கறுப்பினப் போராளி நெல்சன் மண்டேலா - தமிழ் இலெமுரியா

14 December 2013 9:28 am

கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மாவீரன் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கைப் பயணம் 06.12.2013 இல் முற்றுப் பெற்றது.  சூலை 18, 1918 இல் பிறந்த நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் ரோலிலாலா தலிபுங்கா மண்டேலா. மடிபா" என்று செல்லமாக அழைக்கப் பெற்று வந்த மண்டேலாவுக்கு, பள்ளி ஆசிரியர் தான் "நெல்சன்" என்னும் பெயரைச் சூட்டினார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பின்னர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர்.  மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவிலுள்ள சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 ஆம் ஆண்டு அவரது விடுதலைக்கு பிறகு, அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார். தொண்ணூற்று ஐந்து வயதான மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக் கிடந்த தென்னாப்பிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமைதிவழிப் போராளியாக, வழக்குரைஞராக, குத்துச் சண்டை வீரராக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசுத் தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தது. உலக சமாதானத்திற்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும் போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. 1990 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருதும் வழங்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான "நோபல் பரிசு" இவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான "மகாத்மா காந்தி சர்வதேச விருது" நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.  தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான சூலை 18 ஆம் நாளை "சர்வதேச நெல்சன் மண்டேலா நாளாக" ஐ.நா. அறிவித்துள்ளது. நெல்சன் மண்டேலா குறித்த விரிவானக் கட்டுரை "தமிழ் இலெமுரியா" ஆடி 2044 (சூலை 2013) இதழில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியிடப்பட்டிருந்ததை நினைவு கூர்கிறோம். ஒரு புரட்சியாளன், அவன் ஆயுள் தண்டனைக் கைதியாகச் சிறையில் இருந்தாலும், தூக்கு மரத்தின் நிழலில் நிற்பவனாக இருந்தாலும் சரி, ஒரு போதும் பரிதாபத்துக்குரியவர் அல்லன். தன்னைப் பற்றி மற்றவர்கள் பெருமைப்படும் போது மகிழ்வான். தனக்காக மற்றவர்கள் இரக்கப்படுவதை ஒரு போதும் விரும்ப மாட்டான். உரிமையற்ற மக்களுக்காகப் போராடும் விடுதலை வீரர்களுக்கு மறைவு இல்லை. மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பர் என்பதற்கு நெல்சன் மண்டேலாவின் அரசியல் பொது வாழ்வு ஒரு நல்லதோர் எடுத்துக்காட்டு ஆகும். வாழ்க நெல்சன் மண்டேலா!"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி