கோவா விடுதலை - தமிழ் இலெமுரியா

14 January 2016 8:52 pm

நம்நாடு 1947 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற போது புதுச்சேரிப் பகுதி பிரெஞ்சுக்காரர் ஆட்சியிலும் மேற்குக் கடற்கரையில் கோவா, டையூ, டாமன் பகுதிகள் போர்ச்சுக்கீசியரின் ஆட்சியிலும் இருந்தன. கருவிப்போரின்றி அறப்போரின் வழியாகவே இந்தியா ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. மிகப் பரந்த இத்துணைக்கண்டத்தை ஆங்கிலேயர் கடைசியில் இந்தியருக்கே உரிமையாக்கிவிட்டனர். அவர்களைப் போலவே பிரெஞ்சுக்காரர்களும், போர்ச்சுக்கீசியர்களும் தங்கள் மிகச்சிறு இந்தியப் பகுதிகளைவிட்டு வெளியேறிவிடுவர் என்று பல்லாண்டுகளாக இந்தியா எதிர் பார்த்து வந்தது. பல்லாண்டுகள் தொடர்ந்து செய்து வந்த கடிதப்போக்குவரத்து மூலம் பிரெஞ்சுக்காரரிடம் சிறிது பயன் ஏற்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அவர்கள் பாண்டிச்சேரியைவிட்டு வெளியேறிவிட ஒப்புக்கொண்டனர்; பிரெஞ்சுப் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்பிச் சில ஒப்பந்தங்கள் செய்து கொண்டு வெளியேறிப் போய்விட்டனர். இந்தியாவில் முதன் முதலில் அடிவைத்தவர் போர்ச்சுக்கீசியரே. வாஸ்கோடகாமா என்பவர் 1498 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 11ஆம் நாள் கள்ளிக்கோட்டை வந்து சேர்ந்தார். அப்போது அங்கு ஆட்சி புரிந்து வந்த சாமொரின் அரசனிடம் வாணிகம் செய்வதற்கு ஒப்புதல் பெற்றார். பின்னர் போர்ச்சுக்கலுக்குத் திரும்பிப்போய்க் கேப்பிரியல் என்பவனை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார், இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவர் என்ற மொழிப்படி, கேப்பிரியல் சாமொரின் அரசனையே தாக்க முற்பட்டான்; ஆனால் தோல்வியடைந்து போர்ச்சுக்கலுக்குப் போய்த் தான் உதைபட்டதைச் சொல்லி அழுதான். இதைக் கண்ட வாஸ்கோடகாமா கொதித்தெழுந்து மீண்டும் இந்தியாவிற்குப் பல கப்பல்களில் பீரங்கிகளையும் வெடி மருந்துகளையும் கொண்டுவந்தார். எனினும் அவர் படை சாமொரினின் படையைத் தோற்கடிக்க முடியவில்லை. காமா தப்பி ஓடிவிட்டார். அதன் பின் லோபோஸோர்ஸ் என்பவன் ஒரு பெரும்படையுடன் இந்தியா வந்தான். அவனையும் 1507 இல் சாமொரின் விரட்டியடித்து விட்டார். ஆயினும் இரண்டாண்டுகள் கழித்துக் குசராத்தின் சுல்தானாயிருந்த கயஸ் என்னும் ஐந்தாம் படை ஆள் மூலம் போர்ச்சுக்கீசியர் போர் முரசொலிக்காமலேயே டையூவைக் கைப்பற்றி விட்டனர். பலமுறை சாமொரினுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்தனர்; எனினும் கள்ளிக்கோட்டையை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அதனால் மேற்குக் கடற்கரையில் வேறு சில இடங்களைக் கைப்பற்றிக் கோட்டை கட்டிக்கொண்டு ஆல்புகர்க் என்ற ஆளுநரை அமர்த்தினர். 1510 இல் ஆல்புகர்க் கள்ளிக்கோட்டையைத் தாக்கினார், அதில் அவருக்குப் படுதோல்வியே ஏற்பட்டது. அப்போதுதான் கோவாவின் சிறப்புக்களை உணர்ந்தார். 1510 பிப்ரவரியில் மிக எளிதாகக் கோவாவைக் கைப்பற்றி அங்கு ஒரு கோட்டையையும் கட்டிவிட்டார். 1513இல் ஆல்புகர்க் மலாக்காவைத் தாக்கி வெற்றிபெற்றார். பர்மாவில் போர்ச்சுக்கீசியருக்குத் தளங்கள் கிடைப்பதற்கான உடன்படிக்கைகளைச் செய்து கொண்டார். இந்துமாகடலில் அவரைத் தட்டிக் கேட்க ஆளில்லாமையின் கடற்கொள்ளைகள் மிகுதிப்படலாயின. கொளச்சல் என்ற இடத்தில் வீர விட்டல் என்ற தமிழரின் தீரத்தினால் போர்ச்சுக்கீசியர் விரட்டியடிக்கப்பட்டனர். ஆல்புகர்க் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவர். எனவே கோவாவைக் கைப்பற்றியபோது நகரையே கொளுத்தி எதிர்ப் பட்டவர்களை எல்லாம் கொன்று தள்ளினார். போர்ச்சுக்கீசியர்கள் இந்திய மண்ணில் காலடி வைத்து 463 ஆண்டுகள் முடிந்துவிட்ட போதும் அவர்கள் குருதிவெறி இன்னும் அடங்கவில்லை. போர்ச்சுக்கீசியர் கோவாவைக் கைப்பற்றிய நாள்தொட்டே மக்கள் அவர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து வந்திருக்கின்றனர். பாதிரிகளை அனுப்பி அவர்களை மதமாற்றம் செய்வதன் மூலம் கிளர்ச்சிகளை அடக்கலாம் என்று போர்ச்சுக்கீசியர் முயன்றனர். ஆனால் பாதிரிகளின் போக்கு மக்களிடையே பெரும் கிளர்ச்சியையே தோற்றுவித்தது. 1587 இல் நடந்த கிளர்ச்சியில் பலர் உயிரிழந்தனர், போர்ச்சுக்கீசியப் பாதிரியார்களின் போக்கைக் கண்டித்துக் கோவாவில் வாழ்ந்த தமிழர்கள் நானூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழில் போர்ச்சுக்கல் அரசிற்கு விண்ணப்பம் செய்தனர். அவ்விண்ணப்பம் இப்போது போர்ச்சுக்கல் நாட்டில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. 1755 முதல் 1912 வரை இராசபுத்திர வீரர்கள் கோவாவில் இருபது தடவைகளுக்கு மேல் கிளர்ச்சிகள் செய்திருக்கின்றனர். அவர்களுடைய கிளர்ச்சிக்குப் போர்ச்சுக்கீசியர் ஓரளவு பணிய வேண்டியது ஏற்பட்டது. அவர்களுக்குச் சில சலுகைகள் அளித்து வந்தனர். 1946 இல் கோவா மக்கள் தங்கள் விடுதலைப் போராட்டத்தை நடத்தினர். டாக்டர் லோகியா இதைத் தொடங்கிவைத்தார். போர்ச்சுக்கீசிய ஆட்சி கடுமையான அடக்குமுறையைக் கையாண்டது. போராட்டத் தலைவர்கள் பலர் 4 முதல் 8 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுப் போர்ச்சுக்கலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும் இதனால் போராட்டம் நின்று போய்விட வில்லை. 1954 இல் மற்றொரு சத்தியாக்கிரக இயக்கம் நடைபெற்றது -& கடும் அடக்குமுறை கையாளப்பட்டது. இயக்கத்தின் தலைவரான அந்தோணி டிசுசாவுக்கு 28 ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 1955 இல் இந்தியர்கள் இந்த அடக்குமுறையைப் பொறுக்காது கோவாப் போராட்டத்தை ஆதரிக்க முன்வந்தனர். அவர்கள் கருவிகளின்றிக் கோவாவிற்குள் நுழைந்தனரேனும், அவர்கள் மீது போர்ச்சுக்கீசியர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருபத்திரண்டு இந்தியர் உயிர் துறந்தனர். கோவா இந்தியாவின் ஒரு பகுதியே. பல நூற்றாண்டுகள் அதைக் கைப்பற்றி ஆண்டு வருவதனாலேயே அப்பகுதி போர்ச்சுக்கலுக்குரிய நாடாக ஆகிவிடாது. ஆங்கிலேயரையும் பிரெஞ்சுக்காரரையும் போலவே போர்ச்சுக்கீசியரும் அறிவுடைமையினால் தாங்களாகவே நல்லுறவுடன் வெளியேறிவிடுவர் எனப் பதினேந்து ஆண்டுகளாக உரிமை பெற்ற இந்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால் போர்ச்சுக்கீசியரின் கொடுமைகள் மிகுதியாயின. இந்திய நாட்டின் ஒரு களங்கமாகவே போர்ச்சுக்கீசிய ஆட்சி இருந்து வந்தது. அதனால் ‘‘கோவாவை மீட்பதற்கு வேண்டுமானால் வன்முறையையும் பயன்படுத்தத் தயங்கமாட்டோம்’’ என்று மைய மக்கள் மன்றத்தில் முதலமைச்சர் நேரு அறிவித்தார். ஆனால் அது போர்ச்சுக்கீசியர்களின் காதில் ஏறவில்லை. போரிடுவதற்காகப் போர்ச்சுக்கீசியர்கள் சில கப்பல்களைக் கோவாவிற்குப் போர்ச்சுக்கலிலிருந்து கொண்டு வந்தனர். இந்திய அரசு போரிடுவதற்கு என்றும் அஞ்சியதில்லை. ஆயினும் உறவுமுறையாக – அமைதியாகவே  இச் சிக்கலைத் தீர்த்துக் கொள்ள விரும்பியது. ஆனால் போர்ச்சுக்கீசியரின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை. 1961 டிசம்பர் 18ஆம் நாள் இந்தியப்படையினர் கோவாவின் தலைநகரான பஞ்சிமை அடைந்தனர். அந்நகரை மூன்று பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். டையூ, டாமன் பகுதிகளையும் சூழ்ந்துகொண்டனர். போர்ச்சுக்கீசியர்கள் எதிர்க்க முற்படவில்லை; தப்பிப் பிழைப்பதற்காக ஓட்டம் பிடித்தனர். இந்தியப் படையினர் பஞ்சிமின் வானூர்தித் துறையைப் பாழடித்தனர். டையூவின் வான்கலத் துறையையும் பாழ் செய்தனர். டாமனில் நடந்த போரில் நான்கு இந்தியர்களும் பதினாறு போர்ச்சுக்கீசியரும் உயிரிழந்தனர். டையூவில் இந்தியர் யாரும் உயிரிழக்கவில்லை. கோவாவில் நூறு போர்ச்சுக்கீசியத் துருப்புக்கள் கொல்லப்பட்டனர். நூறுபேர் காயமடைந்தனர். இந்தியப் படை நுழைந்த 26 மணி நேரத்திற்குள் போர்த்துக்கீசியர் பகுதிகள் எல்லாம் கைப்பற்றப்பட்டுவிட்டன. 463 ஆண்டுக் கால வேற்றாட்சி இக்குறுகிய காலத்தில், மிக்க உயிரிழப்பின்றியே ஒழிந்தது. இந்தியப் படையினரின் திறமைக்கு இஃது ஒரு நல்ல எடுத்துக்காட்டே, கோவா மக்கள் இந்தியப் படையினரை விரும்பி வரவேற்றதாலும் போர்ச்சுக்கீசியர் எதிர்த்துத் தாக்க முற்படாததாலும் எளிதில் வெற்றி கிடைத்து விட்டது. கோவா விடுதலையால் இந்தியநாடு முழுவதும் மகிழ்ந்தது. கறுப்பர்கள் வெள்ளையரைத் தாக்கி விரட்டிய ஒரே காரணத்திற்காக, கோவா இந்தியாவுக்கே என்றும் உரிமையானது என்கிற உண்மையை மறந்து அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்தியாவைத் தாக்கிப் பேசத் தொடங்கின. இந்தியா போரினால் வலுத்தாக்குதல் செய்து போர்ச்சுக்கலுக்குரிய பகுதியைக் கைப்பற்றியதாகவும் மீண்டும் போர்ச்சுக்கல் கோவாவைப் பெறும் உரிமையுடையது என்றும் பிதற்றினர். அவர்களுக்கெல்லாம் நேரு அவர்களும், உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் திரு.வி.கே.கிருட்டிண மேனன் அவர்களும் பல காரணங்களுடன் விளக்கம் தந்தனர். கோவா விடுதலையுடன் இந்தியாவின் விடுதலை முழுமையுற்றிருக்கிறது. கோவா விடுதலை வெள்ளையரின் வேற்றுப்புலக் குடியேற்ற ஆட்சிக்கு (Colonialism)ச் சாவு மணி அடித்துவிட்டது. 

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி