15 March 2014 6:03 am
நூற்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆழ்கடலுக்குள் புதைந்து போன கப்பலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆங்கிலப் படம் டைட்டானிக்". உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு மிகப் பெரும் தோற்றமான முறையில் எடுக்கப்பட்ட படமாகும் அது. இங்கிலாந்தில் சவுத்தாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து "ராயல் மெயில் ஸ்டீமர் டைடானிக்" என்னும் கப்பல் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் புறப்பட்டது. இது புத்தம் புதிய சொகுசுக் கப்பல் ஆகும். இதன் எடை 46, 000 டன். கப்பலின் உயரம் 882 அடி ஆகும். அந்தக் காலத்திலேயே இந்தக் கப்பல் 7.5 மில்லியன் டாலர் செலவில் வடிவமைக்கப்பட்டதாகும். "டைட்டானிக்" என்றால் "பிரம்மாண்டம்" என்று பொருள்படும். பயண நாளில் முதல் இரண்டு நாள்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு அட்லான்டிக் கடலைச் சீரான வேகத்தோடு டைடானிக் கடந்து சென்றது. ஏப்ரல் 14, காலை வேளை கப்பல் போகும் வழியில் சில பனிப்பாறைகள் தென்பட்டன. பனிப்பாறைகள் என்ன செய்துவிடும் என்று அலட்சியத்தோடு அலை கடலில் மாலிமி ஸ்மித் கப்பலைச் செலுத்திய போது, பேருருவில் வாள் போன்றிருந்த பனிப்பாறை ஒன்று கப்பலை பக்கவாட்டில் கிழித்தது. அடுத்த சில நொடிகளில் கப்பலுக்குள் கடல் நீர். கடலுக்கு அடியில் 13, 000 அடி ஆழத்தில் கப்பல் மூழ்கியதில் 1, 500 பேர்கள் அப்படியே உப்பு நீரில் உயிர் மூச்சை இழந்தனர். 73 ஆண்டுகள் கழித்து, 1985 செப்டம்பரில் அமெரிக்க, பிரான்சு ஆய்வுக் குழுவினர் சிறப்பு நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பயணம் புரிந்து மூழ்கிய டைட்டனிக் கப்பலைக் கண்டுபிடித்தனர். இந்த "டைட்டானிக்" பற்றிய திரை ஒளிக் காட்சிகள் திகைப்படையும் வகையில் இங்கிலீசு (ஆங்கில) மொழியில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்."