14 November 2015 9:29 pm
இலங்கைத் தீவில் வட மாநிலத்தில் உள்ள பருத்தித்துறை வரியிறைப் பகுதியில் உள்ளது வல்வெட்டித்துறை. இது சிறந்த மீன் பிடித்துறை முகமாக விளங்குகிறது. இந்திய, சிங்கள இராணுவத்தினரின் மூர்க்கத் தனமான தாக்குதல்களைச் சந்தித்த பகுதி. பிரபாகரன் என்கிற மாவீரன் பிறந்ததும் இந்த வீர மண்ணில் தான். திருமேனியார் வீட்டு வேலுப்பிள்ளை – நாகலிங்கம் வீட்டு பெண்ணான வல்லிபுரம் பார்வதி இணையரின் கடைக்குட்டிப் புதல்வராக 1954ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் பிறந்தவர் பிரபாகரன் ஆவார். பிரபாகரனிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில் இதோ… விடுதலை உணர்வு என்னுள் தோன்றியதற்கு சிறு வயதில் எனது உள்ளுணர்வைத் தட்டி எழுப்பிய நிகழ்வும் கடும் போராட்ட வீரர்களின் வரலாறும் தான் காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்… "1958ஆம் ஆண்டு பாணந்துறை என்கிற இடத்தில் கோயிலில் பூசாரி ஒருவர் இரவில் தூங்கிக் கொண்டிருக்க, அவரைத் தட்டி எழுப்பிய கொடிய சிங்களவர்கள்; எண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றதை பின்னாட்களில் படித்து மனம் பதறியது. அதே இனக்கலவரத்தில், ஒன்றும் அறியாத பிஞ்சுத் தமிழ்க் குழந்தையை துடி துடிக்க, கொதிக்கும் தாரில் தோய்த்து கொன்றார்கள். இந்த நிகழ்வுகள் தான் என்னை பாதித்த முதல் நிகழ்வுகள். எனக்கு பிடித்த தலைவர்களான சுபாஷ் சந்திரபோஸ், தில்லையடி வள்ளியம்மை, பகத்சிங், திருப்பூர் குமரன், நெப்போலியன் போன்றோர்களின் வரலாற்றையும் படித்துள்ளேன்’’. 1970 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இலங்கை சுதந்திரக் கட்சி, லங்கா சம சமாஜ கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை ஒன்று கூடி அமைந்த கூட்டணி அரசில், கல்வியமைச்சராக இருந்த பதியூ தீன் முகமதுவால் கொண்டுவரப்பட்ட ‘தரப்படுத்துதல்’ சட்டத்தின் விளைவாக தமிழ் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாக கொந்தளித்த தமிழ் மாணவர்கள் சத்திய சீலன் என்பவரைத் தலைவராகக் கொண்டு, மாணவர் பேரவையை தொடங்கினர். தமிழர் பிரச்சினை தீர ஆயுதம் தூக்குவதின் வழியாகத்தான் தீர்வு பெறமுடியும் என்கிற உணர்வையும் ஏற்படுத்தியது. தமிழர் மாணவர் பேரவை பலம் பொருந்திய இயக்கமாக வளர்ந்து வந்தது. இயக்கத்தில் 25 பேர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களாவர். இதில் தங்கதுரை, சின்ன சோதி, பிரபாகரன் ஆகியோர் கைக் குண்டுகள் செய்யவும் துப்பாக்கி சுடும் பயிற்சியையும் மேற்கொண்டனர். செயல் ஒன்றையே நோக்கமாக கொண்ட பிரபாகரன் அஞ்சா நெஞ்சர் இராசரத்தினம் யோசனையின் பேரில், சில இளைஞர்களுடன் புதிய தமிழ்ப் புலிகள் என்கிற பெயரில் இயங்கினார். பின்பு 1976 ஆம் ஆண்டு, மேலும் சில இளைஞர்களை சேர்த்து ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’ என்று இயக்கத்திற்கு பெயரிட்டு, விடுதலை போராட்டத்திற்கான உறுதியான அடித்தளமிட்டார். தமிழீழ போராட்ட வரலாற்றில் முதன் முறையாக எதிரிகள் முகாம் மீது பெரிய படையெடுப்பு புலிகளால் நடத்தப் பட்டது. 13-03-91 மாலை தாக்குதல்களை புலிகள் தொடங்கினர். இரவு 9.15 மணிக்கு புலிகள் ‘பசீலன்’ குண்டுகளை வீசித் தாக்கத் தொடங்கினர். சிங்களப் படைகளுக்கு கடல் வழியாக இராணுவம் உதவ முயன்றது. அன்று மாலை 4 மணிக்கு சிங்கள போர்க் கப்பல்களை கடற்கரையின் மறைவிடங்களில் பதுங்கியிருந்த புலிகள் கடுமையாக போராடவே தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் இராணுவம் புறமுதுகிட்டு ஒடியது. பின்னர் ஒயாத அலைகள் – 2 போரைப் புலிகள் தொடங்கினர். செப்டம்பர் 26ஆம் தேதி திலீபன் தன்னைத் தானே ‘அறவழியில்’ தியாகம் செய்த நாளாகும். 1996 ஆம் ஆண்டு அதே நாளைத் தேர்ந்தெடுத்து, கிளிநொச்சி இராணுவ முகாம் மீது தாக்குதல் தொடங்கினார்கள். பரந்தன் முகாமை தாக்கி அடியோடு அழித்தார்கள். ஓராண்டுக் காலத்தில் நடந்த போரில் சிங்களவர்களில் 10, 000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஊனமுற்றவராக ஆகினர். 18, 000 பேர் இராணுவத்தை விட்டே தப்பி ஓடி விட்டனர். இதில் பெண் புலிகளின் பங்கு மகத்தானதாக கூறப்பட்டது. 1996ஆம் ஆண்டு முல்லைத் தீவு 1998ஆம் ஆண்டு கிளி நொச்சி, 1999ஆம் ஆண்டு வன்னி, 2000ஆம் ஆண்டு ஆனையிறவு ஆகிய இடங்களில் சிங்கள இராணுவத்தை அடியோடு அழித்தனர் விடுதலைப்புலிகள். பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பலமுறை செய்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சிங்கள ஊடகங்களும் பத்திரிகைகளும் மட்டுமன்றி இந்திய ஊடகங்களும் பத்திரிக்கைகளும் போட்டி போட்டுக் கொண்டு இத்தகைய செய்திகளை வெளியிட்டு மகிழ்ந்தன. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் வலிமையோடு எழுந்து நின்றிருக்கிறார். 1989 சூலை 13, அன்று தலைவர் பிரபாகரனை அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையா குழுவினரால் சுடப்பட்டு இறந்ததாக ஒரு செய்தி. 2005 அன்று சுனாமிப் பேரழிவில் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக மற்றொரு செய்தி. 15-12-2007 அன்று சிங்கள விமானப் படை நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்து இரகசிய இடத்தில் சிகிச்சை பெறுவதாகவும் அவர் பிழைப்பது அரிது எனவும் இலங்கை அரசே செய்தி வெளியிட்டது. இறுதியாக 2009 இனப்படுகொலையின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்து கிடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தச்செய்தி உண்மையா? பொய்யா? உலகம் அறியவில்லை. அவர் மறைந்தாலும், மறைந்திருந்தாலும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு நாடு அமைய வேண்டுமென தனியொரு படையையே திரட்டி தமிழர் நாட்டிற்காக போராடிய வரலாற்று நாயகனாக பிரபாகரன் என்றும் வாழ்ந்து வருகிறார்.! – அண்ணா கதிர்வேல், மும்பை"