18 July 2013 1:36 pm
ஆசுத்திரியா ஐரோப்பா கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஓர் நிலம் சூழ் நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே செக் குடியரசு, ஜெர்மனி ஆகிய நாடுகளும், கிழக்கே ஹங்கேரி, சுலோவாக்கியா ஆகிய நாடுகளும், தெற்கே சிலேவேனியா, இத்தாலி ஆகிய நாடுகளும், மேற்கே சுவிட்சர்லாந்து மற்றும் லிச்டென்ஸ்டைன் ஆகிய நாடுகளும் அமைந்துள்ளன. சற்றொப்ப 83,855 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்நாட்டின் மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின் படி, 84,14,638 மட்டுமே. வியன்னா (Vienna) நகரம் நாட்டின் பெரிய நகரமாகவும், தலைநகரமாகவும் விளங்குகிறது. தலைநகர் வியன்னாவில் வாழும் மக்களின் எண்ணிக்கை மட்டுமே 2.2 மில்லியன் ஆகும். ஆசுத்திரியாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் இங்கு வசிக்கின்றனர். மேலும் நாகரிகம் மிக்க நகரமாகவும், தனிநபர் வருமானம் அதிகமுள்ள நகரமாகவும் வியன்னா திகழ்கிறது. வியன்னாவைத் தொடர்ந்து கிராஸ் (Graz), லின்ஸ் (Linz), சல்பர்க் (Salzburg), மற்றும் இன்ஸ்ப்ருக் (Innsbruck) ஆகியவை அடுத்தடுத்த பெரிய நகரங்களாகும். நாட்டின் தேசிய மொழியாக ஜெர்மன் திகழ்கிறது. நாணயம் யுரோ ஆகும்.
12 ஆம் நூற்றாண்டில் இந்நாட்டிற்கு ஜெர்மன் மொழியில் “ஆசுத்திரியா” எனப் பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் ஹாப்ஸ்பர்க்கர்களின் வருகைக்கு முன்பு ஆஸ்திரியர்கள் ஜெர்மனியர்களாகக் கருதப்பட்டதுடன், ஆசுதிரியா ஜெர்மன் நாட்டின் ஓர் அங்கமாகவும் திகழ்ந்தது. பின்னர் ஹாப்ஸ்பர்க் இனத்தவர்கள் அதிகமாக பரவ ஆரம்பித்ததால், புனித ரோமன் கத்தோலிக்கப் பகுதிகளாக ஹாப்ஸ்பர்க் வம்சத்தின் ஆட்சி செலுத்தியது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில், பிரெஞ்சின் பேரரசனாக நெப்போலியனுக்கு முடிசூட்டிய பின்னர், ஆசுத்திரியா ஐரோப்பியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதன் மூலம் புனித ரோமானியப் பேரரசு முடிவுக்கு வந்தது. பின்னர் 1804 ஆம் ஆண்டு ஆசுத்திரியப் பேரரசு உருவானது. கவுன்ட் வான் மெட்டர்னிக் என்பவர் ஜெர்மனிய மாநிலங்களுக்கிடையில், ஆசுத்திரியாவின் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தார். ஆனால் பிரஷ்யாவுடன் ஆசுத்திரியப் போர் மூண்டதன் மூலம் ஆசுத்திரியா பிரிந்து, ஆசுத்திரியா – கங்கேரி இரட்டை முடியாட்சிக்கு வழிவகுத்தது. 1867 ஆம் ஆண்டு ஆசுத்திரியா – ஹங்கேரிப் பேரரசு மறு உருவாக்கம் பெற்றது. 1914 ஆம் ஆண்டு செர்ப்பிய தேசியவாதி ஒருவரால், ஃபிரான்சிஸ் ஃபெர்டினாண்ட் என்பவர் கொலை செய்யப்பட்டதன் மூலம், முதல் உலகப் போர் மூண்டது. 1918 ஆம் ஆண்டு இந்தப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, இரட்டைப் பேரரசு (ஹப்ஸ்பர்க்) நிலைகுலைந்து, ஆசுதிரியா தனிப் பேரரசாக பிரிந்து குடியரசு நாடானது. இறுதியில் 1919 ஆம் ஆண்டு ஆசுத்திரியா தனிக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. 1938 ஆம் ஆண்டு ஹிட்லரின் நாசி ஜெர்மனியால் கைப்பற்றப்பட்டு, ஜெர்மனியப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் ஆசுத்திரியா ஜெர்மனியக் கூட்டமைப்புடன் சேர்ந்து கொண்டது. இதனால் 10 ஆண்டுகள் நேச நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பிறகு, 1955 ஆம் ஆண்டு மீண்டும் குடியரசு நாடானது. பின்னர் 1955 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடாகவும், 1995 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகவும் இணைந்து செயல்படத் தொடங்கியது.
1920ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் படி, ஆசுத்திரியா ஓர் நாடாளுமன்ற குடியரசு நாடாகும். இதன் நாடாளுமன்ற கட்டிடம் தலைநகரான வியன்னாவில் அமைந்துள்ளது. சமூகப் பொருளாதார சந்தையில் சிறந்து விளங்கும் ஆசுத்திரியா, உலக நாடுகளை ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), 12வது இடத்தில் உள்ளது. இங்கு வாழும் மக்கள் உயர்தர மற்றும் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். 1980களில் ஆசுத்திரியாவின் பல முக்கிய தொழிற்சாலை நிறுவனங்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது. சர்வதேச சுற்றுலாத் தளங்கள் இங்கு அதிகமாக இருப்பதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும். அதே போல் ஆசுத்தியர்கள் கல்வியிலும் அதிக வளர்ச்சி பெற்றவர்களாக விளங்குகின்றனர். இங்கு 15 வயது வரைக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்படுகிறது. மேலும் பெரும்பாலான பள்ளிக் கூடங்கள் காலை 8மணி முதல் 1 மணி வரை மட்டுமே நடைபெறுகிறது.
2011 கணக்கெடுப்பின் படி, ஆசுதிரியாவில் 1.9 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வெளிநாடுகளிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் அண்டை நாடுகளான துருக்கியர்கள், செர்ப்பியர்கள், சிலேவேனியர்கள் ஆகியோர் அடங்குவர். மேலும் இலங்கைத் தமிழர்கள் அதிகமாக இடம் பெயர்ந்து வாழும் நாடுகளில் ஒன்றாக ஆசுத்திரியா திகழ்கிறது.
ஆஸ்திரியாவின் தேசிய மொழியாகிய ஜெர்மன் மொழியை 88.6 விழுக்காடு மக்கள் பேசுகின்றனர். செர்பியன், க்ரோசியன், போஸ்னியன் ஆகிய மொழிகளை 4.2 விழுக்காடு மக்களும், துருக்கிய மொழியை 2.3 விழுக்காடு மக்களும், ஹங்கேரிய மொழியை 0.5 விழுக்காடு மக்களும், போலிஷ் மொழியை 0.5 விழுக்காடு மக்களும் பேசுகின்றனர். ஜெர்மன் அலுவலக மொழியாக இருந்தாலும், ஜெர்மனியில் பேசப்படும் ஜெர்மன் மொழிக்கும், ஆசுதிரியாவில் பேசப்படும் ஜெர்மன் மொழிக்கும் சிறு சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.
ஆசுத்திரியாவில் கிறித்தவ மதம் அதிகமாகப் பின்பற்றப்படுகிறது. 2012 கணக்கெடுப்பின் படி, ஆசுத்திரியாவின் மொத்த மக்கள் தொகையில் சற்றொப்ப 86 விழுக்காடு மக்கள் கிறித்தவர்கள் என்றும், இதில் 77 விழுக்காடு மக்கள் ரோமன் கத்தோலிக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கணக்கிடப்பட்டது. 12 விழுக்காடு மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றாது, மதச் சார்பற்றவர்களாக உள்ளனர். ஏனைய மக்களில் கொசாவா, துருக்கி, போஸ்னியா ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்த பல்வேறு இசுலாமியர்கள் காணப்படுகின்றனர். 1938 ஆம் ஆண்டுகளில் ஏறத்தாழ 2,00,000க்கும் அதிகமாக இருந்த யூத மக்கள் தற்போது 4,500 பேர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஏறத்தாழ 65,000 யூதர்கள் இரண்டாம் உலகப் போரின் போது கொல்லப்பட்டனர். மேலும் 1,30,000 பேர் ஆசுத்திரியாவை விட்டு புலம் பெயர்ந்தனர். 1983 ஆம் ஆண்டு ஆசுத்திரியாவில் புத்த மதம் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
ஆசுத்திரியாவைச் சுற்றி ஆல்ப்ஸ் மலைத் தொடர் சூழ்ந்திருப்பதால் இதன் நிலப்பரப்பு மிகுந்த உயரத்தில் (3,789 மீட்டர்கள்) காணப்படுகின்றன. ஆசுத்திரிய நிலப்பரப்பில் நான்கில் மூன்று பங்கு ஆல்ப்ஸ் மலையால் சூழ்ந்துள்ளதால், எப்போதும் குளிர்ந்த பிரதேசமாகக் காட்சியளிக்கிறது. இங்கு குளிர்காலத்தில் பருவநிலை −10°C முதல் −0°C வரையிலாக இருந்தாலும், கோடைக் காலத்தில் இதன் வெப்பநிலை அதிகபட்சமாக 37°C ஆக காணப்படுகிறது.
ஆசுத்திரியர்கள் கட்டடக் கலை, ஓவியக் கலை, நாவல், இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினாலும், இசைத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக விளங்குகின்றனர். இதில் ஜோசப் ஹைடன், மைக்கேல் ஹைடன், பிரான்ஸ் லிஸ்ட், பிரான்ஸ் ஸ்ஹீபர்ட் ஆகியோர் மிகவும் புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள் ஆவர். பெல்விடர் அரண்மனை ஆசுதியர்களின் சிறந்த கட்டடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். ஆசுதிரிய யாத்திரிகளின் புனிதத் தளமாக பேஸிலிகா ஆப் மரியசால் விளங்குகிறது.
கால்பந்து விளையாட்டில் ஐரோப்பிய கண்டத்தின் மிகவும் வெற்றிகரமான அணியாக ஆசுதிரியா கால்பந்து அணி விளங்குவதுடன், உலக கால்பந்து அணிகளிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. 1934 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் 4வது இடத்தையும், 1954 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் 3வது இடத்தையும், 1978 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் 7வது இடத்தையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.