15 September 2014 6:01 am
மும்பை மண்ணின் மைந்தர்கள், மீனவ சமூகத்தைச் சார்ந்த கோலி இனத்தவர்தாம். அவர்கள் வழிபட்ட தெய்வம்தான் மும்பாதேவி. அந்தத் தெய்வத்தின் பெயராலேயே இந்நகரம் அழைக்கப்படுகிறது. மும்பா அல்லது மகா-அம்பா (பெண் தெய்வமான மும்பாதேவியின் பெயர்). நம் தமிழர்கள் எப்படி பெண் தெய்வத்தை மாரியம்மாள், மேரியம்மா என்று அழைக்கிறோமோ, அம்மா என்று உச்சரிக்கிறோமோ அதைப்போன்று அவர்களும் அம்மா" என்ற வார்த்தையை மராத்திய மொழியில் "ஆய்" என்று அழைக்கிறார்கள். மும்பா + ஆய் = மும்பாய் 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் வந்து இறங்கிய பிறகு இந்தப் பகுதியை மொம்பாய், மொம்பே, மொம்பேன், மொம்பேம் மற்றும் பொம்பாய் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, இறுதியில் பொம்பாய்ம் ஆனது. இந்தப் பெயர், போர்த்துகீசியத்தில் இன்றும் பயன்படுத்தப் படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் வசமாகிய பின்னர்தான், பம்பாய் என்று ஆங்கில வடிவத்திற்கு மாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. மராத்தி மற்றும் குசராத்தி பேசுபவர்களால் இந்நகரம் மும்பை அல்லது மம்பை என்றும், இந்தி, பெர்சியன் மற்றும் உருதுவில் பம்பாய் என்றும் அறியப்பட்டது. 1996 ஆம் ஆண்டுதான், மராத்திய உச்சரிப்பிற்கு ஏற்ப, திரும்பவும் "மும்பை" என்று மாற்றப்பட்டது. காலனிய ஆதிக்கவாதிகள் செய்த தவறுகளைச் சரி செய்வது சரியானதே. நமது தமிழ்நாட்டிலும் அப்படி நிறையப் பெயர்களை மாற்ற வேண்டி உள்ளது. பாம்பாய் என்பது "நல்ல வளைகுடா" என்ற போர்த்துகீசியச் சொல்லில் இருந்து பெறப்பட்டது என்று ஒரு தகவலும் மக்களிடம் பரவி இருக்கிறது. மும்பை என்பது, பம்பாய் தீவு, பரேல், மச்காவ், மாஹிம், கொலாபா (ஓல்டு வுமன் தீவு), லிட்டில் கொலாபா ஆகிய ஏழு தீவுகள் சேர்ந்த ஒரு நகரம். மும்பை, இந்தியாவின் மேற்குக் கரையில் கொங்கன் கடற்கரையில் அமைந்துள்ளது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசு, மும்பையின் ஏழு தீவுகளை இந்து மற்றும் பௌத்தப் பண்பாட்டு மையமாக மாற்றியது. பின்னர் போர்த்துகீசியர்களும் அவர்களைத் தொடர்ந்து பிரித்தானியக் கிழக்கு இந்திய நிறுவனமும் குடியேறுவதற்கு முன்னர், அந்தத் தீவுகள் வெற்றி பெற்ற உள்நாட்டுப் பேரரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவை ஒருங்கிணைக்கப்பட்டுத்தான் பம்பாய் என்று பெயரிடப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் நடுவில் ஒரு முக்கிய வணிக நகரமாக உருவானது. 1947 ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்றபோது, இந்நகரம் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற "சம்யுக்த மகாராட்டிரா" போராட்டத்தைத் தொடர்ந்து, பம்பாயைத் தலைநகரமாக கொண்டு மகாராட்டிரா என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் 105 மராத்தியர்கள் உயிர்த் தியாகம் செய்து உள்ளனர். 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகைப் பதிவுகளின் படி, மும்பையின் மக்கள்தொகை 1, 19, 14, 398. சர்வதேச இதழால் வெளியிடப்பட்ட கணக்கின்படி, மும்பையின் மக்கள் தொகை 1, 36, 62, 885 ஆகவும், மும்பை மாநகரப் பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டும் 2, 08, 70, 764 ஆகவும் இருந்தது (2008). மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு சற்றொப்ப 22, 000 நபர்களாகக் கணக்கிடப்பட்டு உள்ளது. இந்துக்கள் (67.39%), இசுலாமியர்கள் (18.56%), பௌத்தர்கள் (5.22%), ஜெயின் (3.99%), கிறித்தவர்கள் (3.72%), இவர்களுடன் சீக்கியர்களும் மற்றும் பார்சியர்களும் மீதமிருக்கும் மக்கள் தொகையில் அடங்கி உள்ளனர். மொழி அடிப்படையில் பார்த்தால், மராத்தியர்கள் (53%), குசராத்தியர்கள் (22%), வட இந்தியர்கள் (17%), தமிழர்கள் (3%), சிந்திகள் (3%), துளுவர்கள் / கன்னடர் (2%) ஆகியோர் அடங்குவர். நீண்ட நெடுங்காலமாக இவர்கள் அனைவரும் மும்பையில் ஒன்றுபட்டு வாழ்கின்றனர். சில நய வஞ்சகர்களால் அவ்வப்போது சிறுசிறு சிக்கல்கள் எழுந்தாலும், அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, அம்ச்சி மும்பை (எங்கள் மும்பை) என்று பெருமையாக சொல்லிக் கொண்டு, தனக்காகவும் மும்பையின் வளர்ச்சிக்காகவும் இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் மும்பைவாசிகள்.- (தமிழ்மணி பாலா என்பவர் எழுதியுள்ள "மும்பையில் பாலா" என்னும் நூலிலிருந்து)"