காங்கோ குடியரசு - தமிழ் இலெமுரியா

19 September 2013 4:59 am

காங்கோ அல்லது காங்கோ குடியரசு மத்திய ஆப்பிரிக்காவின் மேற்கில் அமைந்துள்ளது. இது காங்கோ – ப்ராஷாவில்லே எனவும் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகளாக காபான், காமரூன், மத்திய ஆப்பிரிக்கா குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு மற்றும் அங்கோலா ஆகியவை அமைந்துள்ளன. ப்ராஷாவில்லே இதன் தலைநகரமும் நாட்டின் பெரிய நகரமும் ஆகும். இங்கு வாழும் மக்கள் காங்கோலீஷ் என அழைக்கப்படுகின்றனர். சற்றொப்ப 1,32,047 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்நாட்டின் மக்கள்தொகை 2012 கணக்கெடுப்பின் படி, 43,66,266 எனக் கணகிடப்பட்டுள்ளது. காங்கோவின் அலுவலக மொழியாக ஃபிரெஞ்சும், அங்கீகரிக்கப்பட்ட மொழியாக காங்கோ, லின்கலா ஆகிய மொழிகள் விளங்குகின்றன. இதன் நாணயம் சி.எப்.ஏ., ஃப்ராங்க் ஆகும். காங்கோவின் ஆரம்பக் காலத்தில் பான்டு மொழி பேசக்கூடிய மக்கள் அதிகமாக இடம் பெயர்ந்ததன் மூலம் பான்டு (Bantu) பேரரசு உருவானது. 1484 ஆம் ஆண்டில் முதன் முதலாக போர்ச்சுகீசியர்கள் காங்கோவில் வணிகம் செய்வதற்காக நுழைந்தனர். இந்த வணிக உறவு பான்டு பேரரசுக்கும், ஐரோப்பிய வணிகர்களுக்கும் இடையே விரைவில் விரிவுபடுத்தப் பட்டமையைத் தொடர்ந்து, காங்கோ ஆற்றுப் படுகையில் வாழும் பலர் இங்கு அடிமைகளாக்கப் பட்டனர். நூறு ஆண்டுகளாக, காங்கோ ஆற்று டெல்டா பகுதி அட்லாண்டிக் கடலுக்கப்பால் வணிகம் செய்கின்ற வணிக மையமாக விளங்கியது. இதன் மூலம் ஐரோப்பியர்களின் காலனித்துவம் நேரடியாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஏற்பத்திய பின்பு, அன்றிலிருந்து பான்டு சமூகத்தின் ஆதிக்கம் மெல்ல மெல்ல தேய்ந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாக அழிந்து விட்டது. 1880 ஆம் ஆண்டு மகோகோவுடனான பிர்ரி டி ப்ரசா (Pierre de Brazza) உடன்படிக்கையின் படி, காங்கோ ஆற்றின் வடக்குப் பகுதி முழுவதும் பிரெஞ்சுக்காரர்களின் ஆளுமையின் கீழ் வந்தது. இதன் விளைவாக, காங்கோ குடியரசு 1903 ஆம் ஆண்டு முதல் பிரெஞ்சு காங்கோ எனவும், பின்னர் மத்திய காங்கோ எனவும் அழைக்கப்பட்டது. 1908 ஆம் ஆண்டு இது ஃபிரெஞ்சு நிலநடுக்கோட்டு ஆப்பிரிக்கா எனப் பெயர் மாற்றப்பட்டது. 1946 ஆம் ஆண்டு காங்கோ குடியசு ஃபிரான்சு நாட்டின் கடல் தாண்டிய மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 1946 ஆம் ஆண்டு ஃபிரெஞ்சு அரசு புதிய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. 1958 ஆம் ஆண்டு இந்த ஃபிரெஞ்சு அரசமைப்புச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் ஃப்ரெஞ்சு சமூகத்திற்குட்பட்ட சுயாட்சி குடியரசு நாடாக அறிவித்தது. எனினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1960, ஆகசுடு 15 ஆம் நாள்தான் காங்கோ முழு விடுதலை நாடாக அங்கீகரிக்கப்பட்டு காங்கோ குடியரசு உருவானது. காங்கோ விடுதலை அடைந்த பின் காங்கோ இராணுவத் தலைவர் அல்போன்சே மாசாம்பா – டிபட் என்பவர் தலைமையின் கீழ், சிவிலியன் இடைக்கால அரசு நடைபெற்று வந்தது. 1963 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டப்படி, மாசாம்பா – டிபட் முதல் ஐந்து ஆண்டிற்கான அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் தொழிலாளர் கட்சி வலுவடைந்ததைத் தொடர்ந்து, காங்கோ குடியரசு ஒரு மார்க்சீசிய நாடாக விளங்கியது. 1965 ஆம் ஆண்டில் காங்கோ குடியரசானது சோவியத் யூனியன், சீனா, வட கொரியா, வடக்கு வியட்நாம் ஆகிய நாடுகளுடனான உறவை விரிவுபடுத்தியது. 25 ஆண்டுகளாக மார்க்சீசிய நாடாக விளங்கிய காங்கோ குடியரசு, 1991 ஆம் ஆண்டு மார்க்சியத்தைக் கைவிட்டது. எனவே, 1992 ஆம் ஆண்டு முதல் தனிக் கட்சி ஆட்சிமுறை கைவிடப்பட்டு, பலகட்சி  பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. இத்தகைய பலகட்சி பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தற்போதைய அதிபராக டெனிசு சாஸ்சூ நியூவெஸ்சோ (Denis Sassou Nguesso) பதவி வகிக்கின்றார்.காங்கோ குடியரசு மூன்றில் இரண்டு பகுதி மழைக் காடுகளால் சூழப்பட்டுள்ளது. காங்கோவின் பொருளாதாரத்தைப் பொருத்த வரையில் கிராம புறங்களில் வேளாண்மை, கைவினைப் பொருள்கள் ஆகியவற்றையும், தொழில் துறையில் பெட்ரோலியம் பிரித்தெடுப்பதிலும் அதிக வருமானம் ஈட்டி வருகின்றன. ஆப்பிரிக்காவிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கனிம வளம் கொண்ட நாடாக காங்கோ குடியரசு விளங்குகிறது. இதனால் ஏராளமான வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் அதாவது 50.5 விழுக்காடு மக்கள் ரோமன் கத்தோலிக்கத்தையும், ஏனைய மக்களில் 40.2 விழுக்காடு கத்தோலிக்கத்தை விட்டு பிரிந்தவர்களும், 1.3 விழுக்காடு இசுலாமியர்களும், 4.8 விழுக்காடு மக்கள் பிற சமயத்தைச் சார்ந்தவர்களும் ஆவர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி