19 July 2016 3:45 pm
ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒருவகை எழுச்சி நாளை உள்ளடக்கித்தான் பூமிப் பந்து சுழன்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் உலக புத்தக நாள் என்பது அறிவின் திறவு கோலான புத்தகங்களுக்கான பொன்நாள் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே. வரலாற்று ஏடுகளின் பக்கங்களை வாசித்தோமேயானால் புரட்சியாளர்களின் இதயங்களை கூர்தீட்டி மக்களுக்காக, அவர்களின் வாழ்வாதாரத்திற்காக தங்களை அர்பணிக்க வைத்தது புத்தகமெனும் பேராயுதம் தான் என்றால் மிகையாகாது. அது மட்டுமா? சிறந்த சீர்திருத்த வாதிகளை, நல்ல அறிவியல் அறிஞர்களை, தன்னலமற்ற தேசத் தலைவர்களை உருவாக்கியதில் புத்தகங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பதும் மறுக்க இயலாத உண்மைதான். புத்தகங்கள் செய்த நன்மைகள், அற்புதங்கள் ஒன்றா? இரண்டா? உழைக்கும் மக்களின் பாடுகளை உலகறியச் செய்ததும் அவர்களின் உரிமைகளைக் காணச் செய்ததுமான ஒப்பற்ற நூல் காரல் மார்க்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ எனும் நூலாகும். உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்; இழப்பதற்கு ஒன்றுமில்லை கை விலங்குகளைத் தவிர" என்ற சித்தாந்தத்தை உலகின் மூலை முடுக்குகளில் செய்வதறியாது அறியாமையில் மூழ்கிக் கிடந்த தொழிலாளர்களின் செவிகளில் உரக்கப் பறைசாற்றிய உன்னதமான நூல் அது. கிறித்துவ மக்களின் வேத நூலான பைபிளுக்கு அடுத்தபடியாக உலக அரங்கில் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூல் "கம்யூனிஸ்ட் அறிக்கை" நூல்தான். உழைக்கும் மக்களின் வியர்வையும் குருதியும் தீக்கங்குகளாக பிரகாசிக்க நேர்ந்தது "கம்யூனிஸ்ட் அறிக்கை" என்ற நூலால். இந்த நூல் இப்படியென்றால், ஸ்டோவ் என்ற பெண் எழுத்தாளர் எழுதிய ‘பண்டமாக இருந்த மனிதன்’ என்ற நூலோ கறுப்பின மக்களின் துயரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி, மக்களின் அடிமை முறைக்கு எதிராக குரல் கொடுக்க வைத்தது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்விற்கு விடிவெள்ளியுமானது என்றே கூறலாம். ஒடுக்கப்பட்டும் அறியாமையிலும் வாழ்ந்து கொண்டிருந்த அவர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை கொண்டு வந்தது அந்த நூல். நான்கு மில்லியன் அடிமைகளுக்கு விடுதலைப் பெற்றுத் தந்து உலக அரசியல் தலைவர்களில் ஒப்பற்ற மாமனிதராக போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன், தன்னுடைய சொந்த முயற்சியில்தான் கணிதத்தையும் இலக்கணத்தையும் மாலை நேர அடுப்பு வெளிச்சத்தில் பயின்றிருக்கிறார். "பிளாக் ஸ்டோன்ஸ்", காமெண்ட்ரீஸ் போன்ற விலை மதிப்புமிக்க புத்தகங்களை இரவல் வாங்கி வர இருபது மைல் நடந்தே சென்றிருக்கிறார். வரும் வழியிலேயே நூறு பக்கங்களை படித்தும் முடித்திருக்கிறார். தன்னுடைய நாட்டின் வரலாற்றை தன்னுடைய நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தினை தெரிந்து கொண்டு அவர்களின் நலனுக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்டதும் கூட புத்தகங்களால் அவர் பெற்ற ஞானம்தான். உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை கற்றறிந்தோர் பலரும் நன்னெறி தவறாது வரலாற்று நாயகர்களாக உயர்ந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது. திருக்குறளின் தூய்மை குறித்து இந்தியாவின் உயர் தலைவர்களான அப்துல் கலாம், காந்தியடிகள் மட்டுமல்லாது வெளிநாட்டுத் தலைவர்களும் சேக்சுபியர் போன்ற கவிஞர்களும் உலகிற்கு எடுத்துரைத்ததுடன் தன் வாழ்விலும் கடைபிடித்தனர் என்பது திருக்குறளின் பெருமைக்கு நற்சான்று. அதே போல அப்துல் கலாம் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ பல இளைஞர்களின் வெட்டிக் கனவுகளை வெற்றிக் கனவுகளாக மாற்றியுள்ளது. சவர்கர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றோர்களின் எழுத்துகள் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலையையும் உரிமையையும் பெற்றுத் தந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அவர்களின் எழுத்துகளால் பிறந்த சட்டங்களே இன்றைக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அரண்களாக அமைந்துள்ளது. சீனப் புரட்சியாளர் மாவோ, உலகப் புரட்சியாளர் சேகுவேரா ஐக்கிய இத்தாலிக்கு வித்திட்டுச் சென்ற ஹோசிமின், இரஷ்யாவை மலர் காடாக்கிய மாமேதை லெனின், இரஷ்யாவின் மற்றொரு அதிபரான ஜோசப் ஸ்டாலின் – இவர்களையெல்லாம் ஆளுமை நிறைந்த மனிதர்களாக அடையாளம் காட்டியதும் புத்தகங்கள்தான். தொழிலாளி வர்க்கங்களின் பாடுகளை "தாய்" நாவலைப் போல் தெளிவாக கூறிய நூல் வேறெதுவாக இருக்கக் கூடும். இந்த நாவலின் ஆசிரியர் மாக்சீம் கார்க்கி நாவலிலுள்ள கதாபாத்திரங்களோடு கைகோத்து நடக்கும் உணர்வினை நமக்கும் உண்டு பண்ணியிருப்பது விந்தையிலும் விந்தை. ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய அருமையான நூல்கள் அவையெலாம். நூல்கள் எனும் அறிவுச் சுரங்கம் தவறான மனிதர்களின் சிந்தனைகளில் தவறாகவே பயன்படுத்தப்பட்டது கூட ஓர் உண்மைதான். உலகத்தையே தனது அதிகார பலத்தாலும் ஆணவத்தாலும் குலுக்கியெடுத்தவன் இட்லர் எனும் கொடுங்கோலன். ஒரு சாதாராண ஓவியனான அவனிடம் படிக்கும் பழக்கம் நிறைவே இருந்திருக்கிறது. முதல் உலகப் போரில் ஜெர்மனிய படைகளுடன் சேர்ந்து தன்னை கதாநாயகனாக உருவகப்படுத்த முயன்றான். அம்முயற்சியின் தோல்வியால் மனம் வெறுத்துப் போன இட்லர் தோல்விக்கு காரணம் கம்யூனிஸ்ட்களும் யூதர்களுமே என்று வக்ரமாக சிந்தித்தான். விளைவு இராணுவம் ஆட்சிக்கு வந்ததும் ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் இவன் தொடங்கிய புரட்சி இவனுக்கே வினையானது. 5 ஆண்டு சிறை தண்டனையை பிடித்துக் கொள் என்றது. சிறையில் இருந்த போதுதான் இனவெறி பரப்புரையின் முன்னோடியாக "எனது போராட்டம்" என்கிற நூலை எழுதினான் இட்லர். அவன் எழுதிய அந்த நூல் அவனது எதிர்பார்ப்பின் படியே அவனது இனவெறிக்கான வெற்றியைத் தேடித் தந்தது. யூதர்களும் அப்பாவி மக்களும் கொடூரமாக கொல்லப்பட்டனர் என்பது ஒரு கசப்பான உண்மை. சுதந்திரத்திற்கு முந்திய காலமது. ரோமேச சந்திரதத்தர் என்ற ஓர் அறிஞர் இந்திய பொருளாதார சரித்திரத்தை விளக்கும் முறையில் ஒரு நூல் எழுதி வெளியிட்டார். வெள்ளைக்காரர்கள் எவ்வளவு தந்திரமாக தங்கள் நாட்டுப் பொருட்களை நமது தலைமையில் கட்டிவிட்டு நமது நாட்டுச் செல்வத்தை எவ்வாறு சுரண்டிச் செல்கிறார்கள் என்பதை தெளிவாக புள்ளி விவரங்களோடு கூறியது. முன்பெல்லாம் வெள்ளை அரசாங்கம் நாட்டை அடிமைப்படுத்தி ஆளுகிறது. அந்த அரசாங்கத்தை விரட்டியடித்து விட்டு சுதந்திரம் பெற வேண்டுமென்பது போன்ற பொதுவான எண்ணங்கள்தான் மக்களிடையே இருந்தது. அந்த நூலைப் படித்த பின்புதான் மக்களுக்கு வெள்ளையர்கள் மறைமுகமாக சூழ்ச்சி செய்து தங்களைச் சுரண்டிக் கொழுக்கும் உண்மை வெளிப்பட்டது. அதன் பின்புதான் மக்களின் மனதில் மகத்தான எழுச்சி ஏற்பட்டதாம். இது போன்ற சிறந்த நூல்களின் பயன்பாட்டை நிறைய கூறிக் கொண்டே போகலாம். இது போன்ற நூல்கள்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு துணையாகின்றன. நூல்களினால் நாம் பெற்ற அறிவினை ஒளி விளக்காக பயன்படுத்தி வாழ்வில் பின் தங்கியும் அறியாமையிலும் முரண்பாட்டிலும் சிக்கித் தவிக்கும் மக்களுக்கான வழிகாட்டியாக வாழ முயற்சிக்க வேண்டும். மாறாக புத்தகங்களினால் கிடைத்த ஞானத்தை கொண்டு இழிவான செயல்களில் ஈடுபடுத்துவதற்கும் நற்பண்புகளை இழந்து கொடூரமான வாழ்க்கை முறையை கற்றுத்தருவதற்கும் வாய்ப்பாக இருந்துவிடக்கூடாது. – ஜோதிமதி, கரிசல்குளம்."