18 May 2014 5:27 am
2009 ஆம் ஆண்டு இலங்கை நாட்டில், வன்முறை ஒழிப்பு என்கிற பெயரில் தமிழ் ஈழப் பகுதியான வன்னிப் பெருங்களத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் உலக அரங்கில் மனித உரிமை கோட்பாட்டிற்கு நிகழ்ந்த ஓர் பெரும் தலைகுனிவு ஆகும். இந்தப் போரில் சிங்கள இனவாத அரசுக்குத் துணையாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பாகிசுத்தான் போன்ற நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை நின்றதின் விளைவாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் மகளிர், குழந்தைகள், பள்ளிச் சிறார்கள், முதியோர்கள் உட்பட பலரும் விடியலுக்கு முந்திய மரணங்களுக்குப் பலியானார்கள். சிங்கள அரசின் தன்னிச்சையான இந்த இன அழிப்புப் போர் நடைபெற்றபோது உலக அளவில் தங்களை மனித உரிமைக் காவலர்களாக வெளிப் படுத்திக் கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் மற்றும் அய்க்கிய நாடுகள் பேரமைப்பு உள்ளிட்ட எவரும், போர்க்களத்தில் நடக்கும் கொடுமைகளைத் தங்கள் உளவுத் துறைகள் மூலம் அறிந்திருந்த நிலையிலும், அப்போரை நிறுத்தவோ, மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கவோ முன்வரவில்லை என்பது தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், இழப்பையும் தந்த ஒன்றாகும். இந்த நூற்றாண்டில் நடந்தேறிய இந்த மனிதப் பேரவலம் நிகழ்ந்து அய்ந்து ஆண்டுகள் முடிவுற்ற பின்னரும் தமிழ் மக்களுக்கு உரிய நீதி வழங்கப் படவில்லை. அண்டை நாடாகவும், தென்கிழக்காசியாவில் ஒரு பெரு வல்லரசாகவும், தமிழ் இனத்தை தன் அங்கமாகவும் கொண்டு விளங்குகின்ற இந்திய அரசின் மவுனமும், மாற்றான் தாய்ப் போக்கும், உலகத் தமிழர்களையும், தமிழ் நாட்டு மக்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன. இது தவிர தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளின் ஒற்றுமையற்றப் போக்கும், சில அரசியல் தலைவர்களின் முரண்பாடான கொள்கை முடிவுகளும், இலாப நட்டக் கணக்குகளும் தமிழ்நாட்டு மக்களிடையே இயல்பாக எழுந்த உணர்வலைகளையும், தோழமை உணர்வுகளையும் கூட நசுங்கி மடிந்தன. இலங்கைத் தீவில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் படிப்படியாக நடந்தேறிய இனப்படுகொலைகளின் உச்சமாகிய முள்ளிவாய்க்கால் போரில் இலட்சத்திற்கு மேற்பட்டோர் போர் விதிமுறைகளுக்கு மாறாக கொன்றொழிக்கப் பட்ட நிலையிலும், இனப்படுகொலை", போர்க்குற்றம் என்கிற சொற்றொடர்களைப் பயன்படுத்த இந்தியா முன்வரவில்லை. எனினும் உண்மைகள் உறங்குவதில்லை. உயிர் பெறும். வரலாற்றுத் தடங்கள் மங்கி விடுவதில்லை. முள்ளிவாய்க்கால் இலங்கை அரசின் தமிழின அழிப்பிற்கு ஓர் இரத்த சாட்சியம். உலகெங்கும் வாழும் ஈழ ஏதிலிகளின் பெரும் அழுத்தங்களுக்குப் பின்னர் அமைக்கப் பெற்ற அய்.நா. மன்ற நிபுணர்கள் குழு அறிக்கையும், அய்.நா. மனித உரிமை ஆணையரின் நேரடிப் பார்வையும், அறிக்கைகளும் இலங்கை அரசின் கோர முகத்தை உலகிற்கு ஓரளவு எடுத்துக் காட்டியுள்ளன. எனினும் உலக அரசுகள் தமது அரசியல் நலன்களின் அடிப்படையிலும், இனப்படுகொலை குற்றச் சாட்டு ஏற்படுத்தக் கூடிய அரசியல் விளைவுகளையும் கருத்தில் கொண்டு சிறிலங்கா அரசு புரிந்த குற்றங்களை இன அழிப்பு (Genocide) என்று வகைப்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றன. இந்திய ஊடகங்கள் பலவும், குறிப்பாக வட இந்திய ஊடகங்கள் அனைத்தும் இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டிலே செய்திகளை அமைத்து வெளியிடுகின்றன. ஆனால் வெளிநாடுகளில் இயங்கி வரும் சேனல் – 4 என்கிற தொலைக்காட்சி, அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைக் காப்பகங்கள் போன்றவை மனித உரிமை உண்மையின் குரலாக ஒலிக்கின்றன. அரசியல் தற்சார்புகளுக்கு அப்பாற்பட்டு குரல் எழுப்புகின்றன. இது போன்ற இந்தியச் சூழலை, சர்வதேசச் சூழலை தமிழ்நாட்டு மக்களாவது தெளிவாக புரிந்து கொண்டு தமிழர்கள் தம் சிந்தனையை செயலை அமைத்துக் கொள்ள வேண்டும். தற்போது வெளியாகிருக்கும் கொடுமைகள் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட துயரின் ஒரு சிறு துளி மட்டுமே. ஈழமக்களின் துயர் துடைப்பு முயற்சிகளில் அவர்களின் தன்மான வாழ்விற்கு வழிகாட்டும் பல்வேறு கருத்தாக்கங்களில் பொது வாக்கெடுப்பு நட்த்தி கருத்தறிவது ஒன்றாகும். இனச் சிக்கல்களுக்கு உள்ளான பல உலக நாடுகள் தெற்கு சூடான், மாண்டி நீக்ரோ, மால்டோவா, சுலோவோக்கியா, எரித்திரியா, மாசிடோனியா, குரோசியா, கோசாவா போன்றவை உலக அரங்கில் பொது வாக்கெடுப்பு மூலம் தீர்வு கண்டமைக்கு எடுத்துக்காட்டுகளாகும். எனவே உலக அரங்கில், தமிழ் நாடு உட்பட, பல்வேறு நாடுகளில் வாழும் எட்டு கோடி தமிழ் மக்களும் ஒன்று பட்டு, ஒருங்கிணைந்து அழுத்தம் கொடுத்தால் ஈழத் தமிழர் வாழ்வில் விடியலின் வெளிச்சம் தெரிய வாய்ப்புண்டு. கடல் அலையும் கரை தாண்டும், காற்றும் திசை மாறி வீசும். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் உதிர்ந்து போன அந்த உயிர்களுக்கு எம் நெஞ்சார்ந்த அஞ்சலி. முள்ளிவாய்க்கால் முடிவல்ல! அது தமிழினத்தின் விடியலுக்கான வேர் என்போம்!- வழிப்போக்கன். "