், ஃபிடல் காசுட்ரோ ரூஸ். வீட்டுப் பணிப்பெண்ணுக்கு மகனாகப் பிறந்த ஃபிடல், அக்கம் பக்கத்தில் உடுத்த உடையின்றி, பள்ளியில் படிக்க வழியின்றி தவிக்கும் ஏழ்மைத் தட்டில் வாழும் சிறுவர்களையும் இளைஞர்களையும் பார்த்தே வளர்ந்தவர். ‘கடவுள் ஏன் பலரை ஏழையாகவும் சிலரை பணக்காரராகவும் படைக்கிறார்‘ எனச் சிந்தித்து சிந்தித்து விடை விடை கிடைக்காததினால் வறுமை, உரிமை குறித்த தேடல் அவரது ஆழ்மனதில் பதிந்து விட்டது. செல்வந்தருக்கு மகனாகப் பிறந்தாலும் சட்டம் படித்தாலும் நாட்டின் வறுமையும் உரிமை வேட்கையும் அந்த இளைஞனின் கரங்களைப் பற்றி இழுத்த போது பொறுத்தது போதும் என பொங்கி எழுந்தார். அமெரிக்கக் கூலி அரசை எதிர்த்துப் போராட ஆரம்பித்தார் ஃபிடல். ஆனால் அவை தோல்வியைத் தழுவின. இதனால் சேகுவேராவைச் சந்திக்கத் தன் தம்பி ராவுல் மற்றும் தன் தோழமைகளுடன் கியூபாவை விட்டு மெக்சிகோ பயணிக்கிறார். சேகுவரா, ஃபிடலுக்கு கொரில்லா போர் முறை பயிற்சி தருகிறார். சேகுவேரா, ராவுல், இதர தோழர்களுடன் மீண்டும் கியூபா திரும்பி வந்த ஃபிடல் தளராத தொடர் போராட்டத்தால், 1959 ஆம் ஆண்டு புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சியை வீழ்த்தி காசுட்ரோ கியூபாவின் அதிபராகப் பொறுப்பேற்றார். 1959 முதல் 1976 வரை கியூபாவின் அதிபராகவும் 1976 முதல் 2008 ஆம் ஆண்டு வரை கியூபாவின் குடியரசு தலைவராகவும் தொடர்ந்து பொறுப்பு வகித்த போது அமெரிக்காவில் பத்து குடியரசு தலைவர்கள் ஆட்சிக்கு வந்து போய்விட்டனர். ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர்களில் முதல் இடத்தில் இருப்பவர் இங்கிலாந்தின் எலிசபத் மகாராணி. அடுத்து வருபவர் தாய்லாந்து அரசர். மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பவர் ஃபிடல் காசுட்ரோ.இது ஃபிடலுக்கு எப்படி சாத்தியமானது? காஸ்ட்ரோ கியூபாவின் ஆட்சியைப் பிடித்ததும், அமெரிக்கா அவரை எதிரியாகக் கருதி பொருளாதார தடைகளை அறிவித்தது. இக்கட்டான சமயத்தில் கியூபாவுக்கு உருசியா உற்ற நண்பனாக உதவிக்கரம் நீட்டியது. 1991 – 1992 கால கட்டத்தில் ஐக்கிய சோவியத் சோசலிசக் குடியரசு உடைந்து சிதறிய போது, தாயின் மடியிலிருந்து இறக்கி விடப்பட்ட குழந்தை பயந்து நடுங்குமே அந்த நிலைக்கு கியூபா தள்ளப்பட்டது. நிகழ் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் எந்த உத்திரவாதமும் இல்லாத நிலையில் சவால்களை சந்திக்க ஃபிடல் தயாரானார். கியூபாவின் வளங்களையெல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டிருந்த அரசை அகற்றியவுடன், முதல் பணியாக ஓர் எழுத்தறிவு இயக்கத்தைத் தொடங்கினார் ஃபிடல். ‘தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்.. தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்’ என்ற தாரக மந்திரத்தை கியூபா முழுவதும் பரப்பினார். விழித்தெழுந்தனர் கியூப மக்கள். சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடிந்ததும் மாலையில் நேராக வகுப்பறைகளுக்குப் படையெடுத்தனர். கடப்பாறையை வாசலுக்கு வெளியே வைத்துவிட்டு, எழுதுகோல் ஏந்தி எழுதக் கற்றுக் கொண்டனர். மரம் வெட்டுபவர்கள் கோடரி, ரம்பத்தை மூலையில் வைத்துவிட்டு, புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டனர். பிள்ளைகள் பெற்றோர்களுக்குப் பாடம் நடத்தினார்கள். பற்கள் விடை வாங்கிய மூதாட்டிகளும் படிக்கத் தொடங்கினார்கள். ஒரே ஆண்டில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை ‘30’ என்பதிலிருந்து, ‘98.2’ விழுக்காடாக உயர்ந்தது. கல்வி கற்கச் சென்ற யாரிடமிருந்தும் கட்டணமாக ஒரு பைசா கூட, கியூபா அரசு வசூலிக்கவில்லை. அனைவருக்கும் இலவசக் கல்வி…!. தனியார் மருத்துவமனைகள் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இல்லாத கனவு பூமியாக கியூபா முன்னேற்றம் அடைந்துள்ளது. வல்லரசு நாடுகளில் கூட நடைமுறைப் படுத்த இயலாத, ‘பன்னிரண்டு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்’ என்ற விகிதம், கியூபா நாட்டில் மட்டுமே காணப்படும் கல்வி அதிசயம். அமெரிக்க மாணவர்களை விட அறிவுத் திறனில் கியூபா நாட்டு மாணவர்கள் மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள். ‘நூற்றி ஐம்பது பேருக்கு ஒரு மருத்துவர்’ என்று கியூபாவில் பார்க்க முடியும். இந்த சாதனைகளுக்குப் பின்னால் இருந்தது காசுட்ரோ. அமெரிக்கா வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளின் மீது நடத்திய போர்களில் சர்வதேச நிந்தனைகளால் அமெரிக்கா வெளியேறினாலும், அந்த நாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு அளவிட முடியாது. பொருளாதார முடக்கம் அங்கே நிரந்தரமாகி விட்டது. கியூபாவில் அமெரிக்கா போர் நடத்தவில்லை என்றாலும் அமெரிக்கா, கியூபா மீது தொடுத்த பொருளாதாரப் போர் கியூபாவைப் பெருமளவில் பாதித்தது. அமெரிக்காவின் ஹெல்ம்ஸ் – பர்ட்டன் சட்டத்தின் காரணமாக, கியூபாவிடமிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்து கொண்டிருந்த 17 நாடுகள், தங்களின் இறக்குமதியை நிறுத்திக் கொண்டன. சோவியத் யூனியன் உடைந்து சிதறியதால் சர்க்கரை ஏற்றுமதி அங்கும் நின்று போனது. சர்க்கரை ஏற்றுமதி முழுவதுமாக நின்று விட்ட நிலையில், கியூபா நிலை குலைந்து விடும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்தன. மாறாக கியூபா மாற்றி யோசித்தது, தனது சந்தை சார்பினை மாற்றிக் கொண்டது. ‘என்னருமை மக்களே.. எளிமையாக வாழ முற்படுங்கள். இறக்குமதி செய்யப்படும் பொருள்களைத் தவிருங்கள்… நம்மை யாரும் தோற்கடிக்க முடியாது..’ என்று காசுட்ரோ வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்று அதன்படி கியூபா பொதுமக்கள் ஒத்துழைக்கத் தொடங்கியபோதே காசுட்ரோ வெற்றி பெற்றுவிட்டார். கியூப மக்கள் தங்களின் மகிழுந்து, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கைவிட்டு பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தத் தொடங்கினர். முடிந்த அளவு நடந்தே சென்றனர். மிதிவண்டிகளில் செல்ல ஆரம்பித்தனர். முருங்கை மரத்தின் மருத்துவ குணங்களைக் கேள்விப்பட்ட ஃபிடல், தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களிலிருந்து முருங்கை விதைகளை கியுபாவிற்கு எடுத்துச் சென்று பயிரிடச் செய்தார். பசுமைப் புரட்சி என்று விளம்பரப் படுத்தாமலேயே கியூபா வேளாண்மையில் புரட்சி செய்தது. 1990 -& 2000 ஆண்டுகளில் கியூபாவின் விவசாயம் ஆறு மடங்கு அதிகரித்தது. பயிர் செய்யப்படும் நிலங்களின் அளவு நான்கு மடங்கு அதிகரித்தது. வேதியியல் அல்லது ரசாயன உரங்கள் போட்டு செய்யப்படும் வேளாண்மையை ஒதுக்கிவிட்டு, மரபு வேளாண்மையில் கியூபா இறங்கியது. ‘ரசாயன உரங்கள் – பூச்சிக் கொல்லிகள் மூலமாக மட்டுமே பயிர் விளைச்சலை அதிகரிக்க முடியும்’ என்று தவறாகப் பரப்பப்பட்டு வந்த கற்பிதங்களை சுக்குநூறாக உடைத்துக் காட்டி தன்னிறைவு நாடாக கியூபா மாறியது. காய், கனிகளின் உற்பத்தியைப் பெருக்கி, அரிசி, கோதுமை ஆகியவற்றின் உற்பத்தியைக் குறைத்தனர். பலரும் அவானா போன்ற நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு திரும்பிச் செல்லும் அளவிற்கு வேளாண்மையில் அதிகக் கூலி ஊதியம் கிடைத்தது. நகரங்களில் மொட்டை மாடிகளில் காய்கறிகளுக்காக செடிகள் வளர்ப்பது நல்ல வரவேற்பு பெற்றது. கோழி, முயல், பன்றி, போன்ற இறைச்சிக்கான விலங்குகளை புறநகர் மற்றும் கிராமப்புற வீட்டு மேல் தளங்களில் வளர்க்கும் முறைக்கு மக்கள் மாறினர். அமெரிக்கா உலகின் பல நாடுகளை இணைத்து, கியூபாவிற்கு எதிராக தடைகளை உருவாக்கி, கியூபாவின் மேல் கிடுக்கிப்பிடி போட்டாலும் அந்த நெருக்கடியான சிக்கல்கள் வருமுன்னே, காசுட்ரோ தனது அண்டை இலத்தீன் அமெரிக்க நாடுகளை மிக நெருக்கமான நண்பர்களாக மாற்றிக் கொண்டார். இலத்தீன் அமெரிக்க நாடுகள், அமெரிக்காவிற்கு செல்வங்களைக் கொட்டும் சுரங்கங்களாக மாற்றப்பட்டிருந்தன. கடந்த 500 ஆண்டுகளாக இலத்தீன் அமெரிக்காவின் 85 விழுக்காடு நிலங்கள் அமெரிக்க ஆதரவு கைக்கூலிகளின் ஆளுமையின் கீழ் இருந்தன. ‘உலகமயமாக்கல்’ என்ற சொல் உருவாகும் முன்பே அதன் கொடூர முகங்களை, அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க நிலங்களில் தான் நடைமுறைப் படுத்தி பல மடங்கு லாபத்தை சம்பாதித்தது. கியூபாவின் ஆட்சியில் ஃபிடல் அமர்ந்த போது, இதர லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு கியூபா ஓர் அழகிய முன்மாதிரியானது. இலத்தீன் அமெரிக்க நாடுகளை ஆண்டு கொண்டிருந்த அமெரிக்க பொம்மை அரசுகளைத் தூக்கி எறிவதற்காக புரட்சிக் குழுக்களுக்கு கியூபாவில் ஏற்பட்ட மாற்றம் ஒரு புதிய உந்து சக்தியைப் பாய்ச்சியது. வெனிசூவேலாவில் சாவேஸ் தலைமையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், இரண்டு சதவீதம் பேர்களின் அதிகாரத்தில் இருந்த நிலங்களை அபகரித்து, பெரும்பான்மையான வெனிசூவேலாவின் ஏழை மக்களுக்கு வழங்கினார். இதேபோல் பொலிவியா, சிலி, அர்ஜெண்டைனா, நிகாரகுவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், பன்னாட்டு நிறுவனங்களை நாட்டுடைமையாக அறிவித்தது ஆகியவை, கியூபாவைப் பின்பற்றி நடந்த மாற்றங்கள். இந்த அரசியல் அதிசயங்களுக்கு வித்திட்டவர் ஃபிடல் காசுட்ரோ. அமெரிக்காவும் லத்தீன் நாடுகளின் மேலான தனது இரும்புப் பிடி, காசுட்ரோவின் வரவினால் வளர்ச்சியினால் தளர்ந்து போகும் என்ற தனது அச்சம் உண்மையானதில் வந்த உளைச்சலில் எரிச்சலில் காழ்ப்புணர்வில் காஸ்ட்ரோவை தனது முதல் எதிரியான நினைத்ததுக் கொல்லத் துடித்தது. 638 முறை முயற்சித்துத் தோற்றது. ‘கொலை முயற்சிகளில் தப்பிப்பது ஒலிம்பிக் விளையாட்டாக இருந்திருந்தால் எனக்குதான் அதிக முறை தங்கப்பதக்கம் கிடைத்திருக்கும்’ என்று காசுட்ரோ கூறியுள்ளார். கியூபாவின் காவலனான காசுட்ரோ இந்தியாவின் நெருங்கிய நண்பனாகத் திகழ்ந்தவர். உலகிலேயே முதன் முதலாக இந்தியாவில்தான் (கேரளத்தில்) கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிக்கு வந்தது. மேற்கே ஃபிடல் தலைமையில் சோசலிசமும் பொதுஉடைமையும் கலந்த ஆட்சி கியூபாவில் அமைந்தது. காஸ்ட்ரோ அரசை உடனே இந்தியா அங்கீகரித்தது. அதற்குப் பின்னர்தான் உருசியா அங்கீகரித்தது. அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு தலைமைப் பொறுப்பினை அன்றைய இந்திய தலைமையமைச்சர் இந்திரா காந்திக்கு வழங்கும் போது ‘எனது சகோதரி’ என்று குறிப்பிட்டு… இந்திரா காந்தியின் தோளில் கைவைத்து நெருக்கமாக நின்றார். இந்த சம்பவம் அன்று பரபரப்பாகப் பேசப்பட்டது. 1992 இறுதியில், பொருளாதாரத் தடையை அமெரிக்கா கியூபா மீது சுமத்திய போது, தட்டுத் தடுமாறிய கியூபாவுக்கு அரிசி, கோதுமை தலா பத்தாயிரம் டன் அனுப்பி இந்தியா உதவியது. 2008 இல் இந்தியாவிற்கு கியூபா தர வேண்டிய கடன் 128 கோடியை இந்தியா தள்ளுபடி செய்தது. அந்த ஆண்டு புயலினால் சின்னா பின்னமான கியூபாவிற்கு நிவாரண நிதியாக 12 கோடி வழங்கி உதவியது. நீண்ட காலம் ஆட்சிப் உறுப்பில் இருந்து சாதனை நிகழ்த்திய காசுட்ரோ, தன் நினைவாக குடியிருப்புகள் உருவாக்குதல், சிலை நிர்மாணித்தல், சாலைகளுக்குப் பெயர் சூட்டுதல் போன்றவற்றைத் தடை செய்து ஃபிடல் சாவிலும் சாதனை படைத்தார். 90 வயது நிரம்பிய ஃபிடல் காஸ்ட்ரோ, நவம்பர் 25, 2016 இல் கியூப மண்ணை விட்டு மறைந்தார். அவானாவில் எரியூட்டப்பட்டு சாம்பலை சாண்டியோகா வரை கொண்டு சென்றனர். சுமார் எழுநூறு கி.மீ. நீண்ட பயணம். நான்கு நாட்கள் நீண்ட பயணத்தில் வழிநெடுக மக்கள் நின்று இரங்கல் தெரிவித்தனர். நான்தான் பிடல்" என்று நெஞ்சை நிமிர்த்தி உரக்கச் சொன்னார்கள். மக்கள் அனைவரும் ஒரு பிடல் காசுட்ரோவாய் மாறியுள்ளனர். இது ஒரு உலக சாதனைதானே..?நீதிமன்றத்தில் ஃபிடல் நிகழ்த்திய உரை: "நீதிபதி அவர்களே, தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் ஒரு உண்மையான மனிதனல்ல. கடமை எத்திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன். அவனது இன்றைய கனவு, நாளைய சட்டமாகும். ஏனென்றால் அவன்தான் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தவன். பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் பழைய பக்கங்களில் உள்ள, குருதி தோய்ந்த போராட்ட நாட்களையும் பெரு நெருப்பில் அழிந்த சமூகங்களையும் அறிந்தவனால் மட்டுமே மனித குலத்தின் எதிர்கால வாழ்வை சிந்திக்க முடியும். என் நாட்டு மக்கள், பலரும் பசியோடுதான் படுக்கப் போகிறார்கள். மருத்துவ வசதிகள் ஏதுமின்றிக் குழந்தைகள் கல்லறைகளை நாடுகிறார்கள். முப்பது சதவீத மக்களுக்குத் தங்கள் பெயரைக் கூட எழுதத் தெரியவில்லை. அதை விடக் கொடுமை, தொண்ணூற்று ஒன்பது சதவீத மக்களுக்கு நாட்டின் வரலாறே தெரியவில்லை. நீதிபதி அவர்களே, நீங்கள் எனக்குக் கொடுக்க இருக்கின்ற தண்டனை கடுமையானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். சிறையைக் கண்டோ அல்லது எனது எழுபது சகோதரர்களின் உயிரைக் குடித்த இந்த கொடுங்கோல் ஆட்சியைக் கண்டோ அஞ்சுபவனல்ல நான். நீங்கள் என்னை சிறையில் அடைக்கலாம். ஆனால், வரலாறு என்னை விடுவிக்கும்."- பிஸ்மி பரிணாமன், கொச்சின்"