20 July 2013 3:45 pm
வட ஆப்பிரிக்காவின் நடுவில் அமைந்துள்ள ஓர் நிலம்சூழ் நாடு சாட் ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே லிபியாவும், கிழக்கே சூடானும், தெற்கே மத்திய ஆப்பிரிக்க குடியரசும், தென்மேற்கே கமரூன், நைஜீரியா ஆகிய நாடுகளும், மேற்கே நைஜரும் அமைந்துள்ளன. சற்றொப்ப 4,95,753 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்நாட்டின் மக்கள் தொகை 2009 கணக்கெடுப்பின் படி, 1,03,29,208 ஆகும். உலக நாடுகளின் நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில், சாட் 21வது பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடு ஆகும். இந்நாட்டின் பெரிய நகரமாகவும், தலைநகரமாகவும் என்டிஜமேனா (N’Djamena) விளங்குகிறது. இங்கு பொதுவாக பாலைவனக் காலநிலை நிலவுவதால் இந்நாடு “ஆப்பிரிக்காவின் இறந்த இதயம்” (Dead Heart of Africa) என அழைக்கப்படுகிறது.
கி.பி 800 ஆம் ஆண்டு, இந்நாட்டில் முதன் முதலாக கானெம் (kanem) ஆட்சிமுறை நிறுவப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இதன் எல்லைகள் இன்றைய சாட் நாட்டின் பரப்பளவுக்கு ஒப்ப விரிவடைந்து, வடக்கே கானெம் – போர்னூ எனும் புதிய பேரரசு உருவானது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டில், சகாரா வணிகத் தடத்தின் தெற்கு முனையத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் மூலம், இதன் அதிகாரம் உச்சமடைந்தது. கானெம் பேரரசு, நாட்டு மக்களில் மூன்றில் ஒரு விழுக்காட்டினரை அடிமைகளாக நடத்தினர். இதே காலகட்டத்தில் தெற்கில் பகிர்மி, வடாய் போன்ற பகைமைப் பேரரசுகளும் வழுவடைந்து வந்தன. 1883 ஆம் ஆண்டுகளில் இந்த 3 பேரரசுகளுமே சூடானின் மாவீரர் என்றழைக்கப்பட்ட ரபி அல்-ஸீபாயர் என்பவரிடம் தோற்றுப் போயின. ஆனால் அவர் 1891 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதன் மூலம் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் காலூன்றத் தொடங்கியது. 1910 ஆம் ஆண்டு பிரெஞ்சு தன் அதிகாரத்தை விரிவுபடுத்தி, சாட் நாட்டை பிரெஞ்சு ஈக்வடோரியஸ் ஆப்பிரிக்காவின் அங்கமாக உருவாக்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1946 ஆம் ஆண்டு சாட், பிரான்சின் கடல் கடந்த ஆட்சிப் பகுதியானது. இதன் மூலம் சாடியன்கள் பிரெஞ்சு சட்டமன்ற பிரதிநிதிகளையும், சாட் நாட்டின் சட்டமன்ற பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றனர். இறுதியில் 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் நாள் பிரான்சிடமிருந்து, சாட் விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக மாறியது. சுதந்திர சாடின் முதல் அதிபராக சாடியன் முற்போக்கு கட்சியின் தலைவர் பிரான்கோய்ஸ் டோம்பல்பாயே ((Francois Tombalbaye) தேர்ந்தெடுக்கப் பட்டார்.
1960 ஆம் ஆண்டு சாட் விடுதலை பெற்றாலும், பல ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களின் விளைவாக, நிலையற்ற அரசியல் தன்மையையும், பொருளாதாரப் பின்னடைவையும் சந்தித்தது. பிரான்சு, லிபியா ஆகிய நாடுகள் அடிக்கடி தலையிட்டும் கூட, நிலையான அமைதி ஏற்படவில்லை. இன்றும் சாட் ஓர் அமைதியற்ற நாடாக விளங்குகிறது.
பிரெஞ்சும், அரபும் சாட் நாட்டின் ஆட்சி மொழிகளாகும். மேலும், ஃபுலா, சாரா ஆகிய மொழிகளும் பரவலாகப் பேசப்படுகின்றன. சாட் நாட்டில் சற்றொப்ப 200க்கும் அதிகமான இனக் குழுக்கள் வாழ்கின்றனர். இவர்களில் சாரா மிகப் பெரிய இனக் குழுவாகத் திகழ்கிறது. மேலும், கெப்பி, கானெம் – போர்னூ, டங்களே, ஃபுலானி மற்றும் கோரேன் எனப் பல இனக் குழுக்களாகப் பிரிந்து வாழ்கின்றனர்.
சாட் நாட்டின் முக்கிய மதங்களாக இசுலாமும், ரோமன் கத்தோலிக்கமும் விளங்குகின்றன. 1993 கணக்கெடுப்பின் படி, இசுலாமியர்கள் 54 விழுக்காடும், ரோமன் கத்தோலிக்கர்கள் 20 விழுக்காடும், கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் (Protestant) 14 விழுக்காடும், ஆன்மவாதிகள் 10 விழுக்காடும், இறை நம்பிக்கையற்றவர்கள் 2 விழுக்காடும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சற்றொப்ப 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக, சாடியன் மக்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்ற நாடோடிகளல்லாதவர்களாக விளங்குகின்றனர். 2003 ஆம் ஆண்டிலிருந்து சாடின் ஏற்றுமதி வணிகமாகக் கச்சா எண்ணெய் திகழ்கிறது. உலகின் ஊழலும், பஞ்சமும் நிறைந்த நாடுகளில் ஒன்றாக சாட் விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் மனித வளர்ச்சி தரவரிசைப் பட்டியலில், உலகின் 7 வது ஏழை நாடாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இங்கு வாழும் மக்களில் 80 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.