பம்பாயில் நாம் கேட்ட சில சொற்பொழிவுகள் - தமிழ் இலெமுரியா

16 December 2014 2:31 pm

அனுபவங்கள்தான் நமக்கு வழிகாட்டி, உற்ற நண்பன். யார் நம்மை விட்டு விலகிச் சென்றாலும் இவைகள் என்றும் நமக்கு துணை செய்யும். நல்ல நினைவுகளைப் போற்றத் தெரியாதவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் மதிப்பிழந்து நிற்பர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக மும்பையில் நான் கேட்ட அரசியல், ஆன்மிகம், இலக்கியச் சொற்பொழிகளையும் அதை நிகழ்த்திய தலைவர்களையும் எண்ணிப் பார்த்து மகிழ்கிறேன். அந்தக் காலத்தில் தமிழில் சொற்பொழிவுகள் மட்டுங்காவிலும் தாராவியிலும் மட்டும் நடைபெற்றது. மும்பையின் இதர பகுதிகளில் வாழும் தமிழர்கள் இங்கு வந்து தான் சொற்பொழிவினை செவிமடுப்பார்கள். ஒருமுறை கோலிவாடாவில் நிகழ்ந்த கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவைக் கேட்க பந்தலில் போய் அமர்ந்தேன். என் பக்கத்தில் ஒரு அன்பர் இருந்தார். மெதுவாக அவரிடம் பேச்சுக் கொடுத்த போது தினமும் பூனாவிலிருந்து வந்து போவதாக சொன்னார். அவ்வளவு ஆர்வம் வாரியாரின் சொற்பொழிவினைக் கேட்டு மகிழ. முதன்முதலில் தந்தை பெரியார் வந்து பேசியது பரேல் காம்கார் திடலில். பெரியாரின் சொற்பொழிவை மராத்தியில் மொழி பெயர்த்துப் பேசியவர் காலக்கில்லா முத்துசாமி. அதற்கு முன் 1935 ஆம் ஆண்டு முகமதலி ஜின்னாவையும் டாக்டர் அம்பேத்கரையும் சந்திப்பதற்காக அறிஞர் அண்ணா, டி.ஏ.வி.நாதன், பால சுப்பிரமணியம் அவர்களோடு பம்பாய் வந்திருக்கிறார்கள் என்றாலும் பொதுக் கூட்டத்தில் பேசவில்லை. பம்பாய் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற வந்திருந்தார் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுபிள்ளை. அது பம்பாய் தமிழர் சமுதாயத்தின் நினைவில் நின்ற அருமையான இலக்கிய கூட்டம். ர.முருகையா தலைமை வகித்தார். மாதுங்காவிலே கூட்டம் நடந்தது என்றாலும் தாராவியிலிருந்து ஏராளமான தமிழன்பர்கள் கலந்து கொண்டார்கள். ரா.பி.சேது பிள்ளை பேசும் போது நாசூக்காக ஒரு செய்தியைச் சொன்னார். தமிழ்நாட்டில் இராமாயணத்தை இலக்கியமாகப் போற்றுவாரும் உண்டு. அது இலக்கியமே அல்ல எனத் தூற்றுவாரும் இருக்கிறார்கள்" என்றார். அடுத்த சில நிமிடங்களில் மேடைக்கு ஒரு கேள்விச் சீட்டு பறந்தது. மேடையில் ஒரே பரபரப்பு! கேட்டிருன்த கேள்வி இதுதான் "இராமாயணத்தைப் போற்றுவோர் தூற்றுவோரிடம் தோற்றது ஏன்?" இதைக் கேட்டவர் இன்றைய கவிஞர் புதியமாதவியின் தந்தையார் சு.வள்ளிநாயகம் அவர்கள். அகில இந்திய காங்கிரசு தலைவராக தலைமை ஏற்ற பின் முதன் முதலாக காமராசர் பம்பாய் வந்திருந்தார். அந்த கால கட்டத்தில் பம்பாய் பிரதேச காங்கிரசு கமிட்டியின் பொருளாளராக இருந்தவர் அஃபிஸ்கா என்பவர். இவர் மங்களூரைச் சேர்ந்தவர். கொஞ்சம் தமிழ் பேசுவார். நான் பணியாற்றிக் கொண்டிருந்த ஏசியன் எலக்ட்ரானிக் கம்பெனியின் நிருவாக இயக்குனராகவும் இருந்தார். ஒரு காசோலையில் கையெழுத்து வாங்குவதற்காக அவருடைய வீட்டுக்கு என்னை அனுப்பி வைத்தது நிருவாகம். அஃபிஸ்காவின் வீடு தாஜ் ஓட்டலின் பக்கத்து கட்டிடத்தில் இருந்தது. எனக்கு கொஞ்சம் அறிமுகனாவர்தான். நான் போன வேலையை முடித்துக் கொண்டு புறப்படும் போது அவர் கேட்டார். "தலைவர் காமராசரை பார்க்க வேண்டுமா? இங்குதான் தங்கியிருக்கிறார். அந்த அறையில் போய் பார்" என்று அறையைக் காட்டினார். மெதுவாக கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தேன். தலைவர் காமராசர் இந்து நாளிதழைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஓரமாக நின்று "அய்யா வணக்கம்" என்றேன். "ம்… யாருப்பா நீ" என்று கேட்டார். நான் வந்த வேலையை சொன்னேன். "அப்படியா நம்ம நாட்டுல உனக்கு எந்த ஊரு?" "திருநெல்வேலியில் உள்ள இராமானுஜம்புதூர்" என்றேன். உடனே "உங்க ஊர்ல ஒரு பள்ளிக் கட்டடம் கட்டி என்னை திறந்து வைக்கும்படி கேட்டார்கள். எனக்குத்தான் நேரமில்லை" என்றார். "நாவலர் நெடுஞ்செழியனைக் கொண்டு திறந்ததாகக் கேள்விப்பட்டேன்." என்றேன். "சரி, சரி பள்ளிக்கூடம் யாரை வைத்து திறந்தால் என்ன?" என்றார். அங்கிருந்து விடைபெற்றேன். அவருடைய நினைவாற்றல் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அன்று மாலை தாராவி கன்னாடிச்சாலில் பொதுக் கூட்டம். சயான் இரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம். கூட்டத்தில் தலைவர் பேசுவதற்கு முன் மாலை மரியாதை செய்யப்பட்டது.  நாடார் மகாஜன சங்கம், ஆதி திராவிட மகாஜன சங்கம், தேவேந்திரர் சங்கம், நாயுடு சங்கம், முதலியார் சங்கம், விசுவகர்மா சங்கம், முஸ்லீம் சங்கம் என்று வரிசையாக வந்து மாலை போட்ட நேரத்தில் அவர் எரிச்சல்பட்டு "இந்த சாதிச் சனியன்களை சென்ட்ரல் ஸ்டேசனிலேயே மூட்டை கட்டி விட்டுறக்கனும்" என்று கத்தினார். இதை மேடையில் நின்று கொண்டிருந்த பொன்னையா நாடார் கைதட்டி வரவேற்றார்.  சுதந்திரா கட்சி தொடங்கிய காலத்தில் பம்பாய்க்கு வருகை தந்திருந்தார் இராஜாஜி. அந்தக் கட்சியின் சார்பில் தாராவியில் ஒரு பொதுக் கூட்டம் நடத்த வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்கள். கட்சிக்கு அதிகப்படியான தலைவர்களும் வழிகாட்டுபவர்களும் இருந்தார்களே தவிர தொண்டர்கள் மிகவும் குறைவு. அந்த நேரத்தில் தாராவியில் ஒரு புத்திசாலித்தனமான பொது நலத் தொண்டர் இருந்தார். அவருடைய பெயர் ஆழ்வார். அந்த சமயத்தில் தாராவி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பல்சாராவின் பரிந்துரையின் பேரில் அவர் சுதந்திராக் கட்சியின் அமைப்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். தமிழர்கள் வாழும் பகுதிக்கு இன்றைக்கு கோபுரங்களாக மாறியிருக்கும் முக்குந்த் நகர் அன்றைக்கு வெறும் புல், பூண்டோடு காலி இடமாக இருந்தது. அந்த இடத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடாகி இருந்தது. இராஜாஜியை அழைத்து வர ஆழ்வார் அவர்களோடு கல்கி கண்ணன் என்பவர் இல்லத்திற்கு நானும் சென்றிருந்தேன். ஆழ்வாரின் அழுக்கு வேட்டியையும் கோடு போட்ட சட்டையையும் கண்ட கண்ணன் "வாங்கோ வாங்கோ" என்று அழைத்தார். ஊஞ்சலில் இருந்த இராஜாஜி எலுமிச்சை பழ நிறத்தில் காணப்பட்டார். நேரில் பார்ப்பது அதுதான் முதல் தடவை. வி.ரெங்கநாதன், டி.எஸ்.கிருஷ்ணன், மசானி அவர்களோடு வருகை தந்த இராஜாஜி இருபது நிடங்கள் தமிழில் பேசினார். "சுத்தமாக இருங்கள். நாகரிகம் என்று கருதி புகைபிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள். நம் தமிழர்கள் இப்போதெல்லாம் இந்த தீமைக்கு ரொம்பவே அடிமையாகி விட்டார்கள். சுதந்திரா கட்சியை ஆதரியுங்கள். அது சுபிட்சத்திற்கு வழிகாட்டும்" என்றார். இந்த இடத்தில் பின்னர் எம்.ஜி.ஆர் பேசினார். தொடர்ந்து மா.பொ.சி., முத்துராமலிங்கத் தேவர், நாம் தமிழர் இயக்கம் சார்பில் திருக்குறள் முனுசாமி, தமிழரசுக் கட்சி சார்பில் கவி.க.மு.செரீப், வானம்பாடி ஆகியோர்கள் இங்கு வந்து சொற்பொழிவாற்றியுள்ளார்கள். அருமையாகப் பேசும் நாவலன் உண்மையை பேசாவிட்டால் அவனைக் காட்டிலும் மோசமான மனிதன் வேற இருக்க முடியாது என்றார் கார்லைல் என்ற அறிஞர். மும்பைத் தமிழரிடையே அருமையாகச் சிலர் சொற்பொழிவாற்றியுள்ளனர். அவர்களில் சு.வள்ளி நாயகம், பி.எஸ்.கோவிந்தசாமி, திருநாவுக்கரசு அமீர்சுல்தான், த.மு.பொற்கோ, ம.இரா.குறள்தாசன், பதி, திருமதி லீலா ஸ்டீபன் ஆகியோரின் மேடைப் பேச்சைக் கேட்டு மகிழலாம். முன்னாள் பம்பாய் செரீப் டி.வி.இராமானுஜம் ஆங்கிலத்தில் மிக அருமையாக பேசுவார். எடுத்த பொருளை குறித்த காலத்திலே முடித்துவிடப் பழக வேண்டும். பேசத் தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே பேசும் பொருளில் புகுந்து விட வேண்டும் என்பார் முத்தமிழ்க் காவலர் விசுவநாதம். இன்று நம்மிடையே வெ.பாலு, சு.குமணராசன், பேராசிரியர் சமிரா மீரான், கவிஞர் ஜெய காண்டீபன், அலிசேக் மீரான், புதிய மாதவி, வெ.பன்னீர் செல்வம், திருமதி அமலா ஸ்டான்லி ஆகியோரை சொல்லலாம். இன்னும் பலர் இருக்கலாம். அவர்களுடைய சொற்பொழிவினைக் கேட்கும் வாய்ப்பு எனக்கில்லை.- சீர்வரிசை சண்முகராசன்(சீர்வரிசையாரின் நாட்குறிப்பு நினைவுகளிலிருந்து)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி