வெற்றி நம் இதயத்திலே! - தமிழ் இலெமுரியா

11 September 2016 3:56 pm

நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உண்டாகும் சாதாரண நிகழ்வுகளையும் அற்பம் என்று தள்ளி விடக் கூடாது. இதனைச் சிந்தித்தால் உலகில் அற்ப நிகழ்வுகளே கிடையாது. சாதாரண நிகழ்வுகளே வரலாற்றை மாற்றி அமைத்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் தொடர் வண்டியில் இந்தியர்கள் அமர்ந்து செல்ல அனுமதி இல்லை எனக் கூறி மகாத்மா காந்தியை வெளியேற்றிய அந்நாட்டு நடைமுறை நிகழ்வுதான் அவர் மனதில் இந்திய நாட்டின் விடுதலை சிந்தனை உதயமாகக் கரணியமாக அமைந்தது.  ஜிப்சிமாத் என்பது ஒரு வகைப் புழு. அதன் மூலம் நூதனமான பட்டு உற்பத்தி செய்யலாம் என்று எண்ணிய அமெரிக்கர் அவற்றை பிரான்சு தேசத்திலிருந்து கொண்டு வந்தார். சாளரத்திற்கு (ஜன்னல்) அருகில் இருந்த மேசை மீது வைத்துப் பரிசோதனை செய்தார். அப்பொழுது யாரோ கூப்பிட்டதும் வெளியே சென்றுவிட்டு திரும்பி வருவதற்குள் அப்புழுக்கள் காற்றால் சாளரத்திற்கு வெளியே சென்று விழுந்துவிட்டன. புழுக்களைக் காணாத அமெரிக்கர் முயற்சி வீணாகி விட்டதே என்று வருந்தி அமைதியானார். சிலநாட்கள் சென்றதும் அமெரிக்கரின் இல்லத்தைச் சுற்றி இருந்த அழகிய பூஞ்சோலைகளும் காடுகளும் இலைகள் இன்றி பட்டுப் போயின. இதற்குக் காரணத்தை அறிந்த போது ஜிப்சிமாத் என்ற புழுவினால் கேடு ஏற்பட்டதை அறிய முடிந்தது. அப்புழுக்களை அழித்துக் காடுகளைச் சீர்செய்ய பல்லாயிரக் கணக்கில் பணம் செலவிடப்பட்டது. அற்பமான புழுக்களால் எத்தனை பண விரயம். அந்த அமெரிக்கர் சாளரத்தை மூடிச் சென்றிருந்தால் இப்பெரும் இழப்பு ஏற்பட்டிருக்காது. பாதையில் படிந்திருந்த குதிரைக் குளம்பின் சுவடுகளைக் கண்ட பின்னரே ஜான் கூடன்பர்க் யோசித்து அச்செழுத்துக்களைக் கண்டுபிடித்தார். அச்சுத் தொழில் வளர்ச்சியடைந்ததற்குக் காரணம் சாதாரணமாக நிகழ்ந்த குதிரைக் குளம்பின் சுவடுகளே. மரத்திலிருந்து கீழ்நோக்கி விழுந்த ஆப்பிள் பழத்தைப் பற்றி எண்ணியதால்தான் சர் நியூட்டன் பூமிக்கு ஈர்ப்பு விசை இருப்பதைக்  கண்டறிந்தார். அதன் மூலம் இயற்கை சாத்திரம் விரிவடைந்தது. கடிகாரத்தைப் பழுது பார்க்கும் சிறுவன் தன் கையில், கண்ணில் அணியும் லென்ஸ் ஒன்றைப் பிடித்து உற்று நோக்கிக் கொண்டிருந்த போது தூரத்தில் இருந்த கோபுரம் அண்மையில் இருப்பதாகத் தோன்றியது. அச்சிறுவன் அவ்வுண்மையை மேலும் ஆராய்ந்து தொலைநோக்குக் கருவியை (டெலஸ்கோப்) கண்டுபிடித்தான். இடி, மின்னல், மழை இவை கலந்தடித்தபோது காற்றாடி விட்டுக் கொண்டிருந்த பெஞ்சமின் பிராங்களின் அதில் மின்சார ஆற்றல் இருப்பதாகக் கண்டறிந்தார். அதன் மூலம் குழாயில் தோன்றிய சிறிய ஒளியால் உடல் கூறுகளை பார்க்கும் எக்ஸ்ரே கருவியை கண்டுபிடிக்க முடிந்தது. இராபர்ட் ப்ரூஸ் ஆறுமுறை பகைவர்களால் தோற்கடிக்கப்பட்டு குகையில் வசித்தார். அக்குகையில் சிலந்தி ஒன்று வலை கட்டி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சேர பலமுறை தோற்றும் முயற்சியை விடாது இறுதியில் வென்றது. இதைக் கண்ட அவர் கடைசி முறையாக படைதிரட்டிப் பகைவர் மேல் போர் தொடுத்து வென்றார். தண்ணீரில் மிதந்த மரக்கட்டைகளைக் கண்ட தமிழர்கள் அவற்றை ஒன்றிணைத்து கட்டி கட்டுமரங்களாக வடிவமைத்து அதில் பயணம் செய்தனர். இதுவே பின்னாளில் அடுக்குமாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட கப்பல்கள் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.  இதுபோன்ற சிறிய விடயங்களால் மனித வாழ்க்கையே மாறுதல் அடைந்திருக்கின்றது. வெற்றியின் ஆதாரம் அற்ப நிகழ்ச்சியில் ஆடிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. எதனையும் அற்பமானதுதானே என்று எண்ணி விடக் கூடாது. கடையாணி இல்லாடிவில் பெரிய சக்கரமே சுழல முடியாது. சிறியவையாக இருப்பினும் அதனுடைய ஆற்றல் அளவு கடந்து செல்லும். ஹென்றி போர்டு பள்ளிப் படிப்பை விட்டு நீங்கியதும் சாலை பொறிகலனை ஓட்டும் வேலையில் சேர்ந்தார். மோட்டார் செய்யத் தொடங்கிய காலத்தில் பலரும் பரிகாசம் செய்தனர். முயற்சி வீணானது என்று பலர் கூறிய போதும் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உழைத்து மோட்டாரைக் கண்டுபிடித்தார். ஒரு தொழில் செய்ய தொடங்குகையில் பலவாறு கூறி அதைரியப்படுத்துவது மக்களின் இயல்பாயிருக்கிறது. எவர் எது கூறிய போதும் மனந்தளராமல் ஊக்கத்தோடு உழைத்து வெற்றி பெற்றேன் என்கிறார் போர்டு. தைரியம், விடாமுயற்சி, சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை இந்த நான்கும் சீக்கிரம் முன்னுக்குக் கொண்டு வரும் கருவிகள். வாக்கினிலே தெளிவு, தொழிலிலே திறமை, தொண்டிலே நேர்மை, துன்பத்திலே சகிப்பு இவை யாவும் வெற்றி அடையும் வழிகள் ஆகும். விழிப்பு நிலையில் மட்டுமன்றி உறக்க நிலையிலும் வெற்றியின் குறிக்கோளை மறந்து விடக் கூடாது. மலையில் மேய்கின்ற ஆடுகளின் ஓசையைக் கேட்டுக் கொண்டேதான் இடையன் உறங்கிக் கொண்டிருப்பான். வேர்வையால், குருதியால் நொறுங்கிப் போன எலும்புகளால் இடைவிடாத உழைப்பால் மட்டுமே இன்ப மாளிகையை எழுப்பிவிட முடியும். தொடர்ந்து உழைப்பதில் அல்லது முயற்சியில் இடை வழியில் தளர்ச்சியும் சலிப்பும் ஏற்படக் கூடுமானால் உழைப்பும் முயற்சியும் பயனற்றுப் போய்விடும். இந்தக் குழப்பநிலை காரணமாக உள்ளம் பலவீனப்பட்டு பின்னால் வேறு உழைப்பு அல்லது முயற்சியில் ஈடுபட முடியாத அளவுக்கு நிரந்தரமாக வீழ்ச்சி அடைந்து விடக்கூடும். ஏக்கமும் தூக்கமும் ஊக்கத்தைக் கெடுக்கும். வாழ்நாள் முழுவதும் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் விளங்க வேண்டுமானால் அது உள்ளத்தின் துணிவினால் மட்டுமே சாத்தியமாகும். உள்ளம் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டுமானால் வாழ்நாள் முழுவதும் இரு நண்பர்களை மட்டும் நம்பி அவர்களுடன் இணைந்து விட வேண்டும். தளராத முயற்சியும் அயர்வில்லாத உழைப்புமே அந்த இரண்டு நண்பர்களாகும். வாழ்க்கையில் வெற்றி பெறுதல் என்றால் பொன்னையும் பொருளையும் மலை மலையாகக் குவித்து விடுதல் அல்ல. எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கும் சூழ்நிலையை நிரந்தரமாக அடைவதுதான் வாழ்க்கையில் உயர்வடைதல் என்பதாகும். இப்படிப்பட்ட உண்மையான ஓர் உயர்வு நிலைக்கு அடித்தளமாக இருப்பது கலக்கம் இல்லாத உள்ளத்தைப் பெறுவதுதான். ஒரு மனிதனுக்கு பெரும் வலிமையைத் தருவது எது என்றால் ஏதாவது ஓர் இலட்சியத்தை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு அதை அடைவதற்காகப் போராடுவதுதான். கடைக்கால் பலமாக இருந்தாலன்றி அதன் மீது அமைக்கப்படும் எந்தக் கட்டடமும் உறுதியாக இருக்க முடியாது. நமது உள்ளப்பாங்கை உறுதிப்படுத்திக் கொள்வது வாழ்க்கை இலட்சியத்துக்கான கடைக் காலாகத் திகழ்கிறது. வாழ்க்கையின் இலட்சியம் என்ற மாளிகையை எழுப்ப உறுதியான உள்ளம் என்ற பலமான அடித்தளத்தை அமைக்க வேண்டும். உள்ளம் உற்சாகமாக இருந்தால் உடலின் எல்லா உறுப்புகளும் சுறுசுறுப்பாக வேலை செய்யும். உள்ளம் தளர்ந்தால் உடல் தளரும். ஊக்கமும் உற்சாகமும் மெலிவடையும். இன்பக் கடலில் வசந்த தென்றல் வீச, சுகபோகம் என்ற துடுப்பால் தள்ளப்பட தங்கப் படகு போல பவனிவர உள்ளம் உறுதியாக இருக்க வேண்டும். உலக மகா கவிகளுள் ஒருவராகப் போற்றிப் புகழப்படுகின்ற மில்ட்டனுக்கு வாழ்வின் மையப் பகுதியில் கண் பார்வை குன்றிவிட்டது. இதற்காக அவர் கலங்கவில்லை. கருத்துகள் அவர் உள்ளத்தில் உறங்கவில்லை. கவிதை நெஞ்சம் முன்னிலும் பெரியதாகி விரிந்தது. கவின்மிகு கவிதை பிறந்தது. கவிதை உலகு அவரது சிறந்த கவிதைகளால் சிறப்புப் பெற்றது. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஒரு கால் ஊனமானவர்தான். அவரை ஒரு தள்ளு வண்டியில் அமரச்செய்து செயலகத்திற்கு நீக்ரோ ஒருவன் அன்றாடம் தள்ளிக் கொண்டு வருவான். ஆங்கில இலக்கிய உலகில் நிலையான இடத்தைப் பெற்ற சர் வால்ட்டர் ஸ்காட் பிறவியிலேயே ஒரு கால் ஊனமானவர். ஜெர்மனியின் மன்னராக இருந்த கெய்சருக்கு ஒரு கை சூம்பியிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த ப.ஜீவானந்தத்திற்கு காது சரியாகக் கேட்காது.  பஞ்சாப் சிங்கம் என்று முழங்கப் பெற்ற இரஞ்சித்சிங் கோரமான உருவம் உள்ளவர். அம்மை வடுக்கள் நிறைந்த முகம் உடையவர். ஒற்றைக் கண்ணர். அவரது உறுதி வாய்ந்த உள்ளத்தால் உயர்ந்த நிலை அடைந்தார். அவலட்சணத்தின் மொத்த உருவாய் பிறந்தவர்தான் அறிவுரை மேதை சாக்ரட்டிசு. அகிலத்திற்கு அறிவுச்செல்வத்தை வாரி வழங்கி அவனிவாழ் மக்களின் புகழைப் பெற்றார். ஒவ்வொரு மணி நேரத்திலும் ஆரம்பித்து முடியும் எல்லா சாதாரண சம்பவங்களும் பிறவும் நம்மை மேலே கொண்டு போகத் தக்கவையே. ஆனால் தொடக்கம் சரியானதாயிருத்தல் வேண்டும் என்கிறார் லாங்பெல்லோ. தொடக்கம் சரியாக இருந்தால் முடிவு வெற்றி பெறும். தொடக்கம் சிறிய அளவினதாய் இருந்தாலும் முடிவு பெரிய அளவில் இருக்கும். பெரிய ஆறு முதலில் சிறிய அருவியாக ஆரம்பிக்கிறது. அது வரவரப் பெரியதாகி உயர் நிலையை அடைகிறது. மிகப் பெரிய ஆலமரமும் சிறிய விதையினின்று தோன்றியதே. புத்த மகானிடம் தோன்றிய சீவகாருண்ய உணர்ச்சி உலகமெங்கும் பரவி உலகத்துக்கே புத்துயிர் அளிக்கிறது. ஓரிடத்தில் தோன்றும் ஆரம்பம் மிகப் பெரியதாகப் பரவுதலும் பயனைத் தருதலும் உண்டு. நம் நிலைக்கு உட்பட்ட தொடக்கத்தை தொடங்க வேண்டும். அவை நம் சொந்த எண்ணங்களாலும் செயல்களாலும் அமைவது அவசியம். நம்முடைய தொடக்கம் செம்மையானவையா என்பதை அறிய வேண்டும். தொடக்கத்தினால் ஏற்படும் பயனை பொறுமையோடு சகித்து அதனையே விடாமல் செய்துவரும் பொழுது நிச்சயம் வெற்றிபெற முடியும். உனது வாழ்க்கையின் வெற்றி உனது தொடக்கத்தைப் பொறுத்துள்ளது. முசோலினி தன்னம்பிக்கையும் உழைப்பும் அஞ்சாமையும் உடையவர். இம்மூன்றினால் கொல்லன் மகனாகப் பிறந்த இவர் இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக மாறினார் என்கிறார் லுட்விக் எனும் வரலாற்று ஆசிரியர். முசோலினி தொடக்கக் கல்வி கற்கும் போது ஒருநாளும் நல்லுணவு சாப்பிட்டதில்லை. கொடிய வறுமையே இதற்குக் காரணம். தந்தை அரசியல் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டதும் வறுமை அழுத்தியது. கையில் காசின்றி தெருத் தெருவாக அலைந்து முடிவில் சாக்லேட் செய்யும் கைத் தொழிற்சாலை ஒன்றில் சிறிய தொழிலாளராக அமர்ந்தார். சிறிது காலத்திற்குள் அவ்வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் கட்டடம் கட்டும் இடங்களில் செங்கற்களை எடுத்துக் கொடுக்கும் கூலி வேலையில் அமர்ந்தார். நாள் ஒன்றுக்கு நூற்றியிருபது (120) முறை இரண்டடுக்கு மாடி வீட்டின் உயர ஏறி இறங்க வேண்டியிருந்தது. செங்கற்களை எடுத்துக் கொண்டு ஏறி இறங்குவது எவ்வளவு துன்பமான வேலை. இளமையில் அவர் பட்ட துன்பங்கள் பல. எனினும் மனம் தளரவில்லை. இதுவே இவரது பெரு வெற்றிக்குக் காரணமாகும். எனக்கு சிறு வயதில் நேர்ந்த இன்னல்கள் யாவும் எதிர்காலத்தில் எனக்கு ஏற்படவிருக்கும் பெருநிலைக்கு உரிய அறிகுறிகள் என்று நான் சிறுவனாயிருக்கையில் நினைத்தது உண்டு" என்று முசோலினி தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகிறார். நம்முடைய ஆற்றலைச் சரியாக உணர்ந்து கொண்டு அதனை தக்க முறையில் பயன்படுத்தினால் மனவலிமை பெற்று வெற்றியை அடைய முடியும். ஆற்றலை உணராமலும் அதனை தக்க முறையில் செலுத்தாமலும் இருந்தால் எவ்வளவு பெரிய நன்மையான வாய்ப்புகள் வலிய வந்து குறுக்கிட்டாலும் வெற்றியைக் காண்பது அரிதாகிவிடும். – மெர்வின்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி