வரலாற்று சுவைகள் - தமிழ் இலெமுரியா

17 June 2014 8:44 am

என்றைக்கும் நமது நெஞ்சை விட்டு நீங்காத சில சுவையான நிகழ்வுகளை இன்றைக்குப் படித்தாலும் சுவை குன்றாது மனதிற்கு இதம் அளித்து இன்பம் தருவதாக இருக்கிறது. அரசியல், இலக்கியம், சமுதாயம், அறிவியல், காதல் எதுவானாலும் ஒரு பழைய செய்தியைச் சொல்லி மகிழ்கிறோம்.மகாகனம் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரிகள் நல்ல ஆங்கிலப் புலமை உடையவர். ஆங்கிலத்தில் பேசி, ஆங்கிலேயர்களையே திணற வைக்கும் சக்தி படைத்தவர். அவர் ஒருசமயம் இங்கிலாந்து சென்றிருந்த போது பல ஆங்கில மொழி வித்துவான்கள் அடங்கிய அவையில் பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் பேச வேண்டிய தலைப்பு பேச ஆரம்பிக்க சில விநாடிகளுக்கு முன்தான் கொடுக்கப்பட்டது. குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது பேச வேண்டும் என்பது நிபந்தனை. அறிவிக்கப்பட்ட தலைப்பு ஒன்றுமில்லை"(Nothing) என்பதாகும். சாஸ்திரிகளும் அயரவில்லை "NOTHING WILL BE ENGLAND WITHOUT INDIA" (இந்தியா இல்லாமல் இங்கிலாந்து ஒன்றுமில்லை) என்று தொடங்கி இரண்டு மணிநேரம் சொற்பொழிவு ஆற்றினார். அவரது துணிவையும் சொல் வன்மையையும் கண்டு ஆங்கில மொழி அறிஞர்கள் அனைவரும் வியந்து போற்றினர்.           ………… அது பிரபலமான தேசத் தலைவர்களின் புகைப்படங்களை விற்பனை செய்யும் ஒரு கடை. மாஸ்கோவில் இருந்தது. ஒருநாள் குருஷ்சேவ் அந்த கடைக்கு வந்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். எங்கும் அவரது படங்களாகவே மாட்டப்பட்டிருந்தன. சாதாரண உடை அணிந்து சாமன்ய மனிதனைப் போல் வந்திருந்த குருஷ்சேவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கடைக்காரனை அழைத்தார். குருஷ்சேவைப் போன்று பெரிய தலைவர்கள் வேறு யாருமே இல்லையா? லெனின், ஸ்டாலின் போன்றவர்களது படங்களையும் மாட்டி வைத்தால் என்ன? விற்பனையாகும் தானே?" என்று நைசாகக் கேட்டார். கடைக்காரரிடமிருந்து அடிமாட்டாக் குறையாக இப்படி பதில் வந்தது. "எல்லாத் தலைவர்களின் படங்களையும் மாட்டி வைத்திருந்தேன் சார். அவையெல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டன. இந்த குருஷ்சேவ் படங்கள் மட்டும் விற்பனையாகாமல் கிடக்கின்றன". ………… மன்னன் ஒருவன் வேட்டையாடப் புறப்படுவதற்கு முன்பு தனது அமைச்சரை அழைத்து "மழை வருமா?" என்று கேட்டான். "வராது" என்று கூறியவுடன் மன்னன் வேட்டைக்குப் புறப்பட்டான். போகிற வழியில் குடியானவன் ஒருவன் கழுதையின் மீது சவாரி செய்து கொண்டு வந்தான். மன்னரைக் கண்டதும் "மன்னா சிறிது நேரத்தில் மழை வரும். ஒதுங்கிக் கொள்ளுங்கள்" என்று அவன் எச்சரித்தான். மன்னன் அதைப் பொருட்படுத்தாது போனான். வேட்டையாடிக் கொண்டிருந்த போது பலத்த மழை பெய்தது. மன்னன் தொப்பலாக நனைந்து விட்டான். ஙரும்பும் வழியில் அதே குடியானவனைச் சந்தித்த மன்னன் "மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டான். "எனக்குத் தெரியாது; ஆனால் என் கழுதைக்குத் தெரியும் என்றான். மழை வரும் நேரங்களில் அது தன் காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும். நான் தெரிந்து கொள்வேன்" என்றான் குடியானவன். அரண்மனை திரும்பிய மன்னன் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு அக்குடியானவனின் கழுதையைச் சொல்லி அமைச்சராக்கினான். கதையை முடித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி லிங்கன் கடைசியாக ஒன்றைக் கூறினார். அதில்தான் மன்னன் தவறு செய்து விட்டான். காரணம், அது முதல் எல்லாக் கழுதைகளும் ஏதாவது ஒரு பதவி வேண்டுமென்று அலைகின்றன. ………… – சீர்வரிசை சண்முகராசன்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி